Thursday, July 23, 2020

மீள்வாசிப்பு


அன்புநிறை ஜெ,

நலமாக இருக்கிறீர்களா?

முதலாவிண் தொடங்கியதிலிருந்து வெண்முரசு முதலில் இருந்து மீள்வாசிப்பு செய்து கொண்டிருக்கிறேன். பிரயாகை நேற்று தொடங்கியிருக்கிறேன்.
ஒரு புறம் முதலாவிண் வாசித்துக்கொண்டே மறுபுறம் அதே நேரத்தில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை என வாசிக்கும்போது இமைக்கணக்காட்டில் நிகழும் நிகர்வாழ்வின் குறுக்குவெட்டுத்தோற்றம் போல பல மையப் பாத்திரங்களின் விதைப் பருவத்திலிருந்து உதிர்ந்து மண் சேரும் காலம் வரை கிடைக்கும் ஒட்டுமொத்தமும் அதில் கூடி வந்திருக்கும் ஒருமையும் பெருவியப்பை ஏற்படுத்துகின்றது.

ஒரே கண்வீச்சில் திருதாவின் பிறப்பு, அவரது உச்ச மனநிலைகள், பீஷ்மரை சரணடைவது, பாண்டுவுக்கு மணிமுடிதருவது, துரியனைக் கைவிடமாட்டேன் எனக் கொந்தளிப்பது, பீமனை முதற்களிப்போருடன் உச்சி முகர்வது, 'என் முதுமையில் உன் தோள்பற்றி நடப்பேன்' என்று பீமனிடம் முதல் சந்திப்பில் சொல்வது, முதலாவிண்ணில் பரீக்ஷித்தை ஆசியளித்து பீமன் கையால் உணவுண்பது, சங்குலனை வாழ்த்தி கான் மறைவது வரை வாசிக்கும்போது உக்கிரசிரவஸுக்கு ஏற்படும் உளக்கொந்தளிப்பும் பின் உவகையும் பின் அமைதியுமென மனம் மிதக்கிறது. வியாசர், விதுரன், குந்தி, காந்தாரி, பாண்டவர்கள், திரௌபதி, இளைய யாதவர் என அனைவரும் சூழ எங்கோ அலகில் வெளியில் அமர்ந்திருக்கிறேன்.

நிலக்காட்சிகள் குறித்த வர்ணனைகளைக் குறிப்பெடுக்க எண்ணித் தொடங்கிய வாசிப்பு இது. எனில் மீண்டும் முழுமையாக உள்ளிழுத்துக் கொண்டு புதிய புதிய கதவுகளைத் திறந்து கொண்டிருக்கிறது.

அனைத்துக்குமாய் நன்றியும் வணக்கங்களும்.

மிக்க அன்புடன்,
சுபா