Thursday, July 16, 2020

வாழ்த்து


அன்புள்ள நண்பருக்கு 

வணக்கம். நலம்தானேவெண்முரசு வரிசையில் இருபத்தாறாவது  நாவலில் ஐந்தாவது அத்தியாயத்தைப் படித்து முடிக்கும் வேளையில் நீங்கள் நாவலையே எழுதிமுடித்துவிட்டீர்கள். உங்கள் வேகமும் முனைப்பும் கடின உழைப்பும் பாராட்டுக்குரியவை. அவை ஒன்றும் புதிதல்ல. காட்டாற்றின் வேகத்தைப்போல அவை நாள்தோறும் பெருகிக்கொண்டே போவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மனமார்ந்த வாழ்த்துகள். 

ஏழாண்டுகளுக்கு முன்பு முதற்கனலின் முதல் அத்தியாயத்தைப் படித்த அதே உற்சாகத்தோடும் விருப்பத்தோடும் எதிர்பார்ப்போடும் இன்று வரை படித்து வருகிறேன். சிற்சில நாவல்களின் வாசிப்புக்கணங்கள் ஒருபோதும் மறக்கமுடியாதவையாக மாறிவிடும். பொய்த்தேவு, ஒரு புளியமரத்தின் கதை, மோகமுள், நாளை மற்றுமொரு நாளே, கிருஷ்ணப்பருந்து, தலைகீழ் விகிதங்கள் போன்ற நாவல்களை வாசித்த நாளும் பொழுதும் இன்னும் நெஞ்சில் பசுமையாக நினைவில் உள்ளன. உங்கள் ஆக்கங்களில் ரப்பர், ஏழாம் உலகம், காடு, கொற்றவை வாசித்த நாட்கள் மிகமுக்கியமானவை. ஆனால் வெண்முரசு நாவல் வரிசையில் அப்படி ஒரு தேர்வுக்கே இடமில்லாமல் போய்விட்டது. முதற்கனலில் தொடங்கி கல்பொருசிறுநுரை வரைக்கும் ஒவ்வொன்றுமே முக்கியமாகத் தோன்றுகிறது. இது மிகப்பெரிய சாதனை. தமிழ்மொழிக்கு இந்த நாவல்கள் மாபெரும் கொடை 

மீண்டும் என் வாழ்த்துகள். அருண்மொழிக்கும் பிள்ளைகளுக்கும் என் அன்பு.

 

அன்புடன்

பாவண்ணன்