நேற்று இரவு ஒரு இனிய கனவு. சொல்வளர்காடு 14வது அத்தியாயம் படித்துவிட்டு அப்படியே உறங்கிவிட்டேன். அந்த இரவு வந்த கனவில் வெண்முரசை நம் தமிழ் நடிகர்கள் web series ல் நடித்துக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட Game of Thrones போன்று உலகம் முழுவதும் பல ரசிகர்களைக் கொண்டு மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. Web series க்கான ஆஸ்கர் விருது முதல் season க்கு கிடைத்துள்ளது. ஆனால் யதார்த்தத்தில் வெப் சீரிஸ்க்கு ஆஸ்கர் விருது இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.
இதில் முக்கியமாக சொல்ல வேண்டியது கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர்கள் குந்தியாக ரம்யா கிருஷ்ணன், சகுனியாக நாசர், தருமராக விக்ரம், சகாதேவனாக ஜீவா நகுலனாக விக்ரமின் மகன் (அலர் பெயர் எனக்கு தெரியவில்லை), கர்ணனாக மாதவன், திரௌபதியாக நயன்தாரா, பானுமதியாக அனுஷ்கா, கிருஷ்ணனாக என்.டி.ஆர் மற்றவர்கள் எனக்கு சரியாக நினைவில் இல்லை. காலையில் துயிலெழுந்ததும் இது கனவா என்று சிரித்துக்கொண்டேன்.
இப்பொழுது வரை வெண்முரசு திரையில் வெப் சீரிசாக வருவதைப்பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். அந்த கனவு யதார்த்த ரீதியில் சாத்தியம் தானா? இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பங்கள் உதவிக் கொண்டு சாத்தியமானாலும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப ஆட்கள் தேர்வு செய்வது மிக மிக கடினம் என்றே எண்ணுகிறேன். எழுத்தில் உள்ள அளவுக்கு பிரம்மாண்டம் திரையில் சாத்தியமாகுமா, பார்க்கும் மக்களுக்கு நாம் சொல்லும் கருத்து சரியாக சென்று சேருமா? அதன் தயாரிப்பு செலவு, ஒருங்கினைப்பு என நினைத்தாலே தலை சுற்றும் இவ்வளவு சிக்கலான காரியத்தை கனவு மிக எளிதாக ஒரு காட்சியில் கொண்டுவந்து நிறுத்திவிட்டது. கனவு இனிதே.
அன்புடன்
ரா. பாலசுந்தர்