Tuesday, August 25, 2015

கதைக்குள் நிஜம்


அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

ஒரு நாள் சொளதி பாலைவனத்தில் அரபிக்கடலோரம் பணிசெய்யும் நண்பர்களைப்பார்க்க டொயோட்டா பிக்கப்பில் சென்றேன். 25 கிமீ தொலைவுவரை பாலைவனப்பயணம். கிரைடர் வைத்து வாகனப்பயணத்திற்கு மண் வழிக்கப்பட்ட பாதை. திருப்பிவரும்போது 25 அடிதூரத்தில் மாற்றுப்பாதை ஒன்று கண்ணுக்கு தெரிய, அதில் பயணம் செய்தால் மெயின் ரோட்டிற்கு 10 கி.மீ தூரம் குறையும் என்று அப்படியே வண்டியை மண்ணில் திருப்பியபோதுதான் எவ்வளவு பெரிய தவறு செய்துவி்ட்டோம் என்பது புரிந்தது. நான்கு வீலும் பாலை மணலுக்குள் சென்றதுதான் தெரியும். எவ்வளவு வேகம் கொடுக்கின்றோமோ அவ்வளவு  வேகமாக வண்டி மண்ணுக்குள் புதைந்தது. நல்லகாலம் ட்ரைவர் வண்டியில் மண் அள்ளும் ஷவல் ஒன்று வைத்திருந்தான். 3 மணிநேரம் மாத்தி மாத்தி மண்ணை குத்தி தோண்டி வழி உண்டாக்கி பழைய வழிக்கு வண்டியை தள்ளி  வந்து கேம்பிற்கு வந்தோம்.

பாலைவனத்தில் தண்ணீர்போல ஓடும் வாகனங்கள் உள்ளன, 4WD என்னும் வாகனங்கள் உள்ளன. அவற்றின் டயர்கள் கூடுதல் அகலமானவை, மண்ணை பறித்துக்கொண்டு உள்ளே இறங்குவதில்லை, மண்ணை வெட்டி சிறு சிறு அலையாக்கிக்கொண்டு  முன்னேறுகின்றன.

சுபத்திரை கண்ணனோடு பாலைநிலத்தில் பயணம் செய்யப்பயன் படுத்தும் குதிரையின் கால்குளம்பு லாடம் இருமடங்கு பெரிதென்று இருப்பதைப்படித்ததேபாது அந்த நுட்பத்தில் அன்று நின்ற பெரும்பாலையில் நின்றேன். குளம்பின் அடிப்பகுதி நாயின் அண்ணாக்கு என அலை அலையாக இருந்தது என்றபோது பாலையில் ஓடும் வண்டியின் டயர்கள் சுழல்கின்றன.

முதலில் அவள் பார்த்தது அதன் குளம்புகளில் லாடங்கள் இருமடங்கு அகன்று விரிந்திருந்ததைத்தான். அவள் மணம் கிடைத்ததும் சற்றே பொறுமை இழந்து அது முன் கால்களைத்தூக்கியபோது குளம்பின் அடிப்பகுதி நாயின் அண்ணாக்கு என அலை அலையாக வரிகொண்டிருப்பதை கண்டாள். மணல்மேல் புதையாமல் விரைவதற்கான லாடம் அது என்றார் அவளை அனுப்ப வந்திருந்த அமைச்சர் ஸ்ரீதமர். –இந்திரநீலம்-84.


பெண்கள் அழகாக நடக்ககூடியவர்கள்தான் ஆனால் அவர்கள் எதையேனும் சுமந்து நடக்கையில் இருக்கும் நாட்டியம், நளினம், அவர்கள் நடனம் ஆடும்போதுகூட இருப்பதில்லை. இன்றைய காலத்தில் அனைவருமே ஆண்போல நடப்பதுபோல் தோன்றுகின்றது. அல்லது ஆண்போவே நடக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் உறைபோன்ற உடைகள் காரணமா? ஆண்போல நடப்பது அவர்கள் விருப்பம் ஆனால் பலம் உடையவர்களாக இருக்கிறார்களா? 

தாய் மண்ணில் மூன்று தண்ணீர் பாலையோடும், இடும்பில் தனது குழந்தையோடும் வரப்பில் நடக்கும் அன்னையர்கள் பலரைக் கண்டு உள்ளேன். உடம்பால் எந்த ஒரு வீரனுக்கும் குறைந்தவர்கள் அல்ல, அந்த வணங்கா உடலுக்குள் அவர்கள் சுமக்கும் சுமைகள் கொண்டுவரும் நடனம், நளினம் எப்படி சாத்தியம்.  சுபத்திரை இரட்டைவாள் சுழற்றுவதுபோல் அவர்கள் இரண்டு கையிலும் இரண்டு உலக்கையால் கம்பு இடிப்பார்கள். இட்ட அடிநோக எடுத்த அடி கொப்பளிக்க என்ற அவர்கள் தண்ணீர் சுமந்துவரும் அழகு அழகு. 

பாருங்களடி, எப்படி நடக்கிறாள் என்று. நடனம்போன்றிருக்கிறது உடலசைவுகள். நல்ல இடையப்பெண் கலமேந்தி நடந்தால் அவள் உடலின் அசைவுகளில் ஒன்றுகூட வீணாகாது. ஆகவே அவளுக்கு களைப்பே இருக்காது.” சுபத்திரை சிரித்துஎன் இல்லத்தில் நெய் உருகாத நாளே இல்லை ஆய்ச்சிஎன்றாள்.

கதாயுதம் சுழற்றும் சுபத்திரை உடல்  எப்படி இருக்கும்! அதில் கணநேரத்தில் நடனம்வரும் அழகை சொல்லிப்போகும் போதுதான் “புலிக்கு புலி பிறக்கும்” என்பது தெரிகிறது. அந்த மென்நடை நடன ஆச்சிதான் சட்டென்று காவல்வீரனைக்கொன்று, அவளை எடுத்துக்கொண்டு அரண்மனைக்குள் ஓடுகின்றாள். உடல், நளினம், வீரம் என்று சுபத்திரை எடுக்கும் இந்த அவதாரம் பார்க்கும்போது நமது இன்றை பெண்களை எண்ணாமல் மனம் இருக்கமுடியவில்லை. 

மென்னையாக இருப்பது பெண்மைல்ல, பலத்தோடு நளினமாக இருப்பது பெண்மை என்று காட்டிப்போகும் சுபத்திரை மீண்டும் மீண்டும் நமது பெண்களை பண்டைய பாரதப் பெண்ணாக உடலாலும் உள்ளத்தாலும் இருங்கள் என்று காட்டுகிறது.

அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.