உலகில் உள்ள அனைத்தும் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. உயிரற்றப்பொருளும் பூமியின் சுழற்சியில் இணைந்து தனது பயணத்தை நிகழ்த்திக்கொள்கிறது. உயிருள்ளப்பொருள்கள் பூமியின் சுழற்சியோடும் தன்சுழற்சியோடும் இரண்டு பயணத்தை மேற்கொள்கிறது. உயிர் அற்றப்பொருள்களின் பயணம் அகம்புறம் என்ற பிரிவில்லா ஒருமையில் பிரபஞ்சத்தை தழுவிச்செல்கிறது. உயிருள்ள பொருள்களின் பயணம் புலன்களின் வழியாக அகம் புறம் சார்ந்து பிரபஞ்சத்தை ஊடுருவிச்செல்கிறது. மானிடப்பயணம் அகம் புறம் தாண்டியும் அதற்கு உட்பட்டும் எப்படி நிகழ்ந்தாலும் மெய்மையின் ஒளியில் தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது.
பயணம் மனிதனை மெய்மை பூக்கும் நடமாடும் கவிதை நூலாக செய்கிறது, அந்த கவிதையின்
வழியாக மனிதன் பிரபஞ்சத்தில் இருந்து பெறும் தேனை தனக்குள்ளும் உலகுக்குள்ளும் வழிந்தோடசெய்து
தன்னை தனித்தும் இணைத்தும் பொருள்கொள்ளச் செய்கிறான். மனிதன் காணும் பொருள்கள் நுண்பொருளாகவும்,
பருப்பொருளாகவும் இருவேறு உலகத்தை மனிதனிடம் தோற்றிவைத்து இயங்கவைக்கிறது. இந்த இருவேறு
உலகங்களும் தொலைவில் இருந்தாலும் அகத்தில் இணைந்தும், அருகில் இருந்தாலும் அகத்தில்
பிரிந்தும் ஆனால் ஒன்றை ஒன்று புறக்கணிக்காமல் இருப்பதால்மட்டுமே மானிட உலகம் முழுமை
அடைகிறது. எனவே முழுமையான ஒரு உலகத்தில் வாழ நினைக்கும் மானிடர் அனைவரும் பயணங்களின்
வழியாக தனது இருவேறு உலகங்களின் வடிவங்களை கண்டடைய முயல்கிறார்கள். பயணங்கள் வழியாகவே
அவர்கள் முழு உலகை தரிசிக்கிறார்கள். அந்த தரிசனத்தை மெய்மை என உலகுக்கு வழங்கி ஆனந்தம்
அடைகிறார்கள். அவர்கள் பெற்ற இன்பத்தை உலகமும் பெறுகிறது.
பயணம் என்றதுமே தடையும் கதவும் தவிர்க்கமுடியாதவையாகிவிடுகின்றன. தடைகள் தாண்டச்சொல்கின்றன
எனவே ஆற்றலை வேண்டி நிற்கின்றன. கதவுகள் திறக்க காத்திருக்கின்றன எனவே அறிவை
யாசிக்கின்றன. பயணம் செய்வதால் தோன்றும்
இன்பம் அனுபவம் அறிவாய் ஆற்றலாய் மானிட அகத்தில் கனிகின்றன. காலத்தால் இடத்தால் சூழ்நிலையால்
மாற்றப்படும் பயணங்கள் வரலாறுகளை திசைதிருப்புகின்றன. பயணத்தால் மானிடன் வளர்கின்றான்.
வளரும் மானிடனால் உலகம் மேன்மை பெறுகிறது. மேன்மை பெரும் உலகத்தால் புத்தொளிப்பெற்ற
புதிய தலைமுறை பிறக்கிறது.
மானிடர் கண்ட மெய்மைகள் கலையாய்
சொல்லாய் அவைகள் விரிக்கும் பொருளாகி, பொருள்நிறைந்த படிமமாகி, படிமங்கள் படிந்து படிந்து
குவிந்து தொண்மமாகி, தொண்மங்கள் உருவங்கள் ஆகி, உருவங்கள் மானிடவாழ்வில் அடிமுடியில்லா இறவா பிறவா
முடிவிலியாகி மானிடரை நுண்துகளாக்கவிடுகின்றன. நுண்துகளாகும் மானிடன் முடிவிலியுடன்
தன்னை இணைத்துக்கொள்ள பேருருக்கொள்ள பயணிக்கின்றான்.
பயணங்கள் வழியாக மனிதன் மண்ணை விண்ணை அறிக்கின்றான். மண்ணை விண்ணை அறியும் வழியாக முடிவிலியை அறிகின்றான். முடிவிலியை அறியும் கணம்தோறும்
தன்னையே அறிகின்றான். தன்னையும் முடிவிலி என்று உணர்கிறான்.கடலில் விழுந்த மழைத்துளியென
கடலாகிவிடுகிறான்.
ஜெயமோகன் எழுதும் மகாபாரதத்தின் நவினநாவல் வெண்முரசு பன்னிரண்டாவது நூல் கிராதத்தில்
அர்ஜுனன் நடத்தும் திசைகளின் பயணத்தை விவரிக்கின்றார். அர்ஜுனன் பயணத்தை நடந்தகதையாக
கூறும் ஆசிரியர் சண்டன் என்ற சூதனின் பயணத்தில் இணையும் வைசம்பாயணன், ஜைமினி, சுமந்து,
பைலன்,உக்கிரசிரவஸ் என்பவர்களின் நிகழ்கால பயணத்தின் வாழ்க்கையை நடக்கும் பயணமாக வைக்கிறார்.
அர்ஜுனனின் நடந்த பயணம், சண்டனின் நடக்கும்பயணம் என்று இந்த நாவலை இரண்டு பயணங்களாகப்பிரித்துக்கொண்டால்
அர்ஜுனன் பயணம் உள்ளமாகவும் சண்டன் பயணம் உடலாகவும் கிராதம் நாவலை வடிவம் கொள்ளச்செய்கிறது.
இதையே இன்னும் விரித்துப்பார்த்தால் அர்ஜுனன் பயணம் விண்ணாகவும், சண்டன்பயணம் புவியாகவும்
இருந்து கிராதத்தை ஒரு பிரபஞ்சமாக கட்டமைக்க முயன்று வெல்கிறது.
நாவலின் அகப்பயணமாக அமையும் அர்ஜுன உலாவை விமானமாகவும்,, புறப்பயணமாக அமைந்த
சண்டனின் பயணத்தை பீடமாகவும் கொண்டு கட்டிஎழுப்பப்படும் ஆயிரங்கால் மண்டபத்தின் வாயிலாக பாசுபதம் பைரவம் மாவிரதம்
வாமனம் காளமுகம் கபாலிகம் என்னும் அறுசிவசமயம் அமைகின்றது. நான்குதிசைகளாகிய தென்திசை
யமலோகம் வடதிசை குபேரபுரி மேற்குதிசை
வருணலோகம் கீழ்திசை இந்திரலோகம் மற்றும் தேவர் அசுரர் என்ற இருமையும் அவற்றின் படிமங்களும்
தொண்மங்களும் தூண்களாக அமைய, மாதொருபாகன், அடிமுடியில்லா அழல்வண்ணன், கைலாயம் என்பவை
மண்டபத்தின் அலங்கார தீபமாக அமைய நாவல் பிரபஞ்ச ஆடலை அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் நடத்தி
தரிசனம் காட்டுகின்றது.
நிகழ்காலத்தில் பயணம் செய்யும் சண்டனுடன் கூடிய நான்வர் பயணம். கதைகாலத்தில் பயணம் செய்யும்
அர்ஜுனனின் திசைவென்ற பயணம் இந்த இரண்டு பயணங்களுக்கும் இடையில் நுழைந்து பயணத்தை ஒரு
ரத்தினக்கம்பளமாகப்பின்னிச்செல்லும் தொண்மங்களின் பயணம் என்று நாவல் மூன்று பயணங்களைக்கொண்டு
தன்னை கட்டமைத்து எழுப்பி உள்ளது.
உயிர்கள் என்னும் மத்தை சுழலவிடும் நாணாக இன்பம் துன்பம் உள்ளன. இன்பத்துன்ப
நாணின் பிடியில் சுற்றப்பட்டு சுழலும் உயிர்கள் மெய்மையை அறிவதன்மூலமாகவே துயரத்தை
கடக்கின்றன. மெய்மையை அறியும்முன் இன்பமும் ஒரு துன்பமே. துன்பமும் ஒரு இன்பமே. எனவே
உயிர்கள் குறிப்பாக மானிட உயிர்கள் அறிந்துக்கடப்பதற்காக விழைவுக்கொள்கின்றன அந்த விழைவே
அவர்களை பயணப்படவைக்கின்றன. பயணங்கள் என்னும்போது மானிடன் மண்ணுக்காக பொன்னுக்காக பெண்ணுக்காக
அறிவுக்காக பயணப்படுகின்றான். பயணம் எதற்காக இருந்தாலும் பயணத்தின் அனைத்து துகள்களும் வாழ்க்கையின் மகரந்தங்களே.
கோவலனுக்காகத்தான் கண்ணகி மதுரைக்குப்பயணப்பட்டால் ஆனால் கோவலனுக்குப்பின்பு கண்ணகியின்
பயணம் சரித்திரத்தையே மாற்றிவிட்டது. எனவே பயணங்கள் பயணங்கள் வழியாகவே கிளைத்து கிளைத்து
தழைத்து பூத்துக்கனிகின்றன.
கிராதம் நாவலில் சண்டன் தந்திரமார்க்கமாகிய சிவத்தை அடைதல் பொருளாகவும், புராணமார்க்கமாகிய
வைணவத்தை பாடுபொருளாகவும், வேதமார்க்கமாகிய வேதாந்தத்தை அனுபவபொருளாகவும் கண்டடைய வடக்கிருந்து
தெற்குநோக்கி ஹாளஹஸ்திவரை நடக்கிறான். தந்திரம் புராணம் வேதம் மூன்றும்
இணையும் ஒரு முக்கோணமாய் நின்று வாழ்க்கையை நிறபிரிகைச்செய்துக்காட்டுகின்றான். மும்முனைவாயில்
கொண்டு இயங்கும் சண்டன் புதிய அறிதலைத்தேடி பயணம் தொடங்கும் வைசம்பாயணன் பைலன் சுமந்து
ஜைமினிக்கு பாதையாகி பயணம் செய்ய ஊக்கம் அளிக்கிறான். தனது முக்கோணத்தில் நிறபிரிகை
அடையும் வண்ணங்களை இந்தபுதியவர்கள் கண்டு களிப்படைய அறிந்துக்கொள்ள தன் பயணத்தில் இழுத்துப்போகின்றான்.
ஏன் பயணம் செய்யவேண்டும்? பயணம் செய்யும் பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணங்கள்
இருக்கிறது, ஒவ்வொரு காரணமும் ஒன்றுபோல் இல்லை. ஒன்றுபோல் இல்லை என்றாலும் அவற்றின்
உச்சி என்பது ஒரே இலட்சியபுள்ளியில்தான் முடிகிறது. மெய்மை என்றும் புள்ளியில் முடிகிறது. எங்கு செல்கிறோம் ஏன்
செல்கிறோம் என்பதை அறியாமலே தன் எழுச்சியால் கிளம்பும் வைசம்பாயணன் தான் வளர்ந்து பேருருகொள்வதற்காக
கிளம்புகின்றான். பசியும் விடாயும் காமமும்போல
விழைவும் மானிடன் முதல் இயல்பு, அதை அடைவதே இன்பம் அவ்வின்பமே மானிட வாழ்க்கையின் பொருள்
என்பதை அறிய பைலன் பயணம்செய்கிறான்.
சாமவேதமரபில் இருந்து வரும் ஜைமினி வேதம் சுட்டும் மெய்மையால் ஒளியால் ஆனது
உலகு என்று காணப்பயணம் செய்கிறான். ஒளிக்கு அப்பால் உள்ள இருளும் சேர்ந்தே முழு வேதம்
என்பதை அவனுக்கு பயணம் நிருபிக்கிறது. காவிங்கள் கற்கும் சுமந்து
மகாவியாசரை குருவாக அடைவதையே குறிக்கோளாகக்கொண்டு பயணப்படுகின்றான்.
கிராதத்தில் நிகழ்காலத்தில் பயணிக்கும் சண்டன் பைலன் சுமந்து ஜைமினி வைசம்பாயணன்
உடன் கல்வியை ஞானத்தைப்பெறுவதற்காக அன்னைமடி குழந்தையான உக்கிரசிரவஸும் வந்து சேர்கிறான்.
வேறுவேறு காரணங்களோடு ஒரே திசையில் பயணிக்கும் இந்த அறுவரும் தூரத்தை கடப்பதற்கும்
உள்ளத்தை திறப்பதற்கும் அறிவை தீட்டிக்கொள்வதற்கும் அர்ஜுனன் திசைதெய்வங்களை வென்று
அஸ்திரம் பெற்ற கதை நாவலில் கூறப்படுகிறது. இதனால் நாவல் ஒரே நேரத்தில் இரண்டு காலக்கட்டத்தில்
நடந்துசெல்கிறது. இரண்டுவித வாழ்க்கை இருவேறுகாலகட்ட மனிதர்கள் இருவேறுப்பட்ட வணிகர்கள்
இருவேறு வண்ணங்கள் கொண்ட காலநிலைகள் பல்வேறுப்பட்ட பழக்கவழக்கங்கள் மண்ணுக்கு ஏற்ற
பண்பாடுகள் வாழ்க்கைக்கு எற்ற கலாச்சாரங்கள் ஊடுருவி நாவல் நெய்யப்படுகிறது. நாவல்
முழுவதும் பயணம் செய்துக்கொண்டே இருக்கும் பல்வேறு நாட்டுவணிகர்கள்வழியாக உலகைச்சுற்றிய கலாச்சார
பயணம் ஒன்று நாவலில் காட்சிப்படுத்தப்படுகி்ன்றது. அதன் வழியாக மண்ணை விண்ணை மனிதனை
பருவநிலையை கண்டு அனுபவித்த ஆனந்தம் நிறைகிறது.
உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடம் விழையும் விழைவை அடைய ஆற்றல் புகழின் பேருருக்கொள்ள
வீரம் அழகிய மனைவி அருமை குழந்தை அன்புள்ள சொந்தம் நல்ல நண்பன் என்று வாழும் அர்ஜுனன்
ஏன் பயணம் செய்தான் என்பதை அர்ஜுனன் கதையை நாவலில் பாடும் சண்டன் பின்வரும் சொற்களில்
ரிவிக்கின்றான். “கிளம்பிச் செல்வதென்பது
எப்போதுமே அர்ஜுனனுக்கு இனிதானது. வீரர்கள் அனைவருக்கும் அது உவகை அளிப்பது. கிளம்பிச்செல்லும்
வீரன் தன் முதல் காலடி முதல் வளரத்தொடங்குகிறான். முதல் மூச்சை இழுத்து நெஞ்சுள் நிறைக்கையில்
அவன் அறியும் ஓர் உண்மை உண்டு, வீரன் என்பவன் கடந்துசெல்பவன். வீரன் கடந்துசெல்வது
தன்னைத்தான். தன் கடந்தகாலம் மீது மிதித்து அவன் மேலேறுகிறான். அவனை அழைத்துச்செல்லும்
இலக்கு எப்போதும் அடிவானில் ஒளியுடன் நின்றிருக்கிறது. அது அவனை வளர்க்கிறது. அவனை
அள்ளி தன்னுடன் சேர்த்துக்கொள்கிறது.” .
பயணம் செய்யும் அனைவரும் எதன் பொருட்டு பயணம் செய்தாலும் பயணம் செய்யச்செய்ய
அவர்கள் தங்களை வீரர்கள் என்று ஆக்கிக்கொள்கிறார்கள் அல்லது உலகுக்கு அவர்கள் வீரர்கள்
ஆகிறார்கள். அந்த வீரமே அவர்களை மீண்டும் மீண்டும் பயணம் செய்ய தூண்டுகின்றது.
சந்தியையின் கணவன் சித்திரசேனனின்
உயிரைக்காக்க சந்தியையின் வேண்டுதலுக்காக அவளுக்கு அளித்த வரத்திற்காக அர்ஜுனன் தனது
நண்பன் இளையயாதவன் கண்ணனுடன் போர் செய்ய நேரிடுகிறது. இது காலம் செய்யும் பயணம். அர்ஜுனன்
அந்தபோரில் நண்பனின் மறுமுகத்தைக்காண்கின்றான். அங்கு அர்ஜுனனுக்கு அகமும் முகமும்
இரண்டாக பிரிந்து நிற்கும் ஒரு கணம் காணக்கிடைக்கிறது. அது ஏன்? அதற்கு அப்பால் செல்வது
எப்படி? அகமும் புறமும் நண்பனுக்கு நிகராக தன்னை வளர்த்துக்கொள்ளவது எவ்வாறு என்று
தனது மெய்மை பயணத்தை அர்ஜுனன் தொடங்குகின்றான் அர்ஜுனன் நான்கு திசைகளிலும்
நடந்து நான்குதிசை தெய்வங்களையும் வென்று அஸ்திரம் பெறுகின்றான்.
அஸ்திரம் பெறுதல் என்பது ஒரு ஆயுதத்தை கொலைக்கருவியைப் பெற்றுவருவதல்ல ஒரு மெய்மையை
கண்டு அடைதல் என்பதாகும் என்று கிராதம் காட்டுகின்றது. இந்த உண்மையை ஆசிரியர் ஜெயமோகன்,
அர்ஜுனன் இடம் அர்ஜுனன் என்பதை அறியாமலே வணிகப்பயணி சொல்வதாக அமைத்து உள்ளது அழகு.
நம் மனம்தான் இந்த உலகாக எத்தனை விதத்தில்
நம்மிடம் கதைத்துக்கொண்டு உறவாடிக்கொண்டு வருகின்றது. “வில் என்பது உள்ளம்.
அம்பென்பது எண்ணம். கூரிய அம்பென்பது ஆற்றல்கொண்ட எண்ணம். மாபெரும் அம்புகள் மெய்யறிதல்களேயாகும்” என்றார் கருணன். இறுகியும் வளைந்தும் நாணொலித்தும்
தளர்ந்தும் அம்புகளை ஏவிக்கொண்டே இருக்கும் உள்ளம் இடைவிடாது வானத்துடன் உரையாடிக்கொண்டிருக்கிறது
என்பார்கள் கவிஞர்கள்.”
நிகும்பன் “அவர் மெய்யறிந்து முனிவராகவே மீண்டு வருவார்” என்றான்
தென்திசைகடவுளாகிய யமனைவெல்ல யமலோகம் செல்லும் அர்ஜுனன் இறந்த தனது முன்னோர்களை
உயிரோடு காண்கின்றான். இறந்தவர்கள் அனைவரும் தங்கள் ஆசையால்
சுயநலத்தால் காமத்தால் முதிரா எண்ணங்களால் வாழ்ந்துக்கொண்டு உடலால் மட்டுமே இறந்து இருக்கிறார்கள்.
தங்கள் ஆசையால் சுயநலத்தால் முதிரா எண்ணங்களால் காமத்தால் மீளா ஆழ்நரகில் வாழ்ந்துக்கொண்டே
இருக்கிறார்கள் என்பதை நாவல் காட்டும்போது ஆசை சுயநலம் காமம் முதிரா எண்ணம் மனிதன்
முன் யமலோகமாக இருப்பதை அறியாமல் பெரும் இருளில் மனிதன் வாழம் வாழ்க்கையை எண்ணி விழித்துக்கொள்ளச்
சொல்லாமல் சொல்கிறது. கிராதம் நாவலில் யமலோகத்தில் அர்ஜுனன் உடன் நடக்கும்போது யமபயம்
ஏற்படுவதற்கு பதிலாக யமலோகத்தில் மூழ்கியிருக்கும் மனிதர்களைப்பார்த்து யமன்மீதும்
அவனின் தர்மஉணர்வின்மீதும் நெகிழ்ந்து தோயும் நெஞ்சத்தால் மானிட உறவுகள்மீதுதான் பயம்
ஏற்படுகிறது.
ஜாதவேதனின் இறந்த குழந்தையின் உயிரை திருப்பிக்கொண்டுவர யமலோகம் செல்லும் அர்ஜுனன்
அந்த உயிருக்கு தனது தனது குருதியை ஊனை நிகர்வைக்கும் தியாகத்தால் யமலோக தராசுத்தட்டை
சமன்செய்கிறான். தியாகத்தால் மட்டுமே இறப்பை வெல்லமுடியும் என்று காட்டி வெளியேறுகின்றான்.
யமலோகம் பெரும் தியாகங்களை கேட்கவில்லை மிகமிக எளிய தியாகங்களை கேட்கிறது. அந்த
எளிய தியாகங்களை செய்து ஒருஉயிர் யமலோகத்தைவிட்டு வெளியேறாதா? என்று யமன் பார்த்துக்கொண்டு
உள்ளனான். எளியதியாகங்கள் என்றாலும் அவை மானிட பலகீனத்தின் முன்பு மாபெரும் தியாகங்கள்
என்று நாவல் காட்டுகின்றது. சுயநலதியாகம் செய்யமுடியாமல் இன்னும் யமலோகத்தில் சேற்றில்
தவளையாக இருக்கும் துஷ்யந்தன் ஒரு உதாரணம்.
சுயநலச்சேற்றில் தவளையாக வாழும் அந்த வாழ்க்கை அவனுக்கு ஒரு சுகானந்தம். இப்படி ஒவ்வொரு
குருகுல முன்னோர்களும் யமலோகத்தில் சின்னத்தியாகம் செய்யமுடியாமல் யமலோகத்தின் பெரும்
இருளில் மூழ்கித்தவிக்கிறார்கள். யமலோக இருளுக்குள் இந்த சின்னச்சின்ன தியாகங்கள் செய்யமுடியாமல்
பெரும் நரகத்தில் உழலும் மனிதர்களை நாவல் நமக்கு காட்டும்போது அதில் நாம் யார் என்று
தேடாமல் இருக்கமுடியவில்லை. .
வடதிசைக்கடவுளாகிய குபேரனை வெல்லச்செல்லும் அர்ஜுனன் பொன்நகரத்தின் மின்னும் இருளைப்பார்க்க
வைக்கிறான். பொன்னரசி புகழரசி இருவருடன் வீற்றிருக்கும் பொன்புரியின் அரசன் குபேரன்
வளராமையை, உணராமையை தெளியாமையை கோழைதனத்தை கஞ்சதனத்தை பற்றில்லாமையால் வென்று செல்கிறான்
அர்ஜுனன். பொன்புரிக்குள் நுழைந்து அகப்பட்டவர்கள் பொன்னில்லாதவர்கள் இல்லை, இருப்பவர்கள்
என்று உலகம் எண்ணும் மாபெரும் பெரியவர்கள் ஆனால் தன்நெஞ்சம் தன்வசம் இல்லாதவர்கள் அதனால் கண்ணளவே உள்ள சிறியர்வகள்.
கண்களால் மட்டும் வாழ்கின்றவர்கள். அதுவே அவர்களின் தவம் என எண்ணிவாழும் கைகால் குறைந்த
உடல்பெருத்த குழந்தைகள். //மலர்களும்
தளிர்களும் கொடிகளுடன் பின்னிப் பிணைந்து உருவாகியிருந்த அதன் நுண்ணிய சிற்பச் செதுக்குகளுக்குள்
பல்லாயிரம் கந்தர்வர்களும் கின்னரர்களும் முனிவரும் அரசரும் பெருவணிகரும் தெளிந்தும்
மறைந்தும் முகம் காட்டினர். நோக்க நோக்க அவ்விழிகள் அனைத்தும் உயிர் கொண்டன. அறியா
பெருங்களிப்பொன்றில் மூழ்கி அவை அமைந்திருந்தன. யோகத்தில் அமர்ந்த முனிவர்களுக்கு நிகர் என்று அவன் எண்ணிக்கொண்டான்.//
பொன்புரி யாரையும் சிறைவைத்திருக்கவில்லை, பொன்புரியில் சிறையிருப்பவர்கள் அனைவரும்
தானே அதில் சிறையிருக்க ஒட்டிக்கொண்டவர்கள். அந்த சிறையில் இருந்துவிடுபட சிறையிருக்கிறோம்
என்று நினைத்தாலே போதுமானது அதுதான் அவர்களால் முடியாது. கிராதம் அவர்களை யோகத்தில்
அமர்ந்த முனிவருக்கு நிகர் என்கிறது. சிறைபடுதல் இத்தனை உக்கிரமானதா? வேண்டாமையால்
பொன்புரியை தனக்கு பின்னால் வேண்டிவரவைக்கிறான் கிராதக அர்ஜுனன்.
மேல்திசையாகிய வருணபுரியில் மெய்மை நெளிந்து அலையடிக்கிறது. நெளியும் மெய்மையால்
ஒன்று மூன்றென தெரிகிறது. கல்லின்பீடத்தில் ஒளியின் விழியோடு அது முதல் தந்தை என்று
அமர்ந்து இருக்கிறது. அது சென்னிற அவைக்கூடத்தில் முதல் தந்தையின் மைந்தன் அரசன் என்று
எழுந்துவருகின்றது. அதுவே வெண்ணிற ஒளி மேடையில் பொன்னின் உடலோடு முதல்தந்தையின் பேரன்
என்று வந்து அமர்கிறது. அதுவே தந்தையாய் அறம் ஆற்றுகிறது. அதுவே அரசானாய் குருதியில்
குளித்து அறம் செய்கிறது. அதுவே நூல் நூற்று அறம்சூடி பொன்னுடல் பெற்று அலைவிரிந்து
உலகை சூழ்ந்து நிற்கிறது. மூன்றும் ஒன்றே என்று மூன்றுக்கும் ஒரே சொல்லால் வாழ்த்து
உரைக்கும் அர்ஜுனன் நெளியும் வருணபுரியின் அலையடிக்கும் மெய்மையை காட்டுகின்றான்.
இந்திரன் என்பது விழைவின் ஒரு உச்சம். ஆற்றலோடு போர்செய்து ஆற்றலைவென்று மேல்
அமரும் போகத்தின் இருப்பிடம். போகமே இந்திரனாய் ஆற்றலே விரித்திரனாய் கதையில் ஒருவருக்கு
ஒருவர் நிகர் என முட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வெல்பவனே இந்திரன். ஆற்றல் வெல்லும்போது
அவன் அசுரேந்திரன். போகம் வெல்லும்போது அது தேவேந்திரன். அசுரேந்திரன் வெல்வதால் ஆற்றல்
மந்தநிலையடைகிறான். தேவேந்திரன் தோற்கும்போது மதிமயக்கநிலையை அடைகிறான். ஆற்றல் எழுந்து
சுகம்கான உட்காரும்போது மந்தநிலையும், போகம் எழுந்து சுகத்தில் திளைக்கும்போது மயக்கநிலையும்
உருவாக்கும் என்று கதைக்காட்டுகின்றது.
ஆற்றலும் போகமும் விரித்திரனாகவும், இந்திரனாகவும் தோன்றி நிற்கும் நிலையில்
இந்திராணி ஒருவராகவே இருப்பது மானிட உள்உணர்வுகளின் சக்தி வெளிப்பாடு என கதை நம்மை
இனம்காண சொல்லி விழித்துக்கொள்ள சொல்கிறது.
அசுரகுணமும், தேவகுணமும் நமது சக்தியை என்ன செய்யும் என்பதை இந்திராணி மூலம்
கதை படம்பிடித்து காட்டுகிறது. ஆற்றலின் உச்சத்தில் மயங்கியோ அல்லது மந்தமாகியோ நிற்கும்போது மானிட சக்தியே இந்திராணியாகி மானிடனிடம் மன்றாடுவதுபோல் கதை பிரித்தறிந்து செல்படு
என்கிறது.
பிள்ளைப்பாசத்தால் விரித்திரன் தோன்றுகின்றான், கர்மவல்லமையால் விரித்திரன் தோன்றுகின்றான்.
வஞ்சத்தால் விரித்திரன் தோன்றுகின்றான் வடிவற்ற விழியின்மையால் விரித்திரன் தோன்றுகின்றான்.
விரித்திரனை தோற்கடிப்பதற்காகவே இந்திரன் தோன்றுகின்றான். விரித்திரனை தோற்கடிப்பது
ஒன்றே விதி என்பதால் விரித்திரனை தோற்கடிக்க இந்திரன் எந்தவிதியையும் கைவிடுகின்றான்.
இந்த இந்திரனை வென்றுதான் கீழ்திசையாகிய இந்திரபுரிக்கு செல்லும் அர்ஜுனன் மகாவஜ்ரம்
என்னும் அஸ்திரத்தை பரிசாகப்பெருகின்றான். மகனாக சென்று மகளாகி இந்திரனை வெல்கிறான்
என்று கதைக்காட்டும் இடத்தில் விதிமீறுபவனை வெல்ல விதியே விதிமீறி ஒரு வழிதருவதுபோல்
உள்ளது.
முன்னோர்கள் வாழும் தென்திசை என்றும், செல்வத்தின் அதிபதி வீற்றிருக்கும் வடதிசை
என்றும், பெருங்கடல் சூழ்ந்த மேல்திசை என்றும், இந்திரவில் எழும் கீழ்திசை என்றும்
நாம் காணும் திசைகளின் உலகுக்குள் கதை சென்று புதிய உலகைப்படைக்கிறது. ஒவ்வொரு உலகின்
இருமைகளை, அவற்றின் உயரத்தின் கீழ்மையை, கீழ்மையின் உயரத்தை, ஆழத்தின் இருட்டை, இருட்டின்
வெளிச்சத்தை கதை கண்டுக்கொள்ளவைக்கிறது.
கிராதம் நாவல் சண்டனின் பயணம் அர்ஜுனன் பயணம் என்று காட்டிவரும்போதே நாவலின்
மையமாகிய சிவசமயத்தை காட்ட பைரவசிவம் மகாவிரதசிவம் வாமனசிவம் காளமுகசிவம் கபாலிகசிவம்
என்று காட்டிவந்து பாசுபதசிவத்தில் அர்ஜுனன் பாசுபத அஸ்திரம் பெருவைதைக்காட்டி முழுமைக்கொள்கிறது.
பாசுபதம் பெறுவதை திசைகளின் மையம் என்று நாவல் மெய்மையின் கூர்மையில் பயணத்தை நிறுத்துகின்றது.
பாசுபத அஸ்திரம் பெரும் இடத்தில் நாவல் செல்லும்போது அர்ஜுனன் சந்திக்கும்
காட்டாளன் அவன் மனைவி காளி மூத்தமகன் கொம்பன் இளைய மகன் குமரன் வழிவழியாக வரும் தொண்மங்களின்
இன்றைய சிவக்குடும்பமாக வந்து நிற்கின்றார்கள் என்று கதைக்காட்டுகின்றது. அவர்களை முழுது
அறிந்தவர்க்ள் எரியன் சடையன் பேயன் என்னும் மூவர்கள் என்று கதைச்சொல்லும்போது சிவத்தை
அறிய முழுதறியும் தவமார்க்கமும் யோகமார்க்கமும் வேள்விமார்க்கமும் படிமங்களாகி கதையை
நிறைவடைய வைக்கின்றன.
பாசுபதம் என்பது கைலையின் சிறுகூழாங்கல் என்று கதை தன்னை முன்னிலைப்படுத்தும்போது
வெளிப்படுகின்றது கிராதத்தின் மெய்யறியும் விழிகள்.
சாலையோர ஜல்லிக்குவியலில் அமர்ந்த தட்டாம் பூச்சியை ,
பிடிக்கமுடியவில்லை ஆதியால்.
ஜல்லிக்கல் ஒன்றை எடுத்து, உற்றுப்பார்த்த சிறிது நேரத்தில்
'ஹிமாலயாஸ்' என்று என்னிடம் நீட்டினான்.
நான்குவயதுக் கையில் இருக்கும்
இமயவரம்பின் தொடர்ச்சி மீது
எப்படி ஏறுவது என்ற மலைப்பு எனக்கு.-கல்யாண்ஜி
சாலையில் கடக்கும் ஜல்லிக்கல்லை இமயவரம்பின் தொடர்ச்சி என்று கல்யாண்ஜிப்பார்க்கிறார்.
ஜெயமோகன் கைலாயத்தின் விதையாக சிறுகூழாங்கல்லைப்பார்க்கிறார். இதை அறிதலும் அதை அறிதலும்
இரண்டு அல்ல ஒன்று என்பதை உணர்தல் மூலம் அதுவாக ஆதல்மூலம் அறியவேண்டும் என்பதை காட்டுகின்றார்.
மாதொருபாகன் கதையும் அழல்உருவ அண்ணல்கதையும் தனக்குள் தான் சமன்செய்து இந்த உண்மையை
முழங்குகின்றது.
கிராத நாவலின் பயணத்தில் மெய்அறிதல் மெய்தெளிதல் மெய்உணர்தல் மெய்யாக
ஆதல் என்பதை கதை தனக்குள்போடும் வண்ணக்கோலங்கள் வழியாக அழியாதகோலங்களாகிறது.
நல்லப்பயணம் என்பது தூரமான இடங்களின்மீது உள்ள மண்மீது மட்டும் நடப்பது இல்லை,
வாழ்வின்மீது தவழ்வது கலாச்சாரத்தின்மீது நடப்பது அறிவின்மீது ஓடுவது புரணங்களின்மீது
பறப்பது, தொண்மங்கள்மீது ஏறுவது. கிராதம்நாவல் இதை எல்லாம் செய்து வாசகன் மனதில் நடனமிடுகிறது.
அது வாழ்க வளர்க.
“உறவுகளிலிருந்து வெட்டிக்கொள்ளாமல் அறிவுப்பயணம் இல்லை. அது எப்போதேனும் நிகழ்ந்தே
ஆகவேண்டும்” என்றான் சண்டன் அது உக்கிரனுக்காக மட்டும்
சொல்லப்பட்டது இல்லை. உட்கார்ந்து இருப்பவர் கவனம் கொள்க பயணியர் புன்னகைக் கொள்க.