அன்புள்ள ஜெ
மழைப்பாடலில் விதுரன் குந்தியை எண்ணி மனம்பொங்கும் பகுதி இது
ஆப்தமந்திரம் விழிதிறக்கும் கணமென அதை அவன் அறிந்தான். இதுதான் அக்கணம். முடிவிலிச்சுருளாக இருள்வடிவம் கொண்டு கிடந்த அந்தப் பெருநாகம் விரிந்து எழுந்து படம்கொண்டு விழிகொண்டு நாகொண்டு விஷப்பல் கொண்டு இதோ என்னைத் தீண்டிவிட்டிருக்கிறது. என் அகமெல்லாம் அதன் நீலம். என் குருதி என் தசைகள் என் எலும்பு எங்கும் அதன் நீலம். என் எண்ணங்கள் என் கனவுகள் என் ஆன்மாவெங்கும் அதன் இருள்விஷக்கருநீலப்பேரொளிவெள்ளம்! ஆம். இதோ இங்கிருக்கிறேன். இதுவன்றி ஏதுமின்றி.. நீ இருக்கிறாய் நானன்றி வேறின்றி. நீயன்றி வேறில்லாமல் நானிருக்கும் இக்கணமென்ன என்று அறிவாயா? நீ அறியாதது ஏதுமில்லையல்லவா? சர்வகல்விதமேவாஹம். சர்வகல்விதமேவாஹம்.சர்வகல்விதமேவாஹம். நீ மட்டுமே. நீ! நீ! நீ!
அதை ஒருபக்கம் வாசித்துக்கொண்டு இந்தப்பக்கம் குந்தியும் விதுரனும்
வந்து மணற்கரையில் அமர்ந்திருக்கும் காட்சியை வாசித்தபோது வாழ்க்கையின் முடிவில்லாத
வினோதம் என்னை பதைக்க வைத்தது. குந்தி இப்போது வேறு ஒரு பெண்மணி. பாண்டவர்கள் அவளுக்கும்
அவளுக்கு பாண்டவர்களும் ஒரு பொருட்டே அல்ல. அவர்கள் வேறுவேறு உலகங்களில் வாழ்கிறார்கள்.
எப்படி விலகிச் சென்றுவிட்டார்கள்
ஆரம்பம் முதலே குந்திமேல் விதுரருக்கு இருந்த ஈர்ப்பு அனைவருக்கும்
தெரிந்திருக்கும். அந்த ஈர்ப்பினால்தான் அவர் பாண்டவர்களுக்கு உதவினார். ஆனால் ரகசியமானது
அது. எவரும் தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்ளக்கூட தயங்குவது. ஆனால் இனி ரகசியமே
இல்லை. குந்தி விதுரருடன் போய் தங்குவது மகாபாரதத்திலேயே வருகிறது. அதை மற்றவர்கள்
எப்படி எடுத்துக்கொண்டார்கள்? அதெல்லாம் ஒரு பொருட்டே அல்லாமல் ஆகும் இடத்திற்கு அவர்கள்
போய்விட்டார்களா
சாரங்கன்