Tuesday, August 4, 2020

மனம் உணர்தல்


அன்புள்ள ஜெ

வெண்முரசு ஒரு புராணக்கதை. ஆனால் அன்றாடவாழ்க்கையில் நாமறியும் உணர்ச்சிகளால் நிறைந்திருக்கிறது. அது புராணமாக இருப்பதனால் அன்றாட உணர்ச்சிகள் அதில் இன்னும் கூர்மையாகத் திரண்டிருக்கின்றன. ஏனென்றால் அந்தக்கதை நடக்கும் சூழலோ அந்த சந்தர்ப்பமோ முக்கியமே இல்லை. அந்த உணர்ச்சிகள்தான் முக்கியம்.

பிரயாகையில் சுநீதியின் நிலையை கண்டு உத்தான பாதன் அடையும் உருக்கம் எனக்கு என் வாழ்க்கையில் மிக நெருக்கமான ஒன்று. நான் அதன்வழியாக கடந்துவந்தேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு என் மகன் மறைந்தபோது.

இழக்கப்பட்டவை பேருருவம் எடுக்கும்கலை அறிந்தவை. அவள் விலகிச்சென்றபின் அவன் அறிந்தான், அவளே தன் அகத்தின் பெண்மைப்பேருருவம்என. அன்னை அருகிருக்கிறாள் என்ற உறுதியால் விளையாட்டுப்பாவை நோக்கிச் சென்ற குழந்தைதான் என. ஒருபோதும் அவளை அன்றி இன்னொருத்தியை அவன் உள்ளம் பொருட்படுத்தியதே இல்லை.அவளால் விரும்பப்படுபவன் என்பதையே தன் தகுதியாக எண்ணிக்கொண்டிருந்தது அவன் அகம். அவளிருக்கிறாள்என்பதையே தன் அடித்தளமாகக் கொண்டிருந்தது அதில் திகழ்ந்த அச்சம். பதற்றமும் பரிதவிப்புமாகதன் அத்தனை கரங்களாலும் அவளுடைய வாயில்களை முட்டிக்கொண்டிருந்தான். அவை முன்னரே சுவர்களாகஆகிவிட்டிருந்தன.என்று அவன் உணர்கிறான். இழக்கப்பட்டவை பேருருவம் எடுக்கும் கலை அறிந்தவை. என்ற வரி என்னை பைத்தியமாக அடித்திருக்கிறது

அவளிடம் பேசமுடியாமலானபோது அவன் தன்னுள் பேசிக்கொள்ளத்தொடங்கினான். அவளிடம் மன்றாடும் முடிவற்ற சொற்களாக ஆகியது அகம். அவளுக்கு அவன் சொன்ன சொற்களெல்லாம் மெல்லமெல்ல கரைந்து உருண்டு அவள் பெயராகியது. சுநீதி சுநீதி என்று அவன் அகநா சொல்லிக்கொண்டே இருந்தது. அவள்பெயரின் அச்சம்தரும் பேருருவை அப்போதுதான் உணர்ந்தான். என்று அறிகிறான். அதன்பின் அவள் கொண்டிருந்த பேரன்பு தன்னிடமல்ல, தன்னில் திகழ்ந்து தன் வழியாக துருவனிடம் சென்று முழுமைகொண்ட இன்னொன்றிடமே என்றறிந்தபோது பாம்பு உரித்துப்போட்ட சட்டையென தன்னை உணர்ந்தான். உயிரற்றது, காற்றில் நெளிந்து ஒருகணம் பாம்பாகி பின் மீண்டு வெறுமைகொள்வது. என்று கண்டடைகிறான். அந்த கையறுநிலையை அன்று வாசித்தபோதும் அழுதேன். இன்றைக்கும் கண்ணீருடன் வாசிக்கிறேன்

எம்.கிருஷ்ணகுமார்