ஜராசந்தரின் பாத்திரம் எப்படி என் உள்ளத்தில் பதிவாகியிருக்கிறது என கவனித்தேன். ஐம்பது வயதிற்கு மேலிருக்கும் ஒரு ஆடவன். அந்த பாத்திரம் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒன்றாக தெரிகிறது. ஆம், அந்த பாத்திரம் நாம் தினம் தினம் காணக்கூடிய சில நபர்களின் பொதுச்சித்திரம்தான். நாம் அரசு அலுவலகங்களுக்கு சென்றால் இவர்கள்தான அங்கு அமர்ந்திருப்பார்கள். நீங்கள் பணிபுரியும் இடத்தில் இவர்கள்தான் உங்கள் மேலதிகாரிகளாக இருப்பார்கள். உங்கள் குருமார்கள், உங்கள் தந்தை, உங்கள் மூத்த அண்ணன், ஏன் உங்கள் மணத்துணைவர் கூட இவர்களில் ஒருவராக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் கூட அப்படிப்பட்டவராய் இருக்கலாம்.
நாற்பது நாற்பதைந்து வயதிற்கு பிறகான பெரும்பாலான மனிதர்களின் பொதுச்சித்திரம் தான் இது. அவர்கள் தங்கள் மெல்லிய உணர்வுகளை படிப்படியாக இழக்கிறார்கள். அவர்களின் அகம் தன் மென்மையை இழந்து கொண்டே வருகிறது. அவர்கள் முகம் தன் நவரசங்களை ஒவ்வொன்றாக இழந்து இறுதியாக அவற்றில் கோபம் என்ற ஒரு பாவனை மட்டுமே எஞ்சுகிறது.அவர்கள் அரிதாக சிரிக்கும்போதுகூட அதட்டல் போல் ஒலிக்கிறது. அவர்கள் குழந்தைகளை தவிர்க்க இயலாமல் தூக்கும்போது அவை சிணுங்கி திமிறி கீழிறங்க பார்க்கின்றன. யாரும் அவர்கள் கண்ணைப்பார்த்து பேசுவதில்லை. அவ்வாறு பேசுவதை அவர்கள் அவமதிப்பாக கருதுகிறார்கள். தப்பி தவறி அவர்களை மீறி அவர்கள் புன்னகைத்துவிட்டால் அதை இழிவாக கருதுகிறார்கள். அவர்களுக்கு தாம் நினைப்பதும் செய்வதும் மட்டுமே சரியென தோன்றுகின்றன. அவர்களைச் சார்ந்தவர்கள் மற்றும் அவரின் கீழிருப்பவர்கள் மனங்களையும் அவற்றில் ஓடும் எண்ணங்களையும் பற்றி எந்தக் கவலையும் இன்றி அவர்கள் எப்போதும் தமக்கு கீழ்படியவேண்டும் என நினைக்கிறார்கள். இவ்வுலகும் அதிலிருக்கும் அனைத்தும் அவர்கள் ஆள்வதற்காக படைக்கப்பட்டவை என்றபோக்கில் அவர்கள் நடந்துகொள்கிறார்கள். அவர்களின் சுயநலமே உலக நலம் என கொள்கிறார்கள். அவர்கள் மனங்கள் வறண்டு கடினப்பட்டு பாறை போல் இருக்கின்றன. அவற்றில் புதிதாக நட்பு பாசம் காதல் எதுவும் முளைத்து வேர் விடுவதில்லை. அந்த உணர்வெல்லாம் அற்பமானவையாக அவர்களுக்கு தோன்றுகிறது.
இதற்கு அவர்கள்மேல் மட்டும் குறை சொல்லமுடியாது. இவ்வுலகும் அவர்களைப்போன்றவர்களை திறன் மிக்கவர்களாக மதிப்புக்குரியவர்களாக, ஞானம் கொண்டவர்களாக கருதுகிறது. அவ்வாறில்லாத மென்மை உள்ளம் படைத்தவரை, உலகம் ஒரு அசடாக ஏளனமாக பார்க்கிறது. அதனால் அவர்கள் மேலும் மேலும் அந்த நிலையை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்ர்கள்.
நான் இந்த வயதுக்காரன்தான். நான் இறைவனை வேண்டிக்கொள்வதெல்லாம். என் மனம் தன் மென்மையை இழக்காமால் இருக்க வேண்டும். நான் பிறர் கண்களுக்கு கோமாளியாக, ஏமாளியாக, அசடாக, அறிவற்றவனாக மிகஎளியவனாக தெரிந்தால்கூட பரவாயில்லை. என் மனம் வறண்டு இப்படி பாறையாக மாறாமல் இருந்தால் போதும். என் வாழ்க்கையில் என்றும் நான் அன்னப்பறவையின் இறகுபோல இதமானவனாக இருக்கவேண்டும் என விழைகிறேன்
தண்டபாணி துரைவேல்