அன்புள்ள ஜெ
தவளைவேதம் பற்றிய கடிதம் வாசித்தேன். வெண்முரசில்
நான் அடிக்கடி எடுத்துப்படிக்கும் பகுதி அது. மொத்த மழைப்பாடல் நாவலும் விரிந்து விரிந்து
வந்து அப்படியே அடங்கும் ஒரு துயரக்கதை. அது ஒரு தனி முழுநாவல். போரும் அமைதியும்,
லே மிசரபில்ஸ் போன்ற நாவல்கள் முடியும்போது வரும் நிறைவும் வெறுமையும் துக்கமும் வரும்.
அப்போது தவளைகளின்பாடல் ஒரு பெரிய பிரார்த்தனைபோல ஒலிக்கும். அது வேதத்தின் மொழியாக்கம்.
ஆனால் புதுக்கவிதையாகவே ஒலிக்கும்
வேள்வித்தலைவர்களான இந்தத் தவளைகள்
தேவர்கள் விதித்த அறங்களைப் பேணுகிறார்கள்!
ஆண்டின் உரிய பருவத்தை
அவர்கள் தவறவிடுவதில்லை.
வருடம் சுழன்று மீள்கிறது.
மழை மீண்டும் வருகிறது.
வெம்மைகொண்டு பழுத்த அவர்கள்
மறைவிடங்களில் இருந்து வெளிவந்து
விடுதலையை கொண்டாடுகிறார்கள்
பசுவைப்போல் அழைப்பவனும்
ஆடுபோல கத்துபவனும்
புள்ளியுள்ளவனும்
பச்சைநிறமானவனும்
எங்களுக்கு செல்வங்களை அளிப்பார்களாக!
எங்களுக்கு பசுக்கூட்டங்களையும்
வளங்களையும்
நீண்ட வாழ்நாளையும் அளிப்பார்களாக!
ஓம் ! ஓம்! ஓம்!
அந்த வரிகள் அளிக்கும் ஆறுதல் அப்படிப்பட்டது. எல்லாம் முடிந்தபின்
மழைபொழியும். எல்லாவற்றையும் அழித்து புதியன முளைக்கவைக்கும். எல்லாமே மறுபடியும்
பிறக்கும். அந்த நம்பிக்கைதான் அந்தப்பிரார்த்தனை. மனிதனுக்காக ஓயாது
பிரார்த்திக்கின்றன தவளைகள். தவளைகளின் வாயில் எழுந்து பிரார்த்திக்கின்றது இயற்கை
ராஜேந்திரன் எம்