Friday, October 21, 2016

வாசல்






அன்பின் ஜெயமோகன்'
    


          வணக்கம்.கிராதம் தொடக்கத்திலேயே என்னுள் இணைந்து விட்டது.


"எனக்கும் திறந்துவிட்டது அந்தப் பொன்வாயில். வேதமுனிவர் தலைகளை கிளைநுனிகளாக்கி வந்தமைந்த அப்பறவையை நானும் ஏந்தியிருக்கிறேன். அறிதலென்பது ஒரு கணம். முன்பிருந்த அனைத்தும் பிறிதொன்றாக மாறும் திகிரிச்சுழி. அனலால் தவத்தை, மொழியால் பிரம்மத்தை ஆளுதல். அனலும் மொழியும். அனல்மொழி! மொழியனல்!
     .

ஆம் அத்திறப்பின் கணத்தை அறியும் வரைதான் குழப்பங்கள்.அதன்பின் அனைத்துப் பார்வைகளும் மாறி விடும்.அதனை அடையவே தேடல்கள் எல்லாம்.கண்டடைபவர்கள் குறைவானவர்களே.என் இளமையில் தேடி அலைந்திருக்கிறேன்.நட்பு,உறவு ,பாசம் ,காதல் என்றெல்லாம் தேடியதுண்டு.இலக்கியம்,கலைகள்,இசை என்று எங்கும் அதனை ஆவலாய் பற்ற அலைந்ததுண்டு.
     

இன்றைய முதல் பகுதியே இத்தகையத் தேடலைப் பற்றியது தான். எக்கணம் திறந்தது அந்த பொன்வாயில்?அதில் தான் நம் வாழ்வு தொடங்குகிறது.அவ்வாறு உணர்ந்த திறப்பை இன்னமும் நான் எண்ணுவதுண்டு.எப்படி நிகழ்ந்ததென்று தெரியவில்லை.ஆனால் அதன்பின் வாழ்வு தெளிவாகிவிட்டது.எத்தனை கொந்தளிப்பிலும் அமைதியுறும் உள்ளுணர்வினை உணர முடிகிறது.
       

பொன்வாயில் திறக்க குருவும் வேண்டுமென இன்றைய பகுதி உணர்த்துகிறது.
      

எலியினை தெருப்பில் வாட்டுகையில் அது வெந்து உருகுவதே பக்குவப்படுவதைக் காட்டுகிறது.ஆம் அனைத்தும் தீயில் வெந்து உருகி நெய் வடிய வேண்டும்.அப்படித்தான் உள்ளம் மாறுகிறது.
   

அனலை அருந்தும் கொற்றவை' எத்தனை  வலிய வார்த்தை.அந்த அனல் உணர்ந்தவர்களால் மட்டுமே இதனைப் புரிந்து கொள்ள முடியும் என்றே எண்ணுகிறேன்.மிக நல்ல ஆரம்பம்.
     

நீண்ட நாட்களாக எழுதவில்லை..ஆனால் தினமும் வெண்முரசினை  வாசிக்கிறேன்.
நன்றி
மோனிகா மாறன்.