Tuesday, August 11, 2020

மஹா சேஷநாசினி யாகம்



https://assets.jeyamohan.in/wp-content/uploads/2014/01/YGS.jpg

இனிய ஜெயம் 

வங்கத்தில் தாகூர் சாந்திநிகேதன் ஓவிய மரபில் உருவாக்கிய மறுமலர்ச்சி, பாரதம் எங்கும் செலுத்திய தாக்கம், தமிழ் நிலத்தில் அதன் வீரியம் அதன் வீரியம் குறைவே என்று தோன்றுகிறது. ஒப்புநோக்க மலையாள நிலம் செழிப்பாகவே இருக்கிறது. 

சிக்கல் தமிழ் நிலத்தில் பரவிய தனித்தமிழ் எனும் பண்பாட்டுக் கூறுடன் இணைந்த ஒன்று என எண்ணுகிறேன். தமிழ் தாத்தா சங்க இலக்கியங்களை மைய நீரோட்டத்தில் சேர்த்த அதே சூழலில்தான், மகாபாரதம் மீது பாராமுகம் இருந்தது. கும்பகோணம் பதிப்பு ஒரு வாழ்நாளை விழுங்கி வெளியாக வேண்டிய அளவு பாராமுகம். 

அப்படி தமிழில்உருவான சங்கத் தமிழ் மறுமலர்ச்சி வேறு இணை கலைகளில் என்ன பாதிப்பு செலுத்தியது? உதாரணமாக பெரிய புராணத்தில் இருந்து கிளர்ந்ததே தாராசுர கோவிலின் கலை மேன்மை. காலம் வேறு எனினும் சங்க இலக்கிய சித்திரங்கள் சமகால அச்சு மற்றும் ஓவியத்தில் சிறிய அளவில் கூட தாக்கம் செலுத்த வில்லை. 

மாறாக அன்றே மகாபாரதமும் தனித் தமிழ் போல மைய நீரோட்டத்தில் இருந்திருந்தால் அது ஓவியம் போன்ற பிற கலைகளில் மிகுந்த தாக்கம் செலுத்தி இருக்கும். நாடகம் ஓவியம் போல பிற கலைகள் உத்வேகம் கொண்டு மறு உருவாக்கம் செய்ய பல்லாயிரம் தருணங்கள் அடங்கியது பாரதம். 

உதாரணம் வெண்முரசில் வரும் இந்த சர்ப்ப வேள்வி. எத்தனை நுணுக்கமும் ப்ரும்மாண்டமும் கொண்ட சித்தரிப்பு. கண்ணீர் துளிகள் போல வைரங்கள், குருதிச் சொட்டுகள் போல ரத்தினங்கள், விந்து சொட்டுகள் போல முத்துக்கள், மீன்கள், காகங்கள் அவிஸ் என பொழியப்படும் அதர்வ வேள்வி. காமம் க்ரோதம் உள்ளிட்ட ஆற்றல்கள் உட்பட பல கோடி அரவங்கள் வந்து விழுந்து கொண்டிருக்கிறது. இறுதியாக வருகிறான் அரவங்களின் அரசன் தட்சன்.

பெனாரமிக் வியூ எனும் முறையில் ஒரு விரிந்த களத்தில் இருக்கும் நிகழும் அனைத்தையும் காட்சிப்படுத்திக்கிறது இந்த நான்காவது ஓவியம். அரச பீடம், சுற்றிலும் மக்கள், மைய்யத்தில் பெரும் யாக குண்டம், வீண் தொட முயலும் தழலெரி, வந்து விழும் அரவன்களின் தொடர்ச்சியாக, இறுதியாக நிற்கிறது மாநாகம் தட்சன் .  தட்சன் கீழே மிக மிக சிறியதாக யாரோ இருவர் அரச நாகத்தின் ஆகிருதியை காட்டுகிறார்கள்.  யாக நெருப்பின் ஒளியில் தட்சனின் பத்தியும் உடலும் தழல் என ஒளிர்கிறது. 

பாரதம் எங்கும் தெரிந்த தொன்மக் கதைக்கு தமிழ் நிலம் வசம்  இருக்கும் மிக சில சித்திரங்களில் ஒன்று இந்த அழகான ஓவியம். 

கடலூர் சீனு