Saturday, October 29, 2016

ஆணவத்தின் கதை
அன்புள்ள ஜெ,

இன்று தன்னைதானுண்டு அமையும் காலபைரவனின் கதையை வாசித்தேன். ஆனால் முதன்மையாக எனக்கு இக்கதை அத்ரி முனிவரில் முளைத்த ஆணவத்தின் கதையாகவே நினைவில் நிற்கிறது.

முதலில் அத்ரி தன் அறிவின்மேல் கொண்ட ஆணவத்தால் ஒரு பிழை செய்கிறார். அங்கு அவையோர் அவர் பிழையை எடுத்துரைக்கும்போது அவருக்கு ஒருவாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் அத்ரி அவ்வாய்ப்பை நழுவ விடுகிறார். மனிதர்கள் எப்போதும் இவ்வாறு தெரிந்தே செய்யும் தவறுகளை, சிறுமைகளை மறைக்கும் பொருட்டே ஆணவம் கொள்கின்றனர். பிழை என தெரிந்தும் ஆணவத்தின் பாதையை அத்ரி தேர்ந்தெடுக்கிறார்.

அங்கிருந்து அவரது ஆணவம் சருகில் அனலென மேதாதேவிக்கும் அங்கிருந்து பிரம்மனுக்கும் பரவுகிறது. இங்கு மேதையை புணர்ந்து பிரம்மன் உருவாக்கிய நிகருலகு இவ்வத்தியாயத்தில் என்னை மிகவும் கவர்ந்த பகுதிகளுள் ஒன்று. ஆணவத்தின் ஆழ்கனவுகளால் உருவாகும் இந்நிகருலகம் தன் ஒவ்வொரு துளியிலும் ஆணவத்தின் பேருருவையே வடிவமாய் கொண்டுள்ளது. ஆணவம் கொள்ளும் மிருகங்கள், தாவரங்கள் தங்கள் உடலின் எல்லையை மீறுவதன் மூலமே ஆணவம் கொள்கின்றன.

பேருருக் கொண்ட பல்லிகள், கழுகுக்கால்களும் புலிமுகமும் கொண்ட வெளவால்கள், வெண்கரடித்தோல் கொண்ட பேருரு யானைகள், கால்பெற்று நடக்கும் நாகங்கள், இடியோசை எழுப்பும் ஆமைகள், சிறகுகொண்ட சிம்மங்கள், நாக உடல் கொண்ட புலிகள், நடக்கும் மீன்கள், விளங்குகளை உன்னும் பெருமரங்கள், யானையை தூக்கி செல்லும் கருவண்டுகள், நண்டுக்கால்களுடன் நடக்கும் பேருருவ எறும்புகள், பறக்கும் முதலைகள் என எவ்வகையிலும் நெறிகளில்லா இவ்வுலகம் நடுங்க செய்கிறது.

இதை வாசித்து வருகையில் ஆணவம் கொண்ட மனிதன் தன் உடலை எவ்வாறு வகுத்துக் கொள்வான் எனும் சிறிய குறுகுறுப்பு ஏற்பட்டது. இதோ பெரும் சிறகும், கூர்நகங்களும், சிம்மமுகமும் கொண்ட பேருருவ மனிதர்கள் தோன்றப் போகிறார்கள் என கற்பனை செய்தேன். ஆனால் நிகருலகில் மனிதர்கள் வரவேயில்லை. ஏன் மனிதர்களுக்கு மட்டும் மாற்றுரு தரவில்லை என்ற கேள்வி எழுந்தது.

பிறகு யோசித்தபோதுதான் புரிந்தது, மனிதர்கள் கொள்ளும் ஆணவம் என்பது எளிய உடல்மீறல்களை கொண்டு அமைவதல்ல என்று. ஆம், விண்முட்டுமளவு வளர்ந்தாலும் மனிதனின் ஆணவம் நிறைவுறப் போவதில்லை. எனவேதான் புறஎல்லைகளை விடுத்து அகத்தில் தன் ஆணவத்தை வளர்க்கிறான் மனிதன். மனிதர்கள் ஏன் நிகருலகில் தோன்றவில்லை என்பதற்கான காரணமும் இதுவே. இக்கதை ஆரம்பிக்கும் அத்ரி முனிவர் முதல் இந்நிலத்தில் பிறந்தமைந்த அனைவரும் ஏதோவொரு கணத்தில் ஆணவம் கொண்ட மனிதனுக்கான சாட்சியங்களே. எனவே அதற்கு தனியாக உருவம் கொடுக்க வேண்டியதில்லை என தெளிவடைந்தேன்.

அன்பின் ஜெ. இவ்வத்தியாயத்தில் நான் மிகவும் ரசித்த முரணியக்கம், படைப்பு நிகழும் விதம் குறித்து வரும் வரிகள்:
நெறியிருக்கும் இடத்தில் களியாட்டமில்லை. களியாட்டில்லாது படைப்பெழுச்சியும் இல்லைஎன்றாள் மேதை.
ஆம், நெறியுடன் இயையா பேரறிவென்பது வெறும் பித்தே. இனி என்றும் நீ அவ்வாறே ஆகுக!” என்றது சிவம்.
இவ்வரிகளை வாசிக்கையில், எழுதும்போது தங்களில் கூடும் கடிவாளமிடப்பட்ட மிருகத்தைதான் நினைத்துக் கொண்டேன்.

பைரசிவத்தின் ஆணவத்தை முதற்சிவம் கண்டுசொல்வது பிறிதொரு அபாரமான இடம். பொதுவாக காலபைரவர் போன்ற உக்கிர தெய்வங்களின் தாண்டவத்தின்முன் திகைத்து நிற்பதே என்னை போன்ற எளியோரின் வழி. ஆனால் அந்நிலையிலும் பைரவனின் பிழையை கண்டு சொல்வதற்கு அபாரமான சமநிலை வேண்டும்.
முதற்சிவம் தன்முன் நிற்கும் தன்வடிவனிடம் தெய்வமே என்றாலும் ஆணவம் இழிவே என உறைப்பது அந்த சமநிலையும் தன்னுணர்வும் கொண்டதாலேயே.

பேருருக் கொண்டு நிற்கும் ஆணவத்தின் இழிவை அறிவதற்கு தன்னை விலகிநின்று பார்ப்பதே சிறந்த வழி. இறுதியில் பைரவசிவம் கப்பரையில் நிறைந்த தன்குருதியின் வாயிலாக தன்னுள் கரந்த ஆணவமெனும் நஞ்சை காண்கிறான். தன் ஆணவத்தை காண்பதே அதை வெல்வதற்கான முதற்படி. அதை உண்டு செறித்து அமைவதன் மூலம் காலபைரவன் விடுதலை பெறுகிறான்.

இப்படிக்கு அன்புடன்,
தே..பாரி