Friday, October 28, 2016

ஊனுண்ணி.





உலகில் ஊனுண்ணாதவர் எவரேனும் உளரா?

தாய் தன் மகவுக்கு  அவள் தன் உடலை உருக்கி அல்லவா பாலெனத் தருகிறாள். பாலென, தயிரென, நெய்யென கொள்வதெல்லாம், பசுக்  குருதியின் வெவ்வேறு வடிவங்கள் தானே?

இடம்பெயராது நின்றிருப்பதால் ஒரு தாவரம் உயிரில்லை என ஆகிவிடுமா? சோற்றுப் பருக்கைகள் நெல்லுயிரின் சிறு குழவிகளின்  உடல்கள் அல்லவாதாவரத்தின் நாவுகளான இலைகள் , அதன் கரங்களான வேர்கள், உடல் பகுதிகளான தண்டுகள், அதன் மகவுகளான கனிகள், விதைகள் போன்றவற்றை உண்ணும் நாம் உணவுக்காக உயிர்க்கொலை செய்வதில்லை எனச்சொல்ல முடியுமா?

உடலுழைப்பால் விளையும் எதுவும் உடலின் நீட்சிதானே. அப்படியென்றால் உழவர் உற்பித்த உணவுப்பொருட்கள் அவன் உடலின் பகுதியென ஏன் சொல்லக்கூடாதுஆக ஊனுணவு அல்லாத உணவென்பதே இல்லை. அதில் சிலவற்றை ஒதுக்கி சிலவற்றை ஏற்பது அவரவர் உளப்பாங்கேயன்றி அதில் உயர்வென்றும் தாழ்வென்றும் ஏதுமுளதா?

 
கையில் கிடைக்கும்  உயிர்களின்  உடல்களையெல்லாம் உண்டு புசிக்கும் ஒருவன் இருக்கிறான்இடுகாட்டுக்கு வரும் பிணங்களெல்லாம் அவனுக்கு உணவென ஆகின்றனஅந்த பித்தன் பிட்சையாக பிள்ளைக்கறி  கேட்டவன்தன் உடலை தானே அரிந்து உண்பவன். அவனுக்கு உண்ணக்கூடிய எவற்றிலும் உயர்வு தாழ்வில்லை.   தானன்றி வேறெதுவும் இல்லை எனக் காண்பவன் உண்பது தன் ஊனை மட்டுமே.

எல்லாம் தானெனென இருப்பவனை   தானென நாம் அறிகையில்    தன் ஊனை தான் உண்ணும் பெரும் பித்தனென  ஆகின்றோம்.
சிவோஹம்.

தண்டபாணி துரைவேல்