இனிய ஜெயம்
குருஷேத்ரத்தில் பரீக்சித்தும் கவிஜாதனும் நிற்கும் இந்த மூன்றாவது ஓவியம் முற்றிலும் தனித்துவம் கொண்டது. முழு நிலவு பொழியும் பொழுது. தக்ஷனின் செவ்விழி குருஷேத்ரத்தில் தளர்ந்து நிற்கும் பரிக்சித்துவை உறுத்துப் பார்க்கிறது.
கொடுங் கனவு ஒன்றின் தீவிரமான சித்தரிப்பு. அந்த உக்கிரம் குறையாத ஓவியம். அரவங்கள் எழுந்து நெளியும் புற்றுக்கள், ஒவ்வொன்றிலும் களத்தில் குருதி சிந்தி மடிந்த மனிதர்களின் மிருகங்களின் மட்கிய எலும்புகள். மத்தகத்தில் வேல் செருக சரிந்து கிடக்கும் கொம்பனின் எலும்பு வரிசை. மத்தியில் தளர்ந்து கிடைக்கும் பரிக்சித். ஒவ்வொன்றையும் விளிம்புகளில் வெள்ளி மிளிரச் செய்யும் நிலவொளி.
இந்த அத்யாயத்துக்கு வெளியே தனியாக இந்த அத்தியாயத்தின் சிதறிப்புத் துணை இன்றி பார்த்தாலும் இந்த ஓவியம் ஒரு முற்றிலும் தனித்தன்மை கொண்ட அமானுஷ்ய சர்ரியலிச ஓவியம். ஒரு பார்வையில் பரிக்சித்தை உறுத்து நோக்கும் செவ்விழிகள் மறுபார்வையில் இந்த ஓவியத்தை பார்க்கும் நம்மை உறுத்து நோக்குகிறது. ஹிப்னாடிச கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லும் மெஸ்மரிச நோக்கு. கணிப்பொறி திரையின் ஒளிர்வால் செவ்விழிகள் கண்ணாடிக் கோளம் போல தோற்றம் தருகின்றன. நிலவோ உண்மையான நிலவு ஒளி சிந்தும் உணர்வை அளிக்கிறது. கவிஜாதனின் உருவமும் இருப்பும் ஓவியத்தின் மானுட தன்மையை இன்னும் உயர்த்துகிறது. ஒரே சமயம் மூவாயிரம் வருடத்துக்கு முன்பான ஆழ்மன கொடுங்கனவாகவும், இன்னும் மூவாயிரம் வருடத்துக்குப் பிறகு வேறு எதோ கிரகத்தின், அந்த நிலத்தில் நிகழும் விஞஞானப் புனைவுறுக் காட்சி போலவும் ஒரே சமயம் தோற்ற மயக்கம் காட்டும் வசீகர அமானுஷ்ய மர்ம ஓவியம்.
கடலூர் சீனு