Wednesday, October 26, 2016

எதிரொலி

அன்புநிறை ஜெ,

நலமாக இருக்கிறீர்களா.

சில நாட்களாக கடிதம் எழுதுவதும், அதை அனுப்பும் முன்னர் அடுத்த நாளே, வாய்திறந்து கூவாத வார்த்தை மலைமுகட்டில் எதிரொலித்தாற் போல, அதற்கு விடையாகவோ, வினாவை திசைதிருப்பியோ ஒரு பதிவு உங்கள் தளத்தில் வருவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அன்றாடங்களின் தளத்துக்கும், படைப்பின் தளத்துக்கும், ஆன்மீக தளத்துக்கும் உள்ள முரண்கள்(எனது சிற்றளவிலேதான்), நெருங்கியவர்கள் அதை என்றேனும் உணரும் போது விளக்க வார்த்தைகளின்றி தவிப்பதுமாய், அன்றுதான் ஒருநாள் வார்த்தையாய் உருப்பெற்றது. 'அந்த நான் வேறு - அறியத் துடிக்கும், எழுதத் துடிக்கும் இந்த நான் வேறு' - எனப் பேசியிருந்தேன். மறுநாள் காலை 'நான்கள்' பார்த்ததும், இவ்வளவு தெளிவாக தொகுத்துக்கொள்ள எவ்வளவு உழைப்பும் தெளிவும் இருக்க வேண்டுமென்ற பிரமிப்பும் தோன்றியது.

அடுத்தது - கிராதம் தொடங்குவதற்கு முன்னர் மீண்டும் சொல்வளர்காட்டில் சுற்றித் திரிந்து, மனதுக்குள் பாசுபதப் பயணம் குறித்த நினைவுகளோடும் கேள்விகளோடும் அலைந்துகொண்டிருந்தேன்
' கிராதம் என்பது ஒரு தேசமா. கிராதகன் என்ற சொல் இந்தக் காட்டாள் என்னும் பொருளில் இருந்து வந்ததா. கிராதன் சிவமா கிராதனாக மாறப்போகிறானா அர்ஜுனன்' என ஏதேதோ..

யுதிஷ்டிரனின் வேள்விக்களமாக இருக்கும் சொல்வளர்காட்டில்  உடன்வரும் நிழல்போல தன்னை வெளிக்காட்டாமல் இருக்கும் பார்த்தனை நினைத்து வியந்து கொண்டிருந்தேன். எச்சொல் செலுத்தும் இவ்வில்லாளனை பாசுபதம் நோக்கி என ஓடிக் கொண்டிருந்ததுஎந்த குருநிலையும் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தாது போலிருந்தது அவனுக்கு. இவையனைத்தும் அறிந்து கடந்திருப்பான் பார்த்தன், அல்லது இதுவல்ல அவனது மெய்யறிதலின் வழி. அவனுக்குத்தான் அணுக்கனாய் ஆசிரியன் இருக்கிறானே - பேறு பெற்றவன்! கதன் என்ற சூதன் சொல்வது போல ஒரு பறவையின் இரு சிறகுகள் தானே. புதிய வேதத்தின் முதல் மாணவன் அவன் - அதை நோக்கித்தானே அவன் பயணமிருக்கும்.' - இப்படியாக எழுதிக் கொண்டிருக்க மறுநாள் காலை கிராதம் தொடங்கியிருந்தது.

பிச்சாண்டவர் குறித்துப்  படித்ததும் பல ஆண்டுகளுக்கு முன்னர் லா..ரா  இக்களத்தில் எழுதிய கதை ஒன்று (நெற்றிக் கண் என நினைக்கிறேன்) நினைவு வந்ததுஅவர் எழுதியது வேறு வகை. வேறு விதம். அதி சுந்தரனாய் வந்து தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்கிய சிவம், ஒரு பெண்ணின் அணுகமுடியாமையில் திகைக்கும் களம்.

எனில் தங்கள் எழுத்தில் பிச்சாண்டவரைப் பார்த்ததும் மனம் இருநாளாய் சிவம் மேல் பித்துக் கொண்டிருந்தது. காய்தழல் ஏந்திய பித்தன் தன்னைக் காதலிப்பாள் எங்கள் அன்னை. பேயவள் பெற்ற மக்கள் வேறு எப்படி இருப்பாள்.

இன்றுகாலை வந்திறங்கியது சிவம் அத்ரி அனசூயையின் சௌகந்திகத்திற்கு.
சௌகந்திகம்தான் தாருகவனமா?
இதுவரை மனதுக்குள் இருந்த அனசூயை கதையும் தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்கிய சிவத்தின் சித்தரிப்பும் - இது இப்படித்தான் இருந்திருக்க வேண்டுமென மாறிப்போயிற்று.
அனைத்தும் கடந்த ஆதியை பாலகனாய்க் கண்ட அனசூயை. குழந்தையாய்ப் பரம்பொருளைக் காண உருமாற்றம் செய்யத் தேவையில்லை; உள்நிகழும் தாய்மையெனும் உளமாற்றம் போதும்.

எதையும் எண்ணுவதற்கும் எழுதுவதற்கும் அவசியமற்றுப் போனதுபோல இருக்கிறது.

எழுதிக் கொண்டே இருங்கள்வேறென்ன வேண்டும்!!
மிக்க அன்புடன்,
சுபா