அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
என்ன எழுதுவது என்று தெரியவில்லை ஆனால் கடந்த ஆறரை வருடங்களாக தினசரி நான் பயணித்து, தினமும் ஆழ்மனதை தொட்டு சென்ற பல ஆத்ம வாக்கியஙகளுடன் அமைந்த பயணம் முடிந்தது என்று எண்ணும் போது மனம் துணுக்குருவதை, வெறுமை உணர்வதை பகிர வேண்டும் என்ற உந்துதலில் எழுதுகிறேன்...
முதற்கனல் முதல் சில அத்தியாயங்கள் படித்தவுடன் உங்களுக்கு எழுதிய கடிதத்தை நினைவுறுகிறேன்.. வெண்முரசு போன்ற பெருங்காவியத்தை படிப்பதற்கான தகுதி எந்த அளவிற்கு எனக்கு கூடியிருக்கிறது என்று தெரியவில்லை.. ஒன்று மட்டும் உறுதி.. ஒவ்வொரு நாளும் வெண்முரசு படிக்கும் நேரமும் அதன் பின் அன்றாட உத்தியோக நேரம் ஆரம்பம் வரை, மனம் வேறு தளத்திற்கு செல்லும். சில வாக்கியஙகள் மனம் விட்டு அகல நீண்ட நேரம் ஆகும். ஆரம்பத்தில் இந்த வாக்கியஙகளை ஒரு நோட்டில் எழுதி வைக்கப்பார்த்தேன்... புத்தகத்தில் பாதி வந்து விடும் போல் இருந்ததால் நிறுத்தி விட்டேன்..
வாசிப்பு திறன் மேம்பட்டதா இல்லையா என்று கூற முடியவில்லை என்றாலும், இந்த 6 வருடங்களில், என் அளவில், என் மனதில் உங்களை ' கருத்துக்களை தெளிவாக, நடுநிலையுடன் விளக்கும், மிக பிடித்த, மனதுக்கு மிக நெருங்கிய ,
தமிழ் இலக்கிய வாசிப்பில் என்னை பன்மடங்கு பண்படுத்திய ஆசிரியர்,
இலக்கிய ஆளுமை என்ற இடத்தில் இருந்து ( இன்னும் நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் !!) , கூடுதலாக ஆன்மிக தேடலில் வழி கோழும் ஒரு குரு நிலையில் இப்போது பார்க்கிறேன். உங்கள் இந்திய ஞான மரபில் ஆறு தரிசனங்கள் தான் அந்த தரிசனங்களை எனக்கு அறிமுகப் படுததியது. ஆன்மிக பாதையின் ஆரம்பத்தில் தான் உள்ளேன் என்றாலும் , வெண்முரசு இந்த 6 வருடங்களில் தந்த திறப்புகள் ஏராளம்.
வெண்முரசு முடிந்து விட்டது என்று என் மகனிடம் கூறியதும் அவன் எதிர்வினை உடனே ' இனிமே என்ன பண்ணுவே ' என்பதுதான்!!. மீண்டும மீண்டும் மனதில் எழும் கேள்வி, வெண்முரசு அளிக்கும் மனநிலை இனி எதை கொண்டு அடைவது என்றுதான். பதில் ஒன்றுதான். வெண்முரசை, வெண்முரசு கொண்டு தான் நிரப்ப முடியும்.. ஒவ்வொரு வெண்முரசு நாவலை வாங்கும் போதும், அதை படிக்கும் நேரம் வருமா? ( இணையத்தில் படிதத பகுதி தானே ) என்று கேள்வி எழும். இன்று நினைப்பது வேறு.. எத்தனை முறை படிததாலும் புதிய திறப்பை தரும் வெண்முரசு நாவல்கள் மட்டுமே, இத்தனை வருடங்கள் இந்த காவியம் அளித்த மன எழச்சிகளை மீண்டும் தர வல்லது.
இலக்கிய ஆசை, ஆன்மிக ஈடுபாடு உள்ள எவரும், வெண்முரசு நாவல்களுக்குள் திறந்த மனதுடன் சென்று விட்டால
பின்னர் வேறு எதையும் அவர்கள் படிக்க தேவை இருக்குமா என்ற கேள்வி என் மனதில் அடிக்கடி வரும். அந்த அளவு எல்லா தளங்களையும் தொட்டு, அகழ்ந்து, நுண்மையான ஒரு மாபெரும் காவியத்தை தந்து, மேலும் இந்த காவியம் படைக்க படும் போது அதனுடன் பயணித்து அது வளர வளர அன்றன்று படித்து வர வாய்ப்பளித்து தந்த உங்களுக்கு என் மிக ஆத்மார்த்மனமான வணக்கங்களும் நன்றிகளும்.
சொல்ல வந்ததை முழுதாக சொல்லிவிட்டேனா தெரியவில்லை. ரொம்ப எழுதி விட்டோம் என்று ஒரு பக்கமும் , இல்லை எண்ணங்கள் எல்லாம் எழுத்தில் வரவில்லை என்ற மறுபக்கமும் என்று, என் எல்லா கடிதங்களில்லும் உள்ளது போல இங்கும் வெண்முரசு அத்தியாயங்கள் மனதில் உருவாக்கும் பாதிப்பை முழுதாக எழுத்து வடிவில் மாற்றுவதில் உள்ள சிக்கலை உணர்ந்து, மீண்டும் வணக்கங்கள், நன்றிகளுடன்
அன்புடன்
வெண்ணி