Tuesday, October 25, 2016

சிவம் எழல்




அன்புள்ள ஜெ, வணக்கம்.

கிராதம் அமுதம், அத்திரியை பக்தனாக்க எழுந்து வந்த பிச்சாடன் நின்ற நிலம், தொட்ட நீர், விட்ட மூச்சு, கண்கண்ட ஒளி, சூழ்ந்த திசை  எல்லாம் அமுதம். பிச்சாடனை இவ்வளவு அருகணைந்து அமுதமென உணர்ந்த தருணம் ஒன்று இல்லை.

கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள்
விராவு கொங்கை நற்றடம் படிந்தும்-என்னும் மாணிக்கவாசகரின் திருவாசகத்தேன் ஏதோ ஒரு அமுத போதை ஏற்றி அழுத்தும் அந்த போதையில் இருந்து எழுந்து தெளிந்து அப்பனாய் மதலையாய் கிராதனைக்காணும் காட்சியை இன்று படைத்துவிட்டீர்கள். கிராதனை அப்பனாய் மதலையாய் காணும்வரை உள்ளம் அம்பு ஏற்றப்பட்ட வில்போல்தான் முறுக்கேறி நிற்கின்றது. அந்த எல்லையை காணும் இடத்தில்தான் உள்ளம் அம்பு விடப்பட்ட நாண் என உள்ளம் தளர்ந்து உருக வைக்கிறது. //அம்பு விடுபட்ட வில் என நாண் அதிர நிலையழிந்து துவண்ட அத்ரி//என்ற வரிகளில் அறியாமையின் முன்னும் அறிந்தபின்னும் என மனிதமனத்தின் நிலையை தெளிவுப்படுத்துகின்றீர்கள். நன்றி

மனிதமனம் நான் என்ற ஒரு அம்பை எப்போதும் தனது உள்ளத்தில் ஏற்றி எதிரியை நோக்கி குறிவைத்துக்காத்திருக்கிறது. அதனால் மனித மனம் விண்ணென்று அதிர்ந்து விறைத்து நிற்கின்றது அதனால் எதையும் அறியமுடியவில்லை. அந்த நான்விடுபம் தருணத்தில் உண்மை உணர்த்தப்படுகிறது. சௌகந்திக்காட்டிற்கு வரும் கிராதனை நோக்கி நிற்கும் ஒவ்வொரு சீவனும் அம்பு  ஏற்றப்பட்ட வில்லெனதான் நிற்கின்றது. ஒவ்வொரு அசைவையும் எழுத்தில் கொண்டுவந்து நான்களின் நாணால் ஆனவில் துடிக்கும் துடிப்பை காட்டுகின்றீர். அத்திரிமுனிவர் உச்சம். அத்திரிமுனிவரிடம் இருந்த நான் என்ற அம்பு, அத்திரியின் பத்தினி அன்னை அனுசுயயிடம் இல்லை அது கிராதனை குறிவைக்க வில்லை மாறாக ஏற்றுக்கொண்டு தன்னில் தான் என உணர்ந்து கனிந்து அன்னை என நிறைகின்றது.

அத்திரி முனிவரின் நான் வேதம் கற்ற மேதமையால் வந்தது, அதனால் படைக்கப்பட்ட தூய்மையால் வந்தது. அந்த தூய்மையை கிராதன் எந்தவித தூய்மையும் இல்லாத தன் குணத்தால் அழிக்கின்றான். தூய்மை இல்லாமைக்குள் இருக்கும் ஒரு தூய்மை அவன் என்பதை இருமையின் இருபெரும் வெளியில் நின்று நடித்துக்காட்டுகின்றான். காமம் எழுந்த குறியோடு வந்து காமமே இல்லா கண்ணோடு பேசுகின்றான். காமம் இல்லா கண்ணோடு வந்து காமம் எழும் முலைக்கண்ணோடு முனிபத்தினிகளை அலைகழிக்கிறான்.   

உண்மையில் தூய்மை என்பது என்ன?  உள்ளே காமம் மறைந்திருக்க வெளியே ஒளிவிடும் கற்பா? உள்ளே களியாட்டம் நிறைந்திருக்க வெளியே துளிர்விடும் அமைதியா? உள்ளே காட்டை மறைத்து வெளியே திசைகளை வெட்டவெளியை அசைபோடுதலா? இல்லை. காமமும் கற்பும் தாண்டி அன்னை என்று நிற்கும் நிலை உண்மையான தூய்மை. களியாட்டும் அமைதியும் தாண்டி மோனத்தில் நிற்கும் நிலை உண்மையான தூய்மை. காட்டையும் வெளியையும் அசைபோடுதலைவிட்டு கன்றுக்கு பால்சொரியும்நிலை உண்மையான தூய்மை. நோயோடு வந்தாலும் நோய் இல்லா வாழ்வருளும் கிராதன். நாயொடு வந்தாலும் வேட்டையாட உளநிலையில் உளாவும் கிராதன். நிர்வாணமாய் வந்தாலும் மகவென்று நடக்கும் கிராதன். அன்னை அனுசுயை மட்டும் அதை அறிந்து அன்னை என்று நிற்பதால் அவர் மட்டும் அறிகின்றார் உண்மையான தூய்மையை. அன்னை அனுசுயையின் தூய்மையில் இருந்து அத்திரி தூய்மை அடைகின்றார். மேதாவை பிரமனை புணரச்சொன்ன அத்திரியின் அழுக்கு இன்று கழுவப்படுகிறது. இப்பொழுதுதான் அத்திரி சொல்லின் தூய்மையில் இருந்து பொருளின் தூய்மையை அறிகின்றார். கிராதசிவத்திற்கு ஒரு பக்தனாக நிற்கின்றார்.

எத்தனை கற்றாலும் உள்ளம் தூய்மை அடையாமல் உண்மை அறியமுடியாது. உண்மை அறிந்தபின்பு தெய்வத்தை பணியாமல் இருக்க முடியாது. 

//அழுதபடியும் சிரித்தபடியும் ஓடிச்சென்று அவர் அந்த உருளைக்கல்லை எடுத்து அந்த இடத்திலேயே சிவக்குறியாக நிறுவினார். “இது கிராதசிவம்!” என்றார்.//

மெய்தான் அரும்பி விதிர்விதிர்து உன்விரையார் கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்த்துன்னைப் போற்ற சயசய போற்றியென்னும்
கைதான் நெகிழவிடேன் உடையாய் என்னைக் கண்டுக்கொள்ளே –திருவாசகத்தேன். 

ராமராஜன் மாணிக்கவேல்