Monday, July 20, 2020

ஆழ்வார் சொல்


பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
வணக்கம்.

வெண்முரசு நிறைவு கடிதத்தையும் ,இறுதி அத்தியாயத்தையும் சற்று முன் படித்தேன் .உங்களின் ஏழாண்டு கால மாபெரும் வேள்வி சம்பூர்ணமாக நிறைவுற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி.தொடக்கத்திலிருந்து  மாமலர் வரை தவறாது படித்த்து வந்தேன்,இப்போது மிகவும் பின்தங்கி தொடர்ந்து படிக்க முயலுகிறேன்.உண்மையிலேயே வெண்முரசு காவியம் மூலம் தமிழுக்கு அணி சேர்த்து இருக்கிறீர்கள்.0.5.07.20 அன்று நடை பெற்ற வெண்முரசு நிறைவு விழா நேரடி காணொளி காட்சியிலும் பங்கு பெரும் பேறு பெற்றேன்.

இன்றைய இறுதி அத்தியாயத்தில் கண்ணனை பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு இணையாக அனுபவித்து எழுதியுள்ளதை மிகவும் ரசித்தேன்.நேற்றுத்தான் ஊரில் திருஆடிப்பூர ஆண்டாள் உற்சவம் தொடங்கியுள்ளது .முதல் திருநாளில் பெரியாழ்வார் திருமொழி  முதல் இருநூறு பாசுரம் அனுபவித்து ஸேவித்தோம்.அதில் வரும்  கீழே உள்ள "ஆடுக செங்கீரை" பத்து பாசுரங்களை  ஒத்திருக்கிறது  உங்கள் எழுத்து!.  

 உய்ய உலகுபடைத் துண்ட மணிவயிறா!. /  

ஊழிதோறூழி பல ஆலினிலை யதன்மேல்//    
பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே!. /  

பங்கய நீள்நயனத்து அஞ்சன மேனியனே!. //  
செய்யவள் நின்னகலம் சேமமெனக் கருதிச்/  

செல்வு பொலி மகரக் காது திகழ்ந்திலக//    
ஐய!எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை/  

ஆயர்கள் போரேறே!ஆடுக ஆடுகவே.  1.5.1.
65:
கோளரியின் னுருவங்கொண்டு அவுணனுடலம்/  

குருதி குழம்பியெழக் கூருகிரால் குடைவாய்!. //  
மீளஅவன் மகனை மெய்ம்மை கொளக்கருதி/  

மேலை யமரர் பதிமிக்கு வெகுண்டுவர//    
காளநன் மேகமவை கல்லொடு கால் பொழியக்/  

கருதிவரைக் குடையாக் காலிகள் காப்பவனே!. //  
ஆள!எனக்கு ஒருகால்ஆடுக செங்கீரை/  

ஆயர்கள் போரேறே!ஆடுக ஆடுகவே. 1.5.2.
66:
நம்முடை நாயகனே!நான்மறையின் பொருளே!/ 

நாவியுள் நற்கமல நான்முகனுக்கு// ஒருகால்
தம்மனை யானவனே!தரணி தலமுழுதும்/  

தாரகை யின்னுலகும் தடவி அதன் புறமும்//    
விம்ம வளர்ந்தவனே!வேழமும் ஏழ்விடையும்/  

விரவிய வேலைதனுள் வென்று வருமவனே!//   
அம்ம!எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை / 

ஆயர்கள் போரேறே!ஆடுக ஆடுகவே. 1.5.3.

67:
வானவர் தாம் மகிழ வன் சகடமுருள /

வஞ்சமுலைப் பேயின்  நஞ்சமது உண்டவனே!//
கானக வல்விளவின் காயுதிரக் கருதிக்/ 

கன்றது கொண்டெறியும் கருநிற என்கன்றே!//
தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்/ 

என்பவர் தாம்மடியச் செருவதிரச் செல்லும்//  
ஆனை!எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை/ 

ஆயர்கள் போரேறே!ஆடுக ஆடுகவே. 1.5.4.

68:
மத்தளவும் தயிரும் வார்குழல் நன்மடவார்/  

வைத்தன நெய்களவால் வாரி விழுங்கி// ஒருங்கு
ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை/  

ஊரு கரத்தினொடும் உந்திய வெந்திறலோய்!. //  
முத்தினிள முறுவல் முற்ற வருவதன் முன்/  

முன்ன முகத்தணியார் மொய்குழல் களலைய //   
அத்த!எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை/  

ஆயர்கள் போரேறே!ஆடுக ஆடுகவே. 1.5.5.
69:
காய மலர் நிறவா!கரு முகில் போலுருவா!. /

கானக மா மடுவில் காளிய னுச்சியிலே//
தூயநடம் பயிலும் சுந்தர என்சிறுவா!. /

துங்கமதக் கரியின் கொம்பு பறித்தவனே!//
ஆயமறிந்து பொருவான் எதிர்வந்த மல்லை /

அந்தரமின்றி யழித்தாடிய தாளிணையாய்!. //
ஆய!எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை/

ஆயர்கள் போரேறே!ஆடுக ஆடுகவே. 1.5.6.


 

70:

துப்புடையயார்கள் தம்சொல் வழுவாது ஒருகால்/

தூய கருங்குழல் நல்தோகை மயிலனைய//

நப்பினைதன் திறமா நல்விடையே ழவிய/

நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே!. //

தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதிபுகத்/

தனியொரு தேர்கடவித் தாயொடு கூட்டிய// என்
அப்ப!எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை/

ஆயர்கள் போரேறே!ஆடுக ஆடுகவே. 1.5.7.

                                      (2)
71:
உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமிழ் மருவி/

உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும்//

கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்/

கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்கு அருளி//

மன்னுகுறுங்குடியாய்!வெள்ளறையாய்!. / மதிள்சூழ்

சோலை மலைக்கரசே!கண்ணபுரத்தமுதே!. //

என் அவலம் களைவாய்!ஆடுக செங்கீரை/

ஏழுலகும் முடையாய்!ஆடுக ஆடுகவே. 1.5.8.

72:
பாலொடு நெய்தயிர் ஒண்சாந்தொடு சண்பகமும்/

பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறிவர//

கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்/

கோமள வெள்ளிமுளைப் போல் சில பல்லிலக//

நீலநிறத்தழ காரைம்படையின் நடுவே/

நின் கனிவாயமுதம் இற்று முறிந்து விழ//

ஏலு மறைப்பொருளே!ஆடுக செங்கீரை/

ஏழுலகும் முடையாய்!ஆடுக ஆடுகவே. 1.5.9.
73:
செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில்/

சேர்திகழாழிகளும் கிண்கிணியும்// அரையில்
தங்கிய பொன்வடமும் தாளநன் மாதுளையின்/

பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்//

மங்கலஐம்படையும் தோல்வளையும் குழையும்/

மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக//

எங்கள் குடிக்கரசே!ஆடுக செங்கீரை/

ஏழுலகும் முடையாய்!ஆடுக ஆடுகவே. 1.5.10.


 

74:
அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்/

ஆமையு மானவனே!ஆயர்கள் நாயகனே!. //

என் அவலம் களைவாய்!ஆடுக செங்கீரை/

ஏழுலகும் முடையாய்!ஆடுக வாடுகவென்று//

அன்னநடை மடவாள் அசோதை யுகந்தபரிசு/

ஆனபுகழ்ப் புதுவைப் பட்டனுரைத்த தமிழ்//

இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார்/ உலகில்

      எண்திசையும் புகழ்மிக்கு இன்ப மதெய்துவரே.  1.5.11. 
 

 கண்ணனின் அருளால் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நல்ல ஆரோக்கியத்துடனும் ,நீண்ட ஆயுளுடனும் எல்லாம் வளமும்,நலமும் சிறக்க வேண்டுகிறேன்.

நன்றி,

அன்புடன்,
அ.சேஷகிரி.