Saturday, October 22, 2016

சிவம்




அன்புள்ள ஜெ,

கிராதம் என்ற பெயரும் அதன் விளக்கமும், அதன் உச்சமான அர்ஜுனன் பாசுபதத்தை அறியும் தருணமும் எனக்குள் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தி இருந்தன. நான் சைவன். ஆனால் அப்படி என்னை உணரத்துவங்கி சில மாதங்களே ஆகின்றன. என்னால் பக்தி மார்க்கமாக அறிய இயலவில்லை. சித்தாந்தங்களின் விளக்கங்களோ ஒரு மாதிரி சலிப்பு தந்தன. (இவை என் குறைபாடுகளே என்பதையும் உணர்கிறேன்). இரு மாதங்களுக்கு முன்பு என்னுடைய வீட்டில் திருவாசகத்தை ஒரு நாளில் முற்றோதல் செய்தேன். அதைத் தொடர்ந்து நம்முடைய வெண்முரசு கூட்டம் நடைபெறும் சௌந்தரின் யோகா மையத்திலும் திருவாசகம் முற்றோதல் தொடர்ந்தது. சைவத்தின் நெறிகள், அவற்றின் தத்துவங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என விழைந்த எனக்கு கிராதம் அவற்றை நல்குமா என்ற குறுகுறுப்பே நான் முதலில் சொன்னது. மிக்க நன்றி ஜெ. கிராதம் அந்த வழியில் அபாரமாக நடையிடத் துவங்கி விட்டது.

இரு நாட்களுக்கு முன் ஸ்ரீனிவாசன் சாருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரும் இதையே சொன்னார். ‘பாருங்க அருணாச்சலம், திருவாசகம்னு உங்க வீட்டுல தொடங்குனோம். இப்போ சிவமே நமக்கு முன்னால வந்து நிக்குது. இதெல்லாம் எங்கேயோ ஒண்ணோட ஒண்ணு சம்பந்தப்பட்டதா தெரியல’!!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்