Thursday, July 23, 2020

பெருங்கனவு



அன்புள்ள ஜெ,

நவீனத் தமிழிலக்கியத்தின் பெருங்கனவு இன்று முடிந்தது. 

2015ல் படிக்க ஆரம்பித்தேன். வெண்முகில் நகரத்தின் ஓர் அத்தியாயத்தை முதன்முதலில் மேலோட்டமாக வாசித்தபோது சாத்யகியும் இளைய யாதவனும் யார் எனத் தெரியாத நிலை. யாதவனை ஊகிக்க முடிந்தாலும், சாத்யகியை விக்கிப்பீடியா மூலம்தான் கண்டடைய முடிந்தது. அதுவரை படித்த சோட்டா மகாபாரதங்களும், பார்த்த நாடகங்களும் தத்தம் போதமைகளைக் காட்டிய நாள். ஆயினும் அன்று வெண்முரசைப் படிக்க ஆரம்பிக்கவில்லை. கொஞ்சம் திராவிட முற்போக்கு மனநிலை வேறு இருந்தது. உங்களது அறம் சிறுகதையை மட்டும் அப்போது படித்திருந்தேன். பிடித்துமிருந்தது. ஆனால் அதை எழுதியது நீங்கள் என்று தெரியாது - பெயரைக் கவனிக்கவில்லை. தமிழின் தலைசிறந்த இலக்கியவாதிகளாக எனக்குச் சொல்லப்பட்ட கல்கியையும் நா. பார்த்தசாரதியையும் கிட்டத்தட்ட முழுதாக வாசித்திருந்தேன். அவர்களின் கதைகளில் ஏதோ ஒன்று, இன்னும் சிறந்த எழுத்தாளர்களுக்கான தேடலை விதைத்தது. அடுத்து நான் கண்டடைந்த மாணிக்கங்கள் சுஜாதாவும் சாண்டில்யனும். ஆளுக்குத் தலா ஒரு புத்தகம். தமிழ் இலக்கியமே வீண் என்னும் மகத்தான கண்டுபிடிப்பில் மகிழ்ந்திருந்த நாட்கள். அறியாமை தரும் தன்னம்பிக்கை எவ்வளவு அபாரமானது. நல்லவேளையாக ஓரிரு வாரங்களில் ஒரு வசைக்குறிப்பின் வழியாக, வெண்முகில் நகரத்தின் பாண்டவர்கள் திருதராஷ்டிரன் சந்திப்பை வாசிக்க நேர்ந்தது. இதுவரை படித்த புனைவுகளில் விடுபட்ட ஏதோ ஒன்றை, சித்தரிப்பின் நேர்மை என்று பின்னொரு நாள் உணர்ந்ததை, அன்று கண்டுகொண்டேன்.

அன்று துவங்கிய பயணம் இன்று முடிவடைகிறது. அன்றிலிருந்து இன்றுவரை ஒருநாள் கூட வெண்முரசின் சொற்களை வாசிக்காது முடிந்ததில்லை. பெரும்பாலான இரவுகளில் பன்னிரண்டு மணிக்காக காத்திருந்திருக்கிறேன். பன்னிரண்டு வரை மெல்லிய எதிர்பார்ப்பு என்றால், பின்பு இன்னும் இனிய தொல்லை. துயரம் நுரைக்கும் அத்தியாயங்கள் வெளியான இரவுகள்தான் இன்று மேலும் இனியவையாகத் தெரிகின்றன. குறைந்தது அவை விரைவிலாவது தூங்க வைத்துவிடும். நகைச்சுவை அத்தியாயங்களோ இன்னும் கொஞ்சம் விழிப்பைக் கோருபவை. உளம் எழுச்சி கொள்ள வைக்கும் அத்தியாயங்கள் இரண்டு, மூன்று மணிவரை தூக்கத்தை தின்று கொண்டிருப்பவை. அதிலும் சில முழுஇரவும் தூங்க விடாதவை. இதுவரை வெண்முரசின் கனவுகளை மட்டுமே பெற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுள் விரியாமல் போன அதன் படிமங்கள் ஏராளம். நான் அணுகாத அதன் தத்துவச் சிக்கல்களோ இன்னும் அங்கேயே உள்ளது. நீங்கள் எழுதி முடித்து இக்காவியத்தைக்  கடந்து செல்லலாம் ஜெ. எனக்கு வாழ்நாள் முழுக்க உடன்வருவதாக, ஒவ்வொரு நாளும் மீண்டும் வாசிக்கையில் உடன் வளர்வதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

*
அன்பு ஜெ, காலையில் இருந்து எழுதி எழுதி அழித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு எழுதினாலும் நினைப்பதை முற்றிலும் சொல்ல முடியாதென தோன்றுகிறது. நன்றி ஜெ. ஐந்தாண்டுகளாக என் கனவுகளை ஒளிரச் செய்தமைக்கு. 

அன்புடன்,
செந்தில்நாதன்