Monday, October 31, 2016

படிமக் களஞ்சியம்

அன்புள்ள ஜெ


ஒவ்வொரு நாளும் கிராதம் படித்து முடித்ததும் கடலை கவிழ்த்துக்குடிப்பதுபோல் மூச்சு முட்டுகிறது. எந்த இடத்தில் கைவைத்து வாய்வைத்து பிடிப்பது என்பது புரியவில்லை. எத்தனை பெரிய படிம களஞ்சியம் இந்த கிராதம் கரிபிளந்தெழல் அத்தியாயம்.

கற்பனை நாரில் உண்மை மலர்களை தொடுத்துக்கொண்டே செல்கின்றீர்கள்.  மலர்பந்தாக இருப்பதால் ஆதியும் அந்தமும் முடிவிலி என்று விரிகின்றது. 

அன்னை கலைவாணி அருளால் எண்ணும் எழுத்து அறியும் நாளில் தொடங்குகின்றது அன்னைகலைவாணி உறையும் நாவன் பிரம்மன் கபாலம் நம் கையில். எண்ணும் எழுத்தும் கற்று கற்று மேதாவியாகும் தருணத்தில் சொல்லும் மேதமையும் புணர்ந்து புணர்ந்து சொல்லாகிய கலைவாணியை மறந்து இறையாகிய சிவத்தை மறந்த நான் என்னும் மயக்கத்தில் ஆழும் தருணத்தில்  பிரமகாபாலம்  பல்லிளிக்கும் நிறையா கைக்கபாலமாக மாறிவிடுகிறது.

தன்னைத்தான் அறிந்து சொல்லில் இருந்து விளையும் உலத்தை உணர்ந்து தன்னை சுவைத்து தனக்குள் எழும் சிவத்தை உணர்கையில் பிரமகபாலம் எல்லாவற்றையும் கழுவி புனிதம்நீங்க புண்ணிய கங்கையில் கழன்று விழந்து கங்கையோடு போகின்றது. கபாலம் ஏந்தியவன் பிச்சை ஏற்றாலும் பிரபஞ்சத்தின் மன்னன் என்று திரிகின்றான்.  அவனை எப்படி வெல்வது? இருளில் விழுந்து இதங்கள் இணைந்து இருளாகி எதிர்க்கின்றன. 

தன்னைத்தான் புலன்களில் கட்டி சிறைவைத்திருக்கும் விலங்குகள். தன்னைத்தான் அவைகள் விலங்கிட்டு இருப்பதால் அவை விலங்குகள். விலங்கில் இருந்தாலும் விலங்குகள் சுதந்திரமானவை என்று மனிதன் நினைக்கிறான். விலங்கி்ற்கு ஏது சுதந்திரம். புலன்களில் கட்டுண்டு இருக்கும் மனிதனும் ஒரு விலங்கு, புலன்களை தாண்டும் மனிதன் மனதின் விலங்கில் விலங்கிடப்பட்டு உள்ளான். புலன்விலங்கைவிட மனதின் விலங்கு பெரும் விலங்கு  அதை கொல்வது தன்னையே கொல்வது. தன்னையே கொன்று திண்பது.  தன்னை திங்கத்தொடங்கும் ஒருவனுக்கு பின்னால் துரத்திவந்த அறியாமை என்னும் திசையானை முன்னால்வந்து நின்று முட்டுகின்றது. ஒருயானையா அது? எட்டுதிசையும் பெரும் இருளாய் பெருகிவரும் எட்டுமதயானை.
//எது எது என்று தேடிச்செல்பவன் இல்லை இல்லை என்று மறுத்துமறுத்துச் செல்கிறான். அவன் அறியும் பேரிருள் இப்புடவியை ஏழுமுறை மூடியிருக்கிறது. விழியறியும் இருள் சிறுதிரை. உணர்வறியும் இருள் பெருந்திரை. எண்ணம் அறியும் இருள் இயலாத்திரை. இருளுக்கு இருளாவது யோகம் அறியும் இருள்என்றார்.//

,இந்த மதயானையை ஒன்றாகி மத்தகம் மிதித்து தோலுரித்து போத்தி அழல் என்று நின்று நெஞ்சம் நிமிர்த்திக்காட்டுகின்றான் ஆண்மைநிறைந்த வீரன். அவன் சட்டைநாதன், கரியுரிப்போர்த்திய கடவுள் எனப்படுகின்றான். மற்றைய மனிதர்கள் அனைவரும் குளிரில் இணைந்த இருள்போர்வைபோர்த்திய ஒற்றைபெரும் கூட்டம். அந்த பெரும் கூட்டத்தில் இருந்து ஒருவன் எழுகின்றான். சொல்லில் இருந்து அனல் எழுப்பக்கற்றவன். மூலாதாரத்தில் நீலச்சுடர் எழுப்புபவன். சுவாதிஷ்டானத்தில் செஞ்சுடர் பார்ப்பவன். மணிபூரகத்தில் மஞ்சள்ஒளி ஓம்புபவன். அனாகதத்தில் பச்சையொளி தரிசிப்பவன். விசுத்தில் பொன்னொளி சூடுபவன். ஆக்சாவில் வெண்சுடரில் லயிப்பவன். சகஸ்ராரத்தில் ஆயிரம் இதழ்தாமரையில் குருவின் தொடுகையில் ஒளியேற்றி நிறைபவன். அவன் திசையானைகளை உடையாக உடுத்திக்கொண்டு அதன் வெண்தந்தங்களை பரிசாகக்கொண்டு அதன் ஒளியில் உலகை காண்கிறான். . சூரிய சந்திர அக்கினி மூன்றும் அவனுக்கு முக்கண்ணாய் நின்று ஒளிர்கிறது. அவன் திசையாடை அணிந்த நெற்றிக்கண் கடவுள்.

மானிட வாழ்க்கை என்பது பிரபஞ்சமலையின் மிகஉயரத்தில் அமைந்த இருள்குகைதான். இங்கு மனிதர்கள் அனைவரும் தங்கள் அறியாமை இருளில் முட்டிமோதி ஒன்றோடு ஒன்று கலந்து குறுக்கி ஒருதிரளாகி அச்சம் என்னும் பனிச்சொட்டச்சொட்ட ஒன்றுக்கலந்து கிடப்பவர்கள்தான். அதில் யாரோ ஒருவனுக்கு சொல்லில் இருந்து வெளிப்படும் உலகம் புரிகின்றது. மேதாவும் நான்முகனும் புணரும் கற்பனை உலகம் புலப்படுகின்றது. அவன் கையில் பிரமகபாலம் கிடைக்கிறது. அவனுக்கு பின்னால் தொடந்துவந்த அறியாமை இருட்டு ஒரு கணத்தில் எதிரில் நிற்கும் மதயானை என்பது தெரிகிறது அதை அழித்து  சிவம் ஆகின்றான்.

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே .திருமந்திரம்.

அன்புள்ள ஜெ. பிச்சாண்டவர் தன்னில் கண்ட சூரிய சந்திரரை வைசம்பாயன் பிரபஞ்சத்தில் காண்கின்றான் என்று கதையை முடித்ததுதான் அழகான அர்த்தமுள்ள கவிதை. பிச்சாண்டவர் பரத்தை மறைத்த பார்முதல் பூதம். வைசம்பாயணன் பரத்தில் மறைந்த பார்முதல் பூதம். பிச்சாண்டவர் பொருள் எல்லாம் குவியும் சொல்லானவர். வைசம்பாயனன் சொல்லெல்லாம் விரியும் பொருளானவர். பிச்சாண்டவர் அகக்கண் காட்டும் அருகில் இருக்கும் சேய்மை.  வைசம்பாயனன் புறக்கண் காட்டும் தொலைவில் இருக்கும் அண்மை.  ஷண்முகவேல் ஓவியமும் அற்புதம்