அன்புள்ள ஜெ,
வெண்முரசு எழுதிமுடிக்கப்பட்டது என கடந்த வாரம் கேள்விப்பட்டபோதே மகிழ்ச்சி நிறைவு எல்லாம் தாண்டி ஏதோ ஒரு ஏக்கம் வந்துமனதை கவ்வியது. இத்தனைக்கும் நான் முழுவதும் வாசித்து முடித்தவன் அல்ல.
எவ்வளவு மகத்தான கனவு. கண்முன்னே நிறைவேறி முடிந்துள்ளது.
உங்களை வாசிக்கத் தொடங்கிய கடந்த பத்துவருடங்களில் உங்களால் அடைந்த விசங்கள் பல. இலக்கிய பரிட்சயம், காந்தி, இந்திய ஞானம் அறிமுகம், மறக்கவே முடியாத வாழ்நாள் பூடான் மற்றும் அருகர்களின் பாதை பயணங்கள், நம் நட்பு வட்டம். பெற்றோரிடமும் கிடைக்கப்பெறாத பல வாழ்க்கைக் கல்வி, வழிகாட்டுதல்கள்..
ஆனால் மற்ற எல்லாவற்றையும் விட இன்று முதன்மையாக எனக்குத் தோன்றுவது, " மிகப்பெரிய காரியங்களை எடுத்து தனக்குத்தானே கமிட்மெண்ட்களை விதித்து அதை வேள்வி போல் நிறைவேற்றிக் காட்டும் ஒரு ஆளுமையை வாழ்நாளில் அருகேயிருந்து பார்க்க கிடைத்த பாக்யமே" என எண்ணுகிறேன்.
வெண்முரசுநாள் அன்று உங்களை பார்க்கும் வாய்ப்பை தவறவிட்டுக் கூடாதே என்றுதான் மீட்டிங்கில் இணைந்தேன். பி.எச்.டியை முடித்த கையுடன் கண்டிப்பாக மொத்த நாவல்களையும் வாசித்து முடிப்பேன் என்ற உறுதியை எனக்கு நானே எடுத்துக் கொண்டேன்.
வாழ்த்துக்களும் பிரியங்களும்,
செந்தில் குமார் தேவன்.