Sunday, October 23, 2016

தன்னை உண்ணுதல்


அன்புள்ள ஜெ




வாளால் மகவரிந்து ஊட்டல்லேன் அல்லேன் மாதுசொன்ன
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லேன் தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடந்து அப்பவல்லேன் அல்லேன் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே- 

என்கின்றார் பட்டினத்து அடிகள்.

நான்மீது இன்னொரு நான் முளைத்தால் கண்ணைப்பறித்து கடவுளுக்கு அப்பிவிட முடியும். நான்மீது நான்என்று இல்லாமல் அமர்ந்தால் மனைவியின் நிழலைக்கூட கும்பிட்டுப்போய்விடலாம் ஆனால் நான்முளைத்தாலும், நான் அழிந்தாலும் எப்படி பெற்றப்பிள்ளையை அறுத்து சமைப்பது? எப்படி இதை செய்தார் சிறுதொண்டர்?

மாமல்லன் படைத்தளபதியாகி வாதாபியை வென்று தீவைத்துக்கொளுத்தியவருக்கு இது எளிதாக இருந்து இருக்கும் என்று நினைத்தேன். அப்படித்தான் நம்பிக்கொண்டும் இருந்தேன். சத்ருஞ்சயன் சடைமுனியின் காதை அறுத்து அதை உண் என்று சொல்லும்போது ஊன் எல்லாம் உணவே என்று அதை சுட்டு உண்ணும் சடைமுனியைப்பார்க்கும்போது தோன்றியது. நான் இல்லா நானில் நிற்கும் ஒரு தருணத்தை உள்ளம் அடையமுடியும் என்பதை. அந்த தருணத்தில் உள்ளத்தில் சிவம் எழுகின்றது. எல்லாம் சிவமாகுகின்றது. கொல்வதும் கொல்லப்பட்டதும் உண்பதும் உண்ணப்பட்டதும் எல்லாம் சிவம். சிறுதொண்டர் அங்கு எழுந்து வந்து நிற்கின்றார். வாளால் மகவரிந்து ஊட்ட வல்லவன் என்கிறார். காது அரிந்து சுட்டு உண்ணும் சடைமுனியும், மகவரிந்து சமைத்து ஊட்டும் சிறுதொண்டரும் வேறு இல்லை என்று தெரிகிறது.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.