அன்புள்ள ஜெ,
பாண்டவர்கள் அடையும்
விண்ணுலகம் பற்றிய கடிதங்களைப் படித்தேன். சுவாரசியமான கடிதங்கள் அவை. பலகோணங்களில்
வெண்முரசுக்கான வாசிப்பு வந்தபடியே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாண்டவர்கள் அந்த
மகாப்பிரஸ்தானம் செல்லும்போது, கிளம்புவதற்கு முன், வசிட்டரிடம் சில அடிப்படை வினாக்களைக்
கேட்கிறார்கள். அந்தக் கேள்விகள் அத்தனைதூரம் வாழ்ந்து அத்தனைதூரம் சிந்தனைசெய்தபின்
அவர்களிடம் எஞ்சியிருப்பவை. அதற்கு வசிட்டர் பதில் சொல்லவில்லை. நீங்கள் கண்டுகொள்வீர்கள்
என்று சொல்கிறார். அர்ஜுனன் அந்த குகைக்குள் கிருஷ்ணனின் முடிவின்மையை கண்டடைகிறான்.
அது அவனுக்கான பதில். அந்த பதிலில் இருந்தே மேலே அவன் அடையும் சொர்க்கமும் அமைகிறது.
அதேபோல ஐந்துபேரும் ஐந்து விடைகளை கண்டடைந்து ஐந்து சொர்க்கங்களை அடைந்தார்கள் என்று
கொள்வது ஒரு நல்ல வாசிப்பாக இருக்குமென நினைக்கிறேன்
சாரங்கன்