Sunday, July 26, 2020

ஆழ்படிமங்கள்


வெண்முரசும் ஆழ்படிமங்களும்

அன்பு ஜெ,

பூங்குன்றன் செல்வராஜ் அவர்களின் உரையைக் கேட்டேன். அருமையான உரை. Archetype என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டேன். Archetype என்பதற்கு ஒட்டுமொத்தமாக தமிழில் வார்த்தையை சொல்ல முடியவில்லை என அதை விளக்க சில உதாரணங்களைத் தந்தார். நான் கூகுளில் தேடிப்பார்த்தால் “தொல்பொருள்” என அதை அப்பட்டமாக மொழிபெயர்த்திருந்தது. சிரிப்பு வந்த்து. என்வரையில் அதை ”தொன்மம்” என்ற வார்த்தையால் குறிக்கலாம் எனக் கொண்டேன் (தவறு எனில் திருத்தவும்). அதைக் கேட்டதும் அதன் சாராம்சத்தையும், அது சார்ந்த என் எண்ணங்களையும் எழுத வேண்டும் என்று தோன்றியது. அதற்காக இந்தக் கடிதம்.

 நார்சிசம் (Narcism) என்ற வார்த்தை உளவியலில் தன்னை முன்னிலைப்படுத்தும் சுய நலமான நபரைக் குறிக்கிறது. அந்த வார்த்தை கிரேக்க கதாப்பாத்திரத்தினின்று வந்ததாகக் கூறுகிறார். சிசிபஸ் என்ற ஒரு கிரேக்க தொன்மக் கதாபாத்திரம் வழி ஆல்பர்ட் காம்யூ தன்னுடைய “philosophy of the absurd” என்பதை வடித்தார் என்கிறார். இதைக் கேட்டதும் ஜெ –வின் சாவி சிறுகதையை நினைத்துக் கொண்டேன். அதில் வரும் குரங்கும் கூட சிஸிபஸ் தானே. இங்கு காம்யூ, நாம் அனைவருமே ஒருவகையில் சிசிபஸ் என்றியம்புவதாகக் கூறுகிறார்..

இது போலவே பைபிலிலும் கூட பல வகைத் தொன்மங்கள் உள்ளன என்றும் அவையாவும் உலக இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். கிறுத்துவின் அன்பு/இரக்கம்/கருணை/அறம் சார்ந்த பிம்பங்களை மக்கள் மனதில் ஆழமாக கட்டமைத்திருப்பது டால்ஸ்டாய், தத்ஸாவஸ்கி, செகாவின் எழுத்துக்கள் தான். ஆனால் ”ஏன் பைபிளைப் பிடித்துத் தொங்க வேண்டும் இவர்கள்? இது பழமைவாதமாயிற்றே! பெண்னியத்திற்கு எதிரான நூல்” என ஏன் நிராகரிக்கவில்லை? இன்று இவர்களை மிகவும் பிடிக்கும் என்று சொல்பவர்கள் ஏன் மகாபாரதத் தொன்மங்களை மட்டும் வெறுக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார். இவர்களின் பேசுபவர்களின் பேசுபொருளாக டால்ஸ்டாய், தத்ஸாவஸ்கி, செகாவ், ஆனா கரினா போன்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவர்களின் மதத்தை, தொன்மங்களாக (Archetype) ஆக பயன்படுத்தியிருக்கிறார்கள். பேரிலக்கியங்கள் யாவும் மரபையோ, மதத்தையோ நிராகரித்தது கிடையாது; எலியட்டின் மிஷ்கின் என்பது கிறுத்து தொன்மம்; செகாவ் கிறுத்துவை மறுவுருவம் செய்திருக்கிறார்; விக்டர் ஹுகோ லா மிசரே –ல் கிறுத்து இருக்கிறார் என்றும் அதற்கு முன்னுதாரணங்கள் தருகிறார்.

இப்படி உலக இலக்கியங்களில் மதம் பேசு பொருளாக இருக்கிறது. ஆனால் மரபினின்று ஓர் காவியத்தை மீட்டுருவாக்கி அதை வெண்முரசாக வழங்கியிருக்கும் ஜெயமோகனின் படைப்பின் மீது கட்டமைக்கப்படும் ஒவ்வாமை கண்டு வருந்துவதாகக் கூறுகிறார்.

உலக இலக்கியங்களை சிலாகிக்கும் என்னுடைய ஆத்திக நண்பர்களைப் பார்க்கிறேன். அவர்களுக்கு கிறுத்து பேசப்படுவது ஒரு பொருட்டல்ல. ஆனால் மஹாபாரத, இராமாயண ஒவ்வாமை திராவிட, கம்யூனிசக் கட்சிகளால் கட்டமைத்து விட்டிருப்பதால் இந்த நிராகரிப்பு நடைபெறுகிறது என்றே நினைக்கிறேன். அது ஒரு குறை தான். அது சரி செய்யப்பட வேண்டும்.

என்வரையில் பெரும்பாலான தொன்னூறுகளின் குழந்தைகள் மரபை, வேரை நோக்கி பகுத்தறிவோடு செல்பவர்களாகப் பார்க்கிறேன். எங்களுக்கு முன்னுள்ள தலைமுறைகள் தீவிர திராவிட செயல்பாட்டாளர்கள். தீவிர பெரியாரிய வாதிகளாக இருந்ததாகப் பார்க்கிறேன். இன்று வரையில் கம்யூனிஸ்ட் என்ற பெயரைக் கேட்டாலே நல்லவர்கள்/மக்களை நேசிப்பவர்கள்/ சமத்துவத்துக்காக பாடுபடுபவர்கள் என்ற பிம்பம் அளிப்பதும் முன்னுள்ள தலைவர்களின் செயற்பாட்டினால் தான். திராவிடம், அதன் கொள்கை சார்ந்த மரபு இலக்கியம் என்பதைத் தாண்டி தமிழ் புலங்கிய அத்தனையயும் மரபாக ஏற்றுக் கொண்டு அதை பகுத்தறிவு கொண்டு நோக்கும் எண்ணம் வளர ஆரம்பித்திருக்கிறது இன்று. வெறுமனே சிலம்பை மட்டும் போற்றிக் கொண்டிராமல் சமகாலத்திய பிற நூல்களையும் எடுத்து அதை பகுத்தறிவு கொண்டு, தத்துவங்கொண்டு, வரலாறு கொண்டு, அரசியல், சமூக, பொருளாதார நோக்கில் ஆய்ந்து தெளிய ஜெ -வின் முன்னெடுப்பு மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். இயற்கையை, உள்ளுணர்வை வழிபட்ட தொல்குடி தமிழர்கள், சமண, பெளத்த, வைதீக, பக்தி காலத்திய, முகலாய, கிறுத்துவ ஆத்திக/பகுத்தறிவு/திராவிடம் என நீண்ட வரலாற்றிலும் தமிழ் என்னும் மொழியையே முதன்மையாக தமிழர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். இதில் ஒரு குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தை மட்டும் அரசியல் சார்ந்து விட்டொழிக்காமல், அதை பகுத்தறிவு கண் கொண்டு நோக்கி, அதில் விளங்கும் இலக்கிய, இலக்கண, சுவைகளை அறிவது இலக்கியவாதிகளுக்கு உகந்தது. அண்ணா சிலம்பை பெருமைப்படுத்தியதோடு நில்லாமல் இராமயணத்தை தாழ்த்தியதென்பது அந்த கால அரசியலுக்கு உகந்ததாயிருந்தது. குறிப்பிட்ட கவிஞர்களையும், இலக்கியவாதிகளையும் முன்னிருத்தி வெகுசனமக்கள் அறியும்படி செய்தார்கள். ஒருவகையில் ஜெ சொல்வது போல அதில் விழைந்த நன்மை திருக்குறளை உலகறியச் செய்தது தான்.

அதன் பின்னும் திராவிட இயக்கங்களைத் தாண்டி, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் முன்னிருத்தும் ஆசிரியர்களை மட்டுமே அவர்கள் சார்ந்தவர்கள் கொண்டாடினார்கள். இன்னும் இந்த காலத்தில் இவர்கள் முன்னிருத்துபவர்களை மட்டுமே வாசகன் கொண்டாட வேண்டுமென்பதில்லை. ஜெயமோகன் ஐயாவுடைய எழுத்துக்களை நான் அறிவதற்கு முன்பாக நான் கட்டமைத்துக் கொண்ட பிம்பம் முற்றிலும் வேறு. அவர் பெயரைக் கேட்டாலே எரிச்சலுற்றிருக்கிறேன். அது இங்கு பெரும்பாலும் திராவிட, கம்யூனிஸ்ட் கட்சிகளால் கட்டமைக்கப்பட்ட பிம்பம். அவர் எழுத்தை இத்தனை நாள் அடைய முடியாது இவர்கள் எனக்கு முன்னால் எழுப்பிய சுவரை என்னையறியாது கடந்து அடைந்த பொக்கிஷம் தான் ஜெ- வின் எழுத்துக்கள். இன்றும் பிற சிறுகதைகள் புனைவுகளைப் படிக்கிறேன். ஏனோ ஜெ –வின் எழுத்துக்களில் எனக்குக் கிடைத்த ஆழத்தை, நிறைவி விட வேறெங்கும் அது எனக்கு கிடைக்கவில்லை.

சமீபத்தில் பவா அவர்கள் ”நெடுந்தூரம்” என்ற ஜெ –வின் வீடுறைவு கால சிறுகதை ஒன்றைப் பற்றி சிலாகித்து தன்னுடைய தளத்தில் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு பவா ஐயாவை மிகப் பிடிக்கும் தான். ஆனால் கதை ஆரம்பிக்கும் முன் அவர் ஜெயமோகன் வீடுறைவு காலத்தில் 100 சிறுகதைகள் எழுதியிருப்பதாயும், அதில் ஒன்று கூட தேராது என தன் சார்ந்த இயக்கத்தினர் சொல்வதாயும், ஆனால் அப்படி இப்படி சலித்தால் 30 கதைகளாவது தேரும் என்று பெருமை பட சொன்னார். நான் உடைந்தே போனேன். நான் படிக்காதிருந்தால் அதை நம்பியிருப்பேன். அந்த 100 சிறுகதைகளில் எதுவெல்லாம் ஒத்துவரும் என்று இவர்கள் சொல்கிறார்களோ அதை மட்டும் படிக்கும் வாசகன் தன் வாழ் நாளின் ஒரு நல்ல வாய்ப்பை தவற விடுவான் என்பது உறுதி. இது போன்ற பொதுமைப்படுத்தல்கள் இளையவர்களின் வாழ்நாளில் பல நல்ல விடயம் கற்பதை தள்ளிப் போடுகிறது. நான் என் இளமைக் காலங்களில் பாரதியை, பாரதி தாசனை, பெரியாரை, அண்ணாவை, திராவிட இயக்கங்களை, கம்யூனிஸ்ட் சிந்தனைகளை தான் அடைந்தேன். அதற்காக நான் இன்று வருத்தப்படவில்லை. மகிழ்வு தான். ஆனால் அவை என்னை காந்தியினின்று தூரப்படுத்தியிருந்தது. மரபை உள்ளுணர்வை ஏளனம் பேசச் செய்தது. நான் இன்று சரணடைந்து கிடக்கும் ஜெ –வின் எழுத்துக்களினின்று பிரித்து வைத்திருந்தது. வெண்முரசை நான் ஏன் இன்னும் முன்பே படிக்க ஆரம்பித்திருக்கவில்லை என்று நினைக்கையில் ஆற்றாமையில் கண்ணீர் பொங்குகிறது. பிற நாட்டில் பிறந்த மானுடத் தலைவர்களான சேகுவேரா, பிடல் போன்றோரை பிடித்த அளவு கூட காந்தியைப் பிடிக்காமற் போனதற்கு நான் யாரைக் குறை சொல்வேன்.

போனது போகட்டும். இனி வரும் இளைய தலைமுறைகள் தங்கள் அறிவு கொண்டு அனைத்தையும் பாரபட்சமில்லாமல் தேடி தனக்கானதை கண்டடைய வேண்டும். கொள்கைகள், கருத்துருக்கள் யாவும் தேடித் தேடி தாங்களாகவே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு வேண்டுதல்கள் என்னிடம் இல்லை. 

அன்புடன்

இரம்யா.