Thursday, July 23, 2020

உண்மை



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

 

வெண்முரசு நிறைவுற்றுவிட்டது.  நிறைந்த வெறுமை மகிழ்வும் துயரும் கலந்த ஒரு உணர்விலிருக்கிறேன்.  ஒரு தவத்தை செய்து நிறைத்திருக்கிறீர்கள்.  இதன் வரங்களை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வார்கள்.  மெல்ல ஆனால் உறுதியாக இது நிகழ்த்தவிருக்கும் பண்பாட்டுத் தாக்கத்தை உணர்கிறேன்.  மகத்தான எதுவும் தனக்கென நிகழ்த்தப்படுவதில்லை மகத்தான ஒன்றிற்காகவே நிகழ்த்தப்பெருகின்றன என்று மீண்டும் உணர்த்தி இருக்கிறீர்கள்.  உங்கள் திறனுக்கு நீங்கள் வேறொரு நிலை நின்றிருந்தால் பெற்றிருக்கக் கூடிய உலகியல் நலன்கள் என்னென்ன என்று வியக்கிறேன்.  அவ்வகையில் பாரதி, ஜெயகாந்தன் என அந்நிரையின் நிமிர்வை நிலைநிறுத்தினீர்கள்.  தமிழ் சினிமா தங்களுக்கு உதவிய பெருமை கொண்டது.  எவ்வகையிலும் கலைக்கு கலையே பெரும் கலைஞனுக்கு மற்றொரு கலையின் பெரும் கலைஞன் என, சிறு கலைஞன் என, கலை ரசிகன் என ஆற்றும் கடமை உள்ளது.  உள்ளார்ந்த நேர்மை அதுதரும் உண்மை கலைக்கு முன்நிபந்தனையாகிறது.  உலகியல் நோக்கில் தன் உண்மையிழப்பவன் கலை இழக்கிறான்.  உண்மையான கலை அங்கு நிகழ்வதில்லை.  இதை ஏன் கூறுகிறேன் என்றால் வெண்முரசு நிகழ்ந்த உள்ளத்தின் உண்மையை அதன் கலையை உணர்வதால்தான்.  வளரும் கலைஞர்கள் உளம்கொள வேண்டியது அது.

 

திருவள்ளுவரும் கம்பரும் இளங்கோவும் என பல நூற்றாண்டுகள் பின்னரும் வாசகர்கள் கொள்ளவிருக்கும் ஆசிரியரான தங்களுக்கு என் வணக்கங்கள்.

  

அன்புடன்

விக்ரம்

கோவை