Tuesday, August 11, 2020

உள்ளம்


ஜெ,

வெண்முரசில் சில சொற்கள் மந்திரம் போல அமையும். அந்த இடத்திலிருந்து அப்படியே எழுந்து மின்னி தெரியும்.

உள்ளம் என்பது இங்கு மண்ணுடன் ஒரு நுனியைப் பொருத்தி, துரியப்பெருவிரிவுக்கு அப்பால் நின்றிருக்கும் நுண்மையில் மறுநுனியைப் பொருத்தி நின்றிருக்கும் அலகிலி. பருவும் அருவும் முயங்கும் களம். அது இதுவாக ஆகவும் இது அதுவென்றறியவும் உள்ளமென்பதே ஊடகம். அதை இங்குள எதைக்கொண்டும் முற்றறியவியலாது. [பன்னிரு படைக்களம்]

இந்த வரியை நான் வாசித்துக் கொண்டே இருக்கிறேன். உள்ளம் என்பதன் ஒரு முனைதான் இங்கே, அன்றாடத்தில் இருக்கிறது. இன்னொரு பக்கம் எங்கோ சென்று சென்று கடைசியில் துரியாதீதத்தில் நின்றிருக்கிறது. உள்ளம் என்பது இங்கே இருக்கும் பருப்பொருளும் அந்த பரம்பொருளும் [அல்லது கான்சியஸ். அது கலெக்டிவ் கான்சியஸ் அல்லது காஸ்மிக் கான்சியஸ் எதுவானாலும்] சங்கமிக்கும் இடம். பிரம்மம் புறவுலகமாவதற்கும் உள்ளம் பிரம்மமே தான் என உணர்வதற்கும் உள்ளமே ஊடகம். ஆகவே உள்ளத்தை உலகிலுள்ள எதையும்கொண்டு முழுமையாக அறிய முடியாது. அலகிலி என்ற சொல் அற்புதமானது. எல்லையில்லாதது அல்ல. அளவுகளே இல்லாதது. வெளிநாட்டு உளவியல்கொள்கைகளுக்கும் நம் உளவியல் கொள்கைகளுக்குமான வேறுபாடு இதுதான்

ராஜன் முருகேசன்