Thursday, October 27, 2016

சித்தம் ஆடைகளற்றது.





அதில் அறிவுகளால் நெய்யப்பட்ட  ஆடையை அணிவிக்கிறோம்வித விதமான ஞானங்கள் என்னும் ஆடைகள். ஒன்றின் மேல் ஒன்றாக பலவித அடுக்குகளாக ஆடைகள்.

ஆடைகளை அணிவிக்க முடிந்த நம்மால் அவிழ்க்கமுடிவதில்லை. நம் சித்தம் ஆடைக்குவியலின் உள்ளே சிக்கித்தவிக்கிறது. வெளிவரும் வழிதெரியாமல் அதில் தொலைந்து இருக்கிறதுஅதை விடுத்து வெளிவர அஞ்சுகிறது நம் சித்தம். அந்த ஆடைச்  சிறையில் கட்டுண்டிருப்பது  பழகி அதுவே இயல்பெனக் கொள்கிறது அகம்

அந்த ஆடைகள் வழியாக குறைகாட்சிகளையே நாம் காண்கிறோம். ஆடைகளை ஊடுருவி சிதைந்து வரும் சத்தத்தையே கேட்கிறோம்ஆடைகளின் வாசத்தால் மாற்றப்பட்ட  நறுமணமே நாம் நுகர்வது. ஆடைகளில் வடித்தெடுக்கப்பட்டதையே உண்கிறோம். அவ்வாடைகளின் உள்ளிருந்தே அனைத்தையும் தொட்டறிகிறோம்நாம் உலக அறிவெனக் கொள்வதெல்லாம்  அந்த ஆடைகள்வழி கிடைப்பதையே

ஆடைகளற்றவன் எதிர் வருகையில் அவனைக்காண்பதில்  எதிர்கொள்வதில் அதிர்ச்சி அடைகிறோம்.
அவனோ தன் அறிவுகளை எரித்தெஞ்சிய சாம்பல் பூசி இருக்கிறான். ஆடைகளற்றதால்  அவன் இலகுவாக   சுழன்றாடிக் களிக்கிறான்அவன் ஆகாயத்தையே ஆடையென அணிந்திருக்கிறான்.

அதை சகிக்க இயலாமல் அவனைப் பித்தன் என்கிறோம். அவனை அருவருக்கிறோம். அவனை அஞ்சுகிறோம்,அவனை நம் அருகில் விடாமல் கல்லெறிந்து துரத்துகிறோம். ஏன் அவன் அப்படி என அறியாமல் குழம்புகிறோம்.

நம் ஆடைகளை துறந்தாலன்றி அவனை முழுதறிய நம்மால் முடியாது. அப்படி நம் அனைத்தறிவையும் அவிழ்த்தெறிந்து அவனை அறிகையில் நாம் அவனாகி இருப்போம். ஆம் அப்போது அவனே நாம்

சிவோஹம்.
தண்டபாணிதுரைவேல்