Tuesday, July 21, 2020

ஏழாண்டு பயணம்



மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,

வெண்முரசு. எழுத்துக்களால் ஆன ஓர் ஏழாண்டு பயணம்.

வாழ்க்கை எங்கெங்கோ போய் எப்படியெப்படியோ ஆகி என்னென்னவாகவோ மாறி, இருத்தலுக்கு அர்த்தங்களைத் தானாக உருவாக்கிக் கொண்டு கட்டாயமாக இருந்தே ஆக வேண்டுவதற்கான கொஞ்சமே கொஞ்சம் காரணங்களில் ஒன்றான வெண்முரசு நிறைந்திருக்கின்றது. 

எத்தகைய ஓர் உழைப்பு! எத்தனை எத்தனை மனிதர்கள்! வழித்துணையென கைக்கொள்ள எத்தனை ஞான வரிகள்! எத்தனை உணர்வுகள்! மீண்டும் மீண்டும் சுவைக்க வேண்டிய தமிழ்த்தேன் பெருங்கூடு இது!

அடர்ந்து செறிந்த கெட்டித் தயிர் இது! வெண்ணெய் அளாவும் சிறுவிரல் கண்ணன் கழுத்தில் அணிவித்து வாழ்த்திய மாலை, இத்தனை மலர்களாக மலர்ந்திருக்கிறது. எம் மொழியில் இது பூத்திருக்கின்றது, நிகழ் காவியம் எழுத எழுத உடன் படித்துத் தானும் வளர்ந்த பல்லாயிரம் தமிழர்களில் ஒருவன் என்பதில் பெருமகிழ்வு. 

சிற்றணில் முயற்சியாக முதல் ஐந்து நூல்களைப் படித்துக் குரல் நூல்களாக வைத்துக் கொண்டு விட்டேன். மற்றவற்றைத் தொடர்வேனா மாட்டேனா என்பது தெரியாது.

வாழ்வைக் காத்துத் தந்த, கற்றுக் கொடுத்த ஆசிரியர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்குத் தாள் பணிந்து நன்றிகள்.

நன்றிகள்,
இரா.வசந்த குமார்.