Friday, October 21, 2016

உண்பது




அன்புள்ள ஜெ. வணக்கம்.

கரிபிளந்தெழல் என்னும் கிராதம் நாவலின் முதல் அத்தியாய தலைப்பே நாவலின் ஆதி அந்தத்தை காட்டுகின்றதுகரியை மரகரி என்றுக்கொண்டால் அதை பிளந்து அனல் எழும். கரியை மதகரி எனக்கொண்டால் அதை பிளந்து சிவம் எழும். கரியை முககரி எனக்கண்டால் அதை தொடர்ந்து முருகு எழும். அனலும் அனல்வடிவ அண்ணலும் அனலண்ணல்  மதலையும் ஜோதிப்பிழ்பென்று நிற்கும் பிரம்மம்.

அருவமும் உருவமும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரம்மாய் நின்றி சோதிப்பிழம்பதோர் மேனியாகிக்
கருணைசேர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய-கந்தபுராணம்.

பிரமத்தின் துளியாகி மண்ணில் சொட்டி நிற்கும் உயிர்களில் மனிதன் உடலென்று சொல்லென்று மனமென்று அழுந்தி அழுந்தி ஆழத்தில் நிலக்கரியென்று நிற்கின்றான். அந்த அழுந்திய நிலக்கரியில் ஒரு சிறுபொறி விழுந்தால் கரிபிளந்து அனலெழுந்து கரியென்று அனலென்று இரண்டில்லா ஒன்றாய் சோதி என்று நிற்கும்.  மனிதனும் தன்னை உணரும் அந்த தருணத்தில் சீவனென்றும் சிவனென்றும் இரண்டில்லா ஒன்றாய் சிவமாகி நிற்கின்றான்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு-என்கின்றார் வள்ளுவர்.

நேற்று இருந்தான் இன்று இல்லை அதாவது, நேற்று இருந்தவன்போல் இன்று இருப்பவன் இல்லை.

வைசம்பாயனன் மானிடப்பெருங்கடலில் தானும் ஒரு துளியென ஒன்றி இணைந்து அசைந்து ஆடி களித்து பெரும்பொருள் எனஇருக்கும் நிலையில் அவனுக்குள் ஒரு தீப்பொறியை நீரோடை சூரியபிம்பம் எழுப்பிவிடுகின்றது. அங்கு உடைகிறது அவனது கட்டுகள், பெருங்கடலில் இருந்து பிரிந்து பிரிந்து சிறுதுளியென ஆகி, சிறுதுளியெ ஒரு கடலென எண்ணத்தால் ஆகிநிற்கின்றான்எரிகிறது அகம் எழுகிறது பிரம்மம் உணர்கிறான் இதுவல்ல தான் என்பதை. நான் இதுவல்ல என்பதை அறிகின்றான் ஆனால் நான் யார் என்பதை அறிந்திலன்.

மானிடர்கள் அனைவரையும் சூழ்ந்திருக்கும் இடர் இது. இதுவல்ல நான்? என்பது தெரியும் நான் யார் என்பது தெரியாது? இங்குதான் மனிதன் அலைகழிக்கப்படுகின்றான். இதுவரை இருந்த கூட்டத்தோடு கூட்டமாக இருக்கமுடியாது. இனி எங்கு சென்று யாரோடு கூடி இருப்பது என்றும் தெரியாது. அப்போது தோன்றும்  மனநிலைதான் ஊழ் எய்த அம்பா நான் என்பது. இந்த மனநிலை வந்தவனுக்கு குருவன்றி பற்றுக்கோடு ஏது?

குருவென்பவர் கரும்பாய் இருக்கவேண்டும் என்று மனம்விரும்பும் ஆனால் அவர் இருப்பாய் இருந்து இதயத்தை உடைத்தால் என்ன செய்வது? வைசம்பாயனர் விரும்புவது, நான் என்று தான் வைத்திருக்கும் தன்னை சிந்தாமல் சிதறாமல் கைப்பிடித்து அழைத்து சென்று களிக்கச்செய்யும் ஒருவனை.   ஆனால் நானை உடைக்கும் ஒருவர் அல்லவா குரு, நான் உடையும்தோறும் தான் உடைவதாய் சீடன் என்னுகின்றான். நான் உடையாமல் சீடனின் சிலைவெளிப்படாது என்பதை குரு அறிந்தே இருப்பதால்   நானென்று வந்து நிற்கும் சீடனின் நானுடைத்து நீயல்ல அது என்று காட்டுகின்றார் குரு.

சிலையாக நினைக்கும் கல், உளியிடம் இருந்து தப்பி எவ்வளவு தூரம் ஓடிவிடமுடியும். உளிவிழக்கூடாது என்று ஓடும் கல் உடைய வாய்ப்புள்ளதே அன்றி சிலையாக முடியாது.  கல் சிலையாக வேண்டும் என்றால் உளி உடைக்கும்வரை காத்திருக்கத்தான்வேண்டும். கல்லாக இருப்பது சுமை. சிலையாக வேண்டும் என்றால் வலி. சுமை கொடிதா? வலிக்கொடிதா? சுமை காலத்திற்கும் சுமைதான். வலி சுமைக்குறைக்க எழுவது, சுமை குறையும்வரை வலிப்பது, சுமைக்குறைந்ததும் வலியே சுகமாகும். தன் சுமையை தன்வலித்தாங்களில் கரைக்க குருவிடமே திரும்பிவரும் வைசம்பாயனன். வலி எல்லாம் தன்னைத்தான சுவைப்பது. தன்னைத்தான் சுவைப்பது எல்லாம் பிரம்மம்மே

//“காலத்தை உண்கிறான் பிரம்மன். வெளியை உண்கிறான் விண்ணோன். இனியவர்களே, ஊழிப்பெருக்கை உண்பவனோ உருத்திரன்.” அந்த வரிகளைத்தான் அவன் தன் கனவில் வேதமெனச் சொல்லி அவியூட்டினான். “வேதத்தை சுவைக்கின்றனர் தேவர்கள். மெய்மையை சுவைக்கின்றனர் தெய்வங்கள். இனியவர்களே, தன்னையே சுவைக்கிறது பிரம்மம்.” எங்கோ வாசித்தவை. முற்றிலும் மறந்து எங்கோ கிடந்தவை.//

சடங்கு வேள்வி வாழ்க்கையின் ஒரு பருக்கையை சுவைப்பதைக்காட்டுகின்றது. பிரபஞ்சவேள்வி தன்னையே ஆகுதியாக்கி விருந்துவைத்து உண்ணச்சொல்கிறது, குரு வடிவில் வந்து நிற்கும் பிச்சாடனார் எலியை நெருப்பில் வாட்டுவதன் மூலம் வைசம்பாயன சீடனை வாழ்க்கைவேள்ளிவில் ஆகுதியாக்கி பொசுக்குகின்றார். அவனை பொசிக்கி அவனுக்கே விருந்து வைக்கின்றார். அங்கு எலியாகி தீயில் எரிவது வைசம்பாயனே

குரு எத்தனை கொடியவர் அந்த கொடியவர் கிடைக்காவிட்டால் கோடியில் நாம் யார்? யாரும் காணாத கேட்காத பெரும்வனத்தில் மரத்தடியில் இறந்து பாதியுடல் மக்கி வெறும் சிறகாய் கிடைக்கும் குயிலன்றோ மானிட வாழ்க்கை? அந்த குயிலென்று தன்னை எங்கோ உணரும் தருணம் ஒன்று வைசம்பாயனர் அகத்தில் எழுந்திருக்கும் அந்த கணத்தில் தப்பி குருவிடம் தன்னை ஒப்படைக்கின்றார்.  தன் ராகத்தை படையல் வைக்கும் குயிலாய் பறக்க  தனக்கான குரு கிளையில் திரும்பி வந்து அமர்கின்றார். அந்த ஒரு கிளையை தவிர்த்து அவர் எங்கு சென்றாலும் மொத்த வனத்தின் மரங்களும் அவரை துரத்துமே அன்றி கிளையாவது இல்லை.

மரம் குயில் பறந்து சென்றதற்காக வருந்துவதும் இல்லை, திரும்பி வந்ததற்காக மகிழ்வதும் இல்லை. ஆனால் மரத்திடம் குயில் உட்கார கிளையும் உண்ண உணவும் இருக்கிறது.   

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.