பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,
குருபூர்ணிமாதின வணக்கம். வெண்முரசு காவியம் நிறைவதையொட்டி இன்று நடந்த காலை,மாலை காணொளிக்காட்சிகளை நேரடியாக கண்டும் கேட்டும் உணரும் பாக்கியம் கிடைத்தற்கு.மிக்க நன்றி.ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்தி தமிழ் மொழிக்கு மேலும் பெருமை சேர்த்துவிட்டீர்கள்.
இன்று முழுதும் உங்களுடன் நேரில் இருந்தது போன்றதொரு கொண்டாட்டம்!. உலகமெங்கும் உள்ள உங்களின் பலதரப்பட்ட வாசகர்களின் கருத்துக்களை அவர்களின் உணர்ச்சி பொங்கும் பரவசமான முகத்துடன் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அத்துடன் உங்களின் விளக்கங்களையும் எங்களின் புரிதல்களையும் ஒப்பிட்டுப்பார்க்கும் வாய்ப்பும் இருந்ததை ஒரு பெரும் பேறாகவே எண்ணுகிறேன்.
இந்த உரையாடல்களை கேட்டதன் மூலம் உடனடியாக என்னுள் தோன்றும் ஒரு கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறேன். உரையாடலின் போது இந்த வெண்முரசு முழுவதையும் மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவதற்கு சிலர் தங்களை அணுகியதாவும் அதற்கு வேண்டிய பொருளுதவி மற்றவசதிகளையும் செய்து தருவதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினீர்கள்.இதை ஏற்றுக்கொண்டு ஆவன செய்யவேண்டும் என்பதை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.ஏனெனில் இங்கு இந்த காவியத்தை பலர் இந்துமத த்திற்கு மட்டும் உரியதாகவே பார்க்கிறார்களே தவிர இதில் உள்ள தமிழின் செழுமையையும்,பரந்து பட்ட நமது பாரத நாட்டின் பெருமையையும் வரலாற்றையும் சற்றும் புரிந்து கொள்ளவில்லை.
நீங்களே ஒரு பதிலில் ஆவேசப்பட்டீர்கள் நவீன இலக்கியத்திற்கும் இந்த மாதிரி இதிகாசங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று சில மூடர்கூட்டம் கூறி வருகிறது அதை மறுத்து கேள்விகேட்க இங்கு யாரும் இல்லை என்று.ஏற்கனவே பகுத்தறிவு என்ற பெயரில் பல பழந்தமிழ் காவியங்களை கற்கும் வாய்ப்பு பள்ளிகளில் இப்போது வெகுவாக இல்லாமல் போய்விட்டது.ஆகையால் இதன் அருமை தெரிபவர்களிடம் இது சென்று சேரட்டும்.
இறுதியாக இந்த விழாவை இவ்வளவு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிக்கிறேன்.
அன்புடன்,
அ .சேஷகிரி.