Tuesday, July 28, 2020

வெண்முரசுடன்அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம் நலம்தானே?


16-07-20 இன்றுடன் வெண்முரசு இனிதே முடிவடைந்திருக்கிறது. எனக்கு இருவகை மனநிலைகள் ஏற்பட்டன. இரண்டு கன்றுக்கிரங்கும் ஓர் ஆ போல உணர்ந்தேன். இனிதே நல்லபடியாக நிறைவேறியது குறித்து மகிழ்ச்சியும், இனி அதுபோன்ற ஒன்றை எதிர்பாத்திருந்து அனுபவிக்கும் சுகம் கிடைக்காதே என்னும் வருத்தமும் ஏற்பட்டன. நீங்கள் ஜூன் 26-லேயே எழுதி முடித்திருந்தாலும் இன்று வெளியான பகுதியோடுதான் முறையாக நிறைவு பெறுகிறது. அதுவும் கண்ணன் பிள்ளைத் தமிழோடு நிறைவு பெறுவது முக்கியமாக மகிழ்ச்சி தருகின்ற ஒன்று. 


நான் முன்பே தஙகளுக்கு எழுதி இருந்தபடி இது மிகப்பெரிய உலகமகாசாதனை. இனி யாரும் செய்யமுடியாததும் கூட. இதன் அருகில் கூட வரலாம் என யாரும் எண்ணவே முடியாது.  ”போற்றுபவர் போற்றட்டும்; புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன். எவர் முன்னும் அஞ்சேன்” என்று சென்று கொண்டிருக்கும் தங்கள் பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல். 


இன்றைய பகுதியை வாசித்து முடித்துவிட்டுக் காலையில் மாடிக்குச்சென்று பதினைந்து நிமிடங்கள் வெண்முரசு படித்ததெல்லாம் அசை போட்டேன். முதற்கனலும், மழைப்பாடலும் வண்ணக் கனவும், கிராதமும், நீலமும், இன்னும் பலவும் வந்துவந்து மோதின. சிறு பாத்திரங்களிலிருந்து பெரும்பாத்திரங்கள் வரை வந்து பேசிவிட்டுப் போனார்கள். முறிப்பாக ஓநாய்ச் சகுனியை மறக்கவே முடியவில்லை. அதற்குப் பிறகுதான் இளைய யாதவர் வந்து நின்றார். 


அடுத்த பத்து நிமிடங்கள் தங்களுடன் எனக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டதென்று யோசித்தேன். முதன்முதல் பின்தொடரும் நிழலின் குரல் வாசித்து முடித்தவுடன் ஓர் உள்நாட்டு மடலில் அந்நூல் பற்றிய என் எண்ணங்களை எழுதினேன், அதற்குத் தங்களிடமிருந்து ஏழு பக்கங்கள் கொண்ட ஒரு நெடிய மடல் வந்தது. அப்பொழுதெல்லாம் தாங்கள் குறைந்தது ஐந்து பக்கங்கள் கடிதம் எழுதுவீர்கள். கணினிப் பயன்பாடு வராத காலம் என்பது முக்கியமானது.தொடர்ந்து மடல் மூலமாகவே நம் தொடர்பு நெருக்கமாயிற்று. அந்த மடல்களை இன்னும் பாதுகாப்பாக வைத்துள்ளேன். 


என் சங்க இலக்கியம் தொடர்பானக் கட்டுரைகளைத் தங்களுக்கு அனுப்ப அவற்றைச் சில இணைய இதழ்களில் வெளியிட்டீர்கள். சங்க இலக்கியக்கட்டுரைகளை 2002-ஆம் ஆண்டு நூலாக ”சிகரங்கள்” என்னும் தலைப்பில் நான் நூலாக வெளியிட்ட போது அதற்கு சுமார் 25 பக்கங்களில் அருமையான அணிந்துரைகள் அளித்தீர்கள். அதில் செவ்விலக்கியம் என்பதற்குத் தாங்கள் அளித்துள்ள விளக்கத்தை நான் அவ்வப்போது எடுத்துப் படித்து வருகிறேன். இக்காலக் கட்டத்தில்தான் கணினி அறிமுகம். எனக்கு அணிந்துரை எழுதத் தாமதமானது  தங்களின் கணினியின் ஒயரை எலி கடித்துப் போட்டுவிட்டது காரணமாயிற்று என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம். 


என் இரு மகன்களும் அப்போது மும்பையில் இருந்தார்கள். தாங்கள் குடும்பத்துடன் எல்லோரா பார்க்கச் சென்றபோது என் மகன் வீட்டிலேயே தங்கவும் ஏற்பாடுகள் செய்திருந்தேன். ஆனால் அப்போது சிறுவனான இருந்த அஜீதனுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்படப் பயணத்தைப் பாதியிலேயே தாங்கள் நிறுத்தி விட்டீர்கள் என்பது நினைவிருக்கலாம். நம் தொடர்பு நெருக்கமானபோது, உயிர்மை வெளியிட்ட தங்களின் சிறுகதைகள், குறுநாவல்கள் தொகுப்புகளின் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அதில் உரையாற்ற எனக்கு வாய்ப்பளீத்தீர்கள். அதற்காக மதுரை வந்தபோதுதான் விடுதி அறையில் முதன் முதலாகத் தங்களைச் சந்தித்தேன் அப்போது அறையில் மம்முது இருந்ததாக நினைவு. அவ்விழாவில் யாரோ வராததால் நான் ஒரு தொகுப்பை வெளியிட்டேன். தேவதேவன், சு.வேணுகோபால், இலக்குமண பெருமாள் ஆகியோர் அதில் கலந்து கொண்டனர். 


பிறகு சில ஆண்டுகள் நம் தொடர்பு விட்டுப் போயிற்று. காரணங்களே ஏதுமில்லை. என்னுடைய பணிச்சுமை, குடும்பப் பணிகள் காரணங்களாக இருக்கலாம். பிறகு புதுவையில் ஒரு தலித் இலக்கியக்கூட்டம் என்று எண்ணுகிறேன். தங்களுடன் அக்கூட்டதில் தங்களுடன் ஸ்டாலின் ராஜாங்கமும்  உரையாற்றியதாக  ஞாபகம். அப்போது முன்கூட்டியே வந்து விடுதியில்  தங்களைச் சந்தித்தது முதல் மீண்டும் தொடர்பு நெருக்கமானது. கோவையில் என் மகன் இருந்ததால் தாங்கள் கோவையில் பேசிய போதெல்லாம் வந்து கேட்டேன். குறிப்பாக 1000 ஆண்டுகளில் கவிதை [க்ருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடு] ஒரு நல்ல உரை. 


பிறகு அடிக்கடிப் புதுவையில் சந்தித்தோம்.  விஷ்ணுபுரம் விழாவின் போதெல்லாம் நான் மார்கழி திருப்பாவை உரையில் மாட்டிக்கொள்வதால் வர முடியவில்லை. ஆனாலும் ஒரே ஒரு தடவை கலந்து கொண்டுள்ளேன் [வண்ணதாசனுக்குக் கொடுத்தபோது] வெண்முரசில் சில முறைகள் ஐயங்கள் எழுப்பிய போது உடனேயே வந்த மின்னஞ்சலுக்குத் தாங்கள் விடை கொடுத்து வரும் அக்கறையை எண்ணி நான் வியந்திருக்கிறேன். [குறிப்பாகக் “கங்காளம்” பற்றியது] இவற்றையெல்லாம் இங்கே ஏன் விரிவாக எழுதுகிறேன் என்றால் நான் அவ்வப்போது இவற்றை அசைபோடுவதால்தான். வரும் சங்கு இதழில் வெண்முரசு நிறைவடந்தமை குறித்து ஒரு குறிப்பு எழுதிப் பாராட்டி என் நன்றியைக் காட்டி உள்ளேன் 


முடிவாகத் தங்களை நட்பாகப் பெற்றது நான் பெற்ற பெரும்பேறாகும். வளவ. துரையன் கடலூர் 93676 31228 பி.கு; தாங்கள் பல ஆண்டுகளுக்கு முன் எனக்கு எழுதிய கடிதங்களில் சிலவற்றை சங்கு இதழில் வெளியிட எண்ணுகிறேன். தங்களுக்கு ஒன்றும் ஆட்சேபம் இருக்காது என எண்ணுகிறேன் நன்றி


வளவ துரையன்