Sunday, October 23, 2016

விலங்காயிருப்பதன் விடுதலை:



 

அன்புள்ள ஜெ,

இன்றைய கிராதத்தின் இவ்வரிகளைப் படித்து விட்டு சற்று திகைத்து அமர்ந்திருந்தேன். "விலங்கு என்பதை அவன் கற்ற குருநிலைகளில் தன்னை அறியாதது, எனவே பிரம்மம் என்பதை உணரவியலாதது என்றே சொல்லியிருந்தனர். புலன்களில் விடுதலையின்றி விலங்கிடப்பட்டது. முற்றிருளே அதன் முதற்குணம்.

ஆனால் அவரைப்பார்த்தபின் எதிரே வரும் விலங்குகளை நோக்கியபோது அவை முழுவிடுதலைகொண்டவை என்று தோன்றியது. காற்றுக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட மென்பஞ்சுத்துகள்கள் போலிருந்தன அவை. தானென்று உணரும் ஒன்றை அவை சுமந்தலையவில்லை. எனவே திசைதேடித் தவிக்கவில்லை. தானற்ற ஒன்றை கணம்தோறும் உணர்ந்து திகைத்து நெஞ்சழியவில்லை. விலங்கென்று ஆவதே விடுதலை போலும். கற்றுக்கற்று சென்றடையும் இடம் அதுவே என்றால் சொல்லென அமைந்து சுழற்றிக்கொண்டுசெல்லும் இம்மாயப்பெருக்கின் நோக்கம்தான் என்ன?" பிரயாகையில் இருந்தே என்னைத் துரத்தும் கேள்வி இது. வெய்யோனின் தீர்க்கதமஸ் பகுதி இதை இன்னும் தூண்டி விட்டிருந்தது. அப்பகுதி வந்த சமயத்தில் உங்களுக்கு எழுத வேண்டும் என நினைத்து நம் குழுமத்தில் மட்டுமே பகிர்ந்த ஒரு கடிதம் கீழே (இந்த வருடத் துவக்கத்தில் எழுதியது). உங்களிடம் பகிர வேண்டும் எனத் தோன்றியது.

விலங்காயிருப்பதன் விடுதலை:


இந்த புத்தாண்டு (2016) ஜெ குறிப்பிட்டிருப்பதைப் போன்று சற்று கலங்கித் தான் பிறந்திருக்கிறது. குறிப்பாக தீர்க்கதமசின் கதை மிகவும் சலனப்படுத்தியது. மிக எளிதாகத் தீர்க்கதமசை கூண்டிலேற்றி அச்சலனத்திலிருந்து வெளிவந்திருக்க இயலும். அவ்வாறு செய்தும் பார்த்தேன். பலனில்லை. அக்கதையின் எதோ ஒரு அம்சம் என்னை மிக மிகத் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறது.

தீர்க்கதமஸ்முடிவுறா இருள் என்று கருவிலேயே பெயர் பெற்று வருகிறார். இவரின் கதை முதற்கனலில் அம்பிகையின் வியாசருடனான இரவின் போது வருகிறது. அதில் மமதை உதத்யரால் அவரின் அனைத்தையும் உண்ணத் தூண்டும் பேரவாவின் தூல வடிவாக உருவாக்கப்படுகிறாள். எனவே உடலால் அவள் பிரகஸ்பதியை வேண்டாம் என்று சொன்னாலும் உள்ளத்தால் அவரை அணைவதை விரும்புகிறாள். அவளின் பேரவா என்னும் விழைவே தீர்க்கதமசின் ஆதார குணமாகிறது. ஆங்கிரசின் புதல்வர்களான உதத்யரும், பிரஹஸ்பதியும் குடலும், நாவும் போல, பசியும் தேடலும் போல இருந்தனர் என்று முதற்கனல் சொல்கிறது. இவர்களின் உறவில் பிறந்த தீர்க்கதமஸ் இவ்விரு குணங்களின் சங்கமமாகவே பிறக்கிறார். அவரிடம் வெளிப்படுவதே இரண்டே இரண்டு உணர்ச்சிகள் தாம். கட்டற்ற பசி, கட்டற்ற காமம். ஆதியுணர்ச்சிகள். அனைத்து விலங்குகளுக்கும் பொதுவான உணர்ச்சிகள்.

அவரும் தன்னை அந்த விலங்குகளில் ஒருவராகவே வைத்துப் பார்க்கிறார். அவர் கற்ற வேதமெல்லாம் விலங்குகளின் ஒலியிலேயே, ஆதி ஒலியிலேயே வெளிப்படுவதால் தான் அவர் எண்ணியதை அவர் வேதச் சொல் நிலை நாட்டுகிறது. அவர் மானுடராக, மானுட நாவில் வேதத்தை உச்சரிக்கவில்லை. அவ்வேதப் பகுதிகளை மானுடம் அறிந்து கொண்ட அந்த ஆதி விலங்கின் குரலில் உச்சரிக்கிறார். எனவே தான் அவரின் வருண மந்திரத்திற்கு மழை பொழிகிறது. அவர் எந்த உறவுகளிலும் இல்லை. அனைத்தையும் தனக்காக மட்டுமே உறிஞ்சிக் கொள்வதே தன்னறம் என்று கொண்டிருக்கிறார்.

ஆச்சரியம் என்னவென்றால் அவருடன் உறவு கொண்டாடியவர்களும் தங்களை கட்டற்ற ஒரு விலங்காக, தம்மைச் செலுத்தவேண்டிய ஆதியுணர்ச்சியை அறிந்தவர்களாக, அதில் நிறைவுற்றவர்களாக ஆவது தான். அவரின் மனைவியான பிரத்தோஷி தன் அழகின்மையால் அவரின் மனைவியாக்கப் பட்ட தன் ஊழை நொந்து வாழ்ந்து அவரின் ஏவலாளாக எஞ்சுகிறாள். அந்த வஞ்சமே அவரை பரிசலில் தனியாக அனுப்புகையில் தான் வெறும் ஒரு அன்னை விலங்கு மட்டுமே என்று அவளை எண்ண வைக்கிறது.


ஆனால் அசுர குல வாலியின் மனைவி சுதேஷணையும் அவள் தோழிகளும் பூரண காமத்தை முழுதுணர்வதால் விடுதலை அடைந்தவர்கள் ஆகிறார்கள். அவர்களுக்குள் உள்ள ஆதி விலங்கால் மட்டுமே அந்த காமத்தைத் தாங்க இயலும். அந்த ஆதி விலங்கின் கொண்டாட்டத்தை உணர்ந்தவர்கள் மட்டுமே தன்னுள் தான் நிரம்பி அமைகிறார்கள். தங்களுக்குள் ஒரு விடுதலையை உணர்கிறார்கள். சுதேஷணையின் அந்த விடுதலைக்கு முதற்காரணம் அவள் இந்த பிரபஞ்ச நடனத்தில் பெண் எனத் தனது இடத்தை அறிந்து கொண்டதும், ஆண் என்பதன் வரையறையைப் புரிந்து கொண்டதுமே.

ஆண் என்பது முதன்மையாக தந்தை. காமமென்பது முதன்மையாக ஆண்மை. ஆண்மை என்பது முதன்மையாக கனிவின்மை. உவகை என்பது வெறும் விலங்காக எஞ்சுவது’, என்று மிகத் தெளிவாக வரையறுக்கிறது வெண்முரசு. அந்த வரிசையைப் பாருங்கள். முதலில் தந்தைஅடுத்த தலைமுறையை உருவாக்குவது என்பதற்கு மேல் இதில் வேறு எந்த பொருளையும் கொள்ள இயலாது. அதற்கான கருவியே காமம். இரண்டாவது ஆண்மைகாமத்தில் ஆடும் இருவரும் கனிவு இல்லாமல், தன்னினைவு இல்லாமல் ஒருவரை ஒருவர் உண்ணும் வேட்கை மட்டுமே கொண்டவர்களாக எஞ்சும் போதே காமம் தன் முழுப் பொருளையும் அடைகிறது. மூன்றாவது கனிவின்மைஇந்த வரிசையில் முக்கியமான வார்த்தை. கனிவு என்பது அன்பை முன்னிறுத்துவது. அன்பு ஒளியால் ஆனது. இந்த உலகமாகவும், அதில் உள்ள மானுட சமூகங்களாகவும், அதன் கலாச்சாரங்களாகவும் மாறி நிற்கும் மாயை கனிவே. காமம் இருளின் வழி. அங்கே கனிவுக்கு இடமில்லை. தக்கன பிழைக்கும் காட்டின் நீதியே அங்கு செல்லுபடியாகும். அதை முழுமையாக உணர்ந்து, விலங்காக எஞ்சுவதே உண்மையான உவகை.


உண்மையில் தீர்க்கதமஸ் நம்மைப் பார்த்து நவீன கவிதையில் பேசியிருந்தால் இவ்வரிகள் வந்திருக்கும்.

சென்று வாருங்கள், உபயோகமற்ற பொருட்களே
நீங்கள்
இன்னொரு ஆறைபோல் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்
எப்போது வேண்டுமானாலும் திரும்பி வாருங்கள்
வந்து,
மீண்டும் மீண்டும்
அன்பின் தோல்வியைக் காணுங்கள்.’ – உபயோகமில்லா பொருட்கள்தேவதச்சன்.


இந்த கவிதையின் விவாதத்தில் தேவதச்சன் குறிப்பிட்ட, ‘அன்புக்கு பின்புலமாக அன்பை விட மகத்தான உணர்வு ஒன்று இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். மீண்டும் மீண்டும் சிந்தித்து அன்பை விட மகத்தான அந்த ஒன்று சுதந்திரம் என்று கண்டுபிடித்தேன். அன்புக்கும், தன் நிலையில் இருக்ககூடிய சுதந்திரத்துக்கும் முரண்பாடு வருமாயின், சுதந்திரத்தையே தேர்ந்தெடுக்கவேண்டும்என்ற தரிசனத்தின் வாழ்ந்து மறைந்த உதாரணமே தீர்க்கதமசும், சுதேஷ்ணை உட்பட நிறைவடைந்த பெண்களும். உண்மையில் நாம் அசூயை கொள்ளும் பிறரிடத்தில் இருப்பது நம்மிடம் இல்லாத சுதந்திரமே. அவர்களின் தளைகள் நமக்குத் தெரிவதில்லை. ஆனால் நம்மைத் தளைத்திருக்கும் தறிகளில் எவையெல்லாம் அவர்களுக்கு இல்லை என்பது நமக்கு உடனடியாகத் தெரிவதாலேயே அசூயை கொள்கிறோம். இந்த தளைகள் அனைத்தும் இழக்க இழக்க நாம் சென்று சேரும் இடம் தூய விலங்கு நிலையே. அங்கு அனுபவிப்பதே முழு விடுதலை.


ஆனால் நாம் எதையும் உணர இயலாமல், நிலைகொள்ளாமல் நிற்கிறோம். ஏன்? அசுர குல வாலியின் மனைவி சுதேஷணை அடைவது இதே வகைக் குழப்பம். ‘வெறும் கருவைச் சுமக்கும் ஊன் தேரா?’ என்ற அவளின் வினாவை என்பதை சற்று நீட்டித்தால் இன்றும் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டையின் ஆதி வேரை அடைந்து விடலாம்(முதல் பெண்ணியவாதி...). அதை மொத்த மானுடத்துக்கும் நீட்டித்தால் அவரவர் வாழ்வின் அர்த்தம் என்ன என்ற மெய்ஞானத் தேடலைச் சென்று சேர்ந்து விடலாம். அந்த ஞானத் தேடலின் உக்கிரத்தைத் தாங்க இயலாது, கொண்ட கேள்விகளுக்கு விடையும் கண்டடைய இயலாமல் இருப்பவர்களுக்கு வெண்முரசு ஒரு முதிய சேடி வாயிலாக மிகப் பொருத்தமான நடைமுறைவாத பதிலைத் தருகிறது.  ‘விழி தொடும் எல்லையை தெய்வங்கள் வகுத்தளிக்கின்றன. உன் உளம் தொடும் எல்லையை நீயே வகுத்துக் கொண்டால் அறங்கள் எளிதாகின்றன. விரிந்து பரவுபவர் எங்கும் நிலைகொள்ள முடியாதவர். எத்திசையும் செல்ல முடியாதவர்.குறைந்த பட்சம் நமது எல்லையுணர்கையில் குவிய வேண்டிய ஒரு புள்ளியாவது தென்படும். நாமும் நிலை கொள்ளலாம்.


அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்