Thursday, August 27, 2015

நண்பன்

,

ஆழியின் விழி அத்தியாயத்தை இப்பொழுதுதான் படித்து முடித்தேன். ஈரோட்டில் இருக்கும் பொழுது 
கிருஷ்ணன் சொன்னார், சாத்யகியும் சியமந்தகதை எடுத்துக் கொண்டு போவானெனில் 
என்ன பொருள் இருக்கிறது எல்லாவற்றிலும் என்று. இப்பொழுது தோன்றுகிறது அந்த மணி 
பொருள் கொள்வது நம்முடைய அகங்காரத்தில் என்று, அதை அழிப்பதின் வழியாக சாத்யகியை 
சேவகனிலிருந்து தோழனாக உய்விக்கிறான். 

இருவரும்  மாடு மேய்த்து திரிந்த காலங்களுக்குப் பிறகு சாத்யகி வரும்பொழுது கண்ணனை 
அரசனாக உணரக் காரணம் சாத்யகியின் தன்னகங்காரமும் வளர்ந்து இருந்திருக்கும். அதுவே அரசனென்றும் 
சேவகனேன்றும் பிரித்து உணர்ந்திருக்கும். இப்பொழுது அதை சிதற்றுவதன் வழியாக அவனை விடுதலை செய்து விடுகின்றான். இனி அவனும் கிருஷ்ணனும் வேறு வேறல்ல, எப்பொழுதும் குசலன் சொல்லும் சிரிப்புதான். அன்று சாத்யகியை பார்த்து நகைத்த மாளிகைகளுக்கு இன்று அவன் வணக்கம் சொல்லுமிடம் இன்றைய உச்சங்களில் ஓன்று.

கண்ணன் எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம்,இளமாண்பு,சீர்,சிறப்பு,நற்கீர்த்தி,
கல்வி,அறிவு,கவிதை,சிவயோகம்,

தெளிவே வடிவாம் சிவஞானம்,என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!

கண்ணன் என் அகத்தே கால் வைத்த கணத்தில் கண்ணனை நான் ஆட்கொண்டேன், 
கண் கொண்டேன். 

மணி கவர்ந்து வர அனுப்பிய அன்று கண்ணன் இவர்கள் இருவரின் அகத்தே தன கால்களை வைத்து விட்டான். 
இன்று சாத்யகியும் திருஷ்டத்யும்ணனும் கண்ணனை ஆட்கொண்டார்கள். 

ஆர்வியின் கேள்விக்கும் இங்கேதான் பதில் இருக்கிறது என நினைக்கிறேன்.

வேறு எந்த அத்தியாயத்தையும் விட  இது ஏன் இத்தனை நெருக்கமாக இருக்கிறது என்று யோசித்தால் இதில்தான் கண்ணன் நாம் எப்பொழுதும் அந்தரங்கமாக உணரும் தோழனாக வருகிறான். கள்ளின், பொருளற்ற சொற்களின் வழியாக கவிதையின், இசையின் வழியாக தன்னிலை அழிந்து அடையக்  கூடிய ஒரே கடவுள் அவன்தான்.

திருவிழாக்களில் தந்தையரின்  தோள்களில் மைந்தர்கள் அமர்ந்து கொண்டு, அவர் தலையைப்  பிடித்துக் கொண்டு  தெருவில் வரும் தெய்வத்தை பார்ப்பது போல வெண்முரசு எனில் இன்றைய அத்தியாயம் அந்த தெய்வம் நம் அருகே கடந்து போகும் தருணம்.  

ஏ வி மணிகண்டன்