அன்புள்ள திரு.ஜெ
வணக்கம்.
எது இன்பம்? என்று
ஒரு கேள்வி எழுந்தபோது, எது எல்லாம் இன்பம் என்று பிரித்து பிரித்து வைத்தேன் அது எல்லாம்,
அப்பால் உள்ள இன்பத்திற்கு முன்னமே நின்று அர்த்தம் இழந்துக்கொண்டு இருந்தது.
என்னைப்போல் பிரித்து
பிரித்து இன்பத்தை பட்டியல் இடாமல் வள்ளுவன் இன்பத்தை ஆடியால் சூரிய ஒளியை குவிப்பதுபோல் குவிக்கின்றான்.
கண்டுகேட்டு
உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
ஒண்தொடி கண்ணே உள.
காணுதலால் கண்பெறும்
இன்பம், கேட்பதால் செவிபெரும் இன்பம், உண்பதால் வாய் பெறும் இன்பம், முகர்வதால் நாசிபெறும்
இன்பம், தொடுதலால் உடல்பெறும இன்பம் என்று ஐம்புலன்களின் இன்பமும் ஒரு கணத்தில் ஒரு
இடத்தில் பெறுவது இன்பம். அது சிற்றின்பமாக இருந்தாலும் அந்த கணத்தின் பேரின்பம்.
செவிலி அன்னை மித்திரவிந்தைக்கு
“கிருஷ்ணன்” என்னும் நாமம் சொல்லும் நேரத்திற்கு முன்புவரை இறந்தே விட்டாள் மித்திரை
என்று நினைக்கும் நிலையில் வெண்விழி தெரிய சடலமென கிடக்கிறாள். இறந்துவிட்டாளோ என்று
செவிலி அவள் நாசியில் கைவைத்து துடிக்கிறாள்.
“கிருஷ்ணன்” என்று
அவள் உதடு உச்சரிக்கும் அந்த கணத்தில் இருந்து அவள் ஐம்புலன்களும் வள்ளுவன் சொல்லும்
இன்பம் நுகர்கின்றன. சொல்லென அவளை சூழ்கின்றான் கண்ணன், நேற்றுவரை பொருள் தந்த பொருள் எல்லாம் பொருள் மாற இன்பம் அடைகின்றாள்
இன்று. புலன்களின் உட்பொருள் காண்கின்றாள். எல்லாம் இசையின் வடிவாக நிறைகின்றாள். இருமைகளின்
எல்லையை அறிகின்றாள். இருமைகளின் கூட்டுதான் முழுமை என்பதை உணர்கின்றாள். இருமையின்
கூட்டு இல்லாமல் ஒருமையில் வாழ்தல் நிறைவின்மை என்பதை அறிகின்றாள். நேற்றுவரை வாழ்ந்த
பொய்வாழ்வின் எல்லையைத்தாண்டி மெய்வாழ்வில் புன்னகைக்கின்றாள்.
நீ எதுவாக ஆக நினைக்கின்றாயோ
அதுவாகவே ஆகின்றாய் என்கின்றார் சுவாமி விவேகானந்தர். இதையே நாம் சற்று மாற்றிப்போட்டால்
நாம் எதுவாக ஆக வேண்டுமோ அதையே நினைத்துக்கொண்டு இருக்கின்றோம்.
மித்திரவிந்தை
கொஞ்சம் கொஞ்சமாக நீலனாகிக்கொண்டு இருக்கிறாள். நீலனின் இசையாகிக்கொண்டு இருக்கிறாள்.
நீலன் மீட்டும் குழலென ஆக, குழல் இசையையே நினைத்துக்கொண்டு இருக்கிறாள். நீலனின் பாதியாகி இருக்கும் அவள் அவனோடு சோரும் நாளில்
முழுமை அடைவாள், அதுவாக ஆகவே அவள் இசையாகிக்கொண்டு இருக்கிறாள். அந்த இசையின் வழியாக
பொய் உலகை மெய் உலகென்று வாழ்ந்த வாழ்வில் இருந்து விடுப்பட்டு மெய் உலகை அறிகின்றாள்.
மெய் உலகை அவள் அறியும் தோறும் அவள் பகுத்தறிவு செயல்படத்தொடங்குகின்றது. பகுத்தறிவு
செயல்படும்தோறும் நேற்று இருந்த பொய் வாழ்வென்பது இன்று புதிய மெய்வாழ்வாய் மிளிகின்றது.
நேற்றுவரை ஜடப்பொருள்களாய் இருந்து அனைத்தும் இன்று உணர்வுப்பொருளாய் ஆகின்றன. அதன்
அடிநாதமாய் ஒலிக்கும் இந்த வரிகள் அற்புதம்.
//ஒரு சொல்லென எழுந்து அவளை சூழ்ந்துகொண்டான். நீலம் என்பது நிறமல்ல. பீலி என்பது நோக்கல்ல. ஆழி என்பது வடிவல்ல. சங்கமென்பது பொருளல்ல. குழலிழிந்து இப்புவிக்குவளை நிறைக்கும் இசை என அவள் அறிந்தாள். விழிப்பென்பதும் துயிலென்பதும் இருவகை இசையே என்று கண்டாள். இருப்பென்பதும் இன்மையென்பதும் அவ்விசையின் எழுச்சியும் வீழ்ச்சியுமே. ஆதலென்பதும் அழிதலென்பதும் அலைவளைவுகளே//-,இந்திரநீலம்-81.
மித்திரவிந்தையின் இந்த உள்ள பாங்கை தனக்குள் தறித்துக்கொண்டு அன்று
வாழ்ந்து சென்ற மாணிக்கவாசகர் உள்ளம் இங்கு எண்ணத்தக்கது
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே-திருவாசகம்-திருப்பள்ளி எழுச்சி.
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே-திருவாசகம்-திருப்பள்ளி எழுச்சி.
இங்கு. மித்திர
விந்தையும், மாணிக்கவாசகரும் அறிவுவை அடுத்த இடத்திற்கு தள்ளி தனது உணர்வுகளைத்தான்
இங்கு முன்வைக்கின்றார்கள் ஆனால் அந்த உணர்வே அவர்களை பகுத்தறிவு உடையவராக ஆக்குவதுதான்
அழகு.
மனிதன்
சடப்பொருள்களை
சடமாகவே கண்டு வாழ்கின்றான், அவன் பகுத்தறிவு விழித்துக்கொள்ளும் நாளில்
நுண்ணுர்வால்
தூண்டப்பட்டு உட்பொருள் காண்கின்றான், அன்று அவன் வாழ்க்கை அர்த்தம்
நிறைந்ததாகின்றது.
அந்த நுண்ணுர்வு தரும் உட்பொருள் உள் நிறைவையும், அகவெற்றிடத்தையும்
தருகின்றது. அதை
உலகுக்கு விளக்கமுடியவில்லை. நுண்ணுர்வு ஒன்றுதான் அகம் நிறைக்கும் அந்த
கணத்திலேயே அகத்தில் எதுவும் இல்லை என்ற வெற்றிட உணர்வையும் தருகின்றது.
நுண்ணுர்வு நுழையும் தோறும் அகம் பெரியதாகி்க்கொண்டே செல்வது அற்புதம்.
இதுதான் சங்கப்புலவர்கள் உட்கார்ந்த சங்கப்பலகையோ? நுண்ணுர்வு
அடுத்தவர்களுக்கு அர்த்தம் அற்றதாக இருக்கலாம் அதனால்
நமக்கேகூட அது அர்த்தம் அற்றதாகவும் தெரியலாம் ஆனால் வாழ்வின் மொத்த வரவு
செலவுகளைக்கூட்டிக்கழித்தால்
மிஞ்சுவது அந்த நுண்ணுர்வு நமக்குள் நிறைத்த உட்பொருள்தான் வாழ்ந்த
வாழ்க்கையின் வரவாகிய
செல்வம். அந்த பகுத்தறிவு வரும் நாளில் மனிதன் அடைவது நம்பிக்கை.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
இறைவனை அடைய கஷ்டப்பட்டு தவம் செய்துதான் ஆகவேண்டும் என்கின்றார். ஆனால் நம்பிக்கை
இருந்தால் பெரும் முயற்சி இல்லாமலே இறைவனை அடையலாம் என்கிறார். நம்பிக்கைதான் முக்கியம்
என்பார் முத்தாய்ப்பாக. அந்த நம்பிக்கையை மித்திரவிந்தை அடைவது அற்புதம்.
உலகம்
அறியா எளிய
பெண்ணாக இருந்து, அகம் உணரும் இசையால், கிருஷ்ணன் என்ற ஒற்றை பெயரால்
பகுத்தறிவு அடைந்து
அந்த பகுத்தறிவின் கனியென நம்பிக்கையை அடைகின்றாள். நம்பிக்கையை அனைவரும்
அடையமுடியும். ஆனால் அந்த நம்பிக்கை தோசைக்கல்லில் தெளிக்கும் தண்ணீர்போல
சுர்ரென்று இசை எழுப்பும் கணத்திலேயே
மறைந்தும்விடுகிறது. வாழ்க்கை என்னும் தோசைக்கல் அவ்வளவு சூடாக இருக்கிறது.
ஆனால் மித்திரவிந்தைப்போன்றவர்கள்
அடையும் நம்பிக்கைதான் எத்தனை உயர்ந்தது. அவர்கள் வாழ்க்கைக்கு
சூடுப்போட்டுவிடுகின்றார்கள்.
// புன்னகையோடு மித்திரவிந்தை “இதில் எண்ணிக் கலுழ ஏதுள்ளது? தன் விழைவெதுவோ அதை நிலைநாட்டும் வித்தை அறிந்தவர் அவர் என்கிறார்கள். அவர் எண்ணுவது நிகழட்டும்” என்றாள்//
எல்லா ஆயுதங்களும் நம்பிக்கை முன் தோற்கின்றன. நம்பிக்கை வெல்லும்போது
வென்றவன் வானத்தில் பறவை எனப்பறக்கிறான், ஜெ சொல்வதுபோல் வானத்தை அவன்பூமியில் பார்க்கிறான்.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணி்க்கவேல்.