Sunday, August 2, 2020

காந்தாரி



அன்புள்ள ஜெ,

வெண்முரசின் பழைய அத்தியாயங்களை ரேண்டமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த இடம் இன்று என்னை உலுக்கியது. திரௌபதி அவையில் அவமானப்படுத்தப்பட்ட பின்பு திருதராஷ்டிரர் பழைய வாரணவத நிகழ்ச்சியை எல்லாம் அறிகிறார்

அவன் எப்படி அதை செய்யத் துணிந்தான்? அவனை என் மகன் என்று எண்ணித் தருக்கினேனேஅவன் என் மகனே அல்ல. அவன்

என்று குமுறுகிறார் அதற்கு காந்தாரி என்று பதில் சொல்கிறார்

அவன் உங்கள் மைந்தன். ஆகவேதான் அவ்வாறு செய்தான். இன்று அவளை அவிழ்ந்த ஆடையுடன் என் மருகியர் அழைத்துவந்தனர். அவள் விம்மும் ஒலியைக் கேட்டபோது அது சம்படையின் குரல் என எண்ணினேன்”

அதைக்கேட்டு திருதராஷ்டிரர் திகைத்து பதறி அமர்ந்துவிடுகிறார். நாவலில் அடியோட்டமாக வந்துகொண்டே இருக்கும் பெண்களின் கதை, அவர்களின் வஞ்சம் மற்றும் கண்ணீரின் கதை அங்கே கூர்மையாக எழுந்துவிட்டு மீண்டும் உள்ளே செல்கிறது. அந்த இடத்தில் காந்தாரி பேசுவதெல்லாமே உக்கிரமாக உள்ளது

எழுந்து சென்று உடைவாளை உருவி அவன் கழுத்தில் பாய்ச்சியிருக்கவேண்டும் உங்கள் பிதாமகர். அந்த அவையில் நாக்கை இழுத்து அறுத்து விழுந்திருக்கவேண்டும் நீர். இனி எத்தனை சொற்களில் எத்தனை அறமுரைத்தாலும் அதன் பொருள் என்ன? வென்றது எந்த அரசியலும் அல்ல. வென்றது ஆண் எனும் கீழ்மை. பெற்று முலையூட்டி வளர்த்து மண்ணில் விட்ட அத்தனை அன்னையருக்கும் ஆயிரமாண்டுகாலமாக ஆண்கள் இழைக்கும் கீழ்மறம்

இந்த ஒற்றைச் சந்தர்ப்பமே ஒரு ஆவேசமான சிறுகதை. மொத்த மகாபாரதத்தையே தலைகீழாக ஆக்கும் இடம் இது. இந்த வரிகளிலிருந்துதான் காந்தாரியை நாம் புரிந்துகொள்ளவேண்டும். பின்னர் அவள் மொத்த கௌரவரின் அழிவையும் எப்படி இயல்பானது என்று எடுத்துக்கொண்டாள் என்பதற்கான அடித்தளம் இங்கே உள்ளது.

பாஸ்கர்