எங்கள் ஊருக்கு
செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள புற்று ஒன்று இரண்டு ஆண்டுக்கு முன்னால் புத்துமாரியம்மனாகிவிட்டது.
நேற்றுவரை புத்து
இன்று புத்துமாரியம்மனா? என்று கேள்வி எழுந்தாலும். வண்டியை நிறுத்திவிட்டு அந்த ஓலைக்குடிலில்
நின்று அருள்புரியும் புத்துமாரியம்மனை வணங்கினேன். புலன்களுக்கு அப்பால் இருக்கும்
அந்த இறைவன், புலன்களுக்கு வசப்படவேண்டும் என்று மனித மனம் ஏன் நினைக்கிறது?
நேற்றுவரைப்புற்று, இன்று மஞ்சல்பொடி, குங்குமம்,
மலர்ச்சூடி, அகல்தீபம் எரிய தெய்வமாகி நிற்கிறது. நாளுக்கு நாள் தெய்வமாக வளர்ந்துக்கொண்டு இருக்கிறது.
வரிசையாக
நிற்கும்
பனைமரம், அந்த புற்று, அந்த புற்று அனைப்பில் ஓங்கி வளரும் வேம்பு, அப்பால்
ஒரு முந்திரி
மரம். இரவு எட்டுமணிக்குமேல் அந்த இடமே ஒரு பயங்கரத்தை ஏற்படுத்திவிடும்.
அந்த முந்திரம்
உட்கார்ந்து இருக்கும் பெரும் பூதம்போல, அந்த
வேம்பும் புற்றும் பயமே இல்லாத தாயும், மகவும்போல, அதற்கு முன்னுள்ள
பனையெல்லாம் தொடர்ந்து
வரும் வேல்போல. இதை எல்லாம் பார்த்து ஓர் இரவில் யார் பயந்தது? அந்த பயந்த
நெஞ்சம் காலையில் கொஞ்சம் மஞ்சலும், குங்குமமும்,
பூவும் தூவி, விளக்கும் ஏற்றி வைத்திருக்குமா? எல்லோருக்கும் கறுப்பு நிழல்
என்று தெரியும்
அந்த புற்று, யாரோ ஒருவன் கண்ணுக்கு கறுப்பி
கால்பற்றி நிற்கும் பொன்வண்ணக்குழவி என்று தெரிந்து இருக்குமா? அந்த பயம்
அந்த இடத்தை தெய்வமாக்கியதா? அந்த கணநேர மண்ணை பொன்னென காணும்
வண்ணக்காட்சி அந்த
இடத்தை தெய்வமாக்கி இருக்குமா?
அந்த புற்றும், அந்த நிழல்களும் பயத்தை
உண்டாக்கி இருக்கலாம் ஆனால் அந்த மஞ்சலும்,
குங்குமமும், விளக்கும், பூவும் வண்ணத்தையும், வாசத்தையும், மனித இருப்பையும் அங்கு
நிறைத்துச்செல்கின்றது, அந்த நினைவின் நிறைவில்
மேலும் மேலும் மனிதர்கள் அங்கு
வந்துக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கு முன் ஒருத்தன்,
அவனுக்கு முன் ஒருத்தன் என்று
கடந்த காலத்து மனிதன் முகம்தெரியாமலே
அந்த மனிதனின் இருப்பை, வண்ணத்தால், வாசத்தால், ஒளியால் உணரச்செய்துப்போகிறான். முன்காலமனிதன்
பின்கால மனிதனை இங்கு இழுத்துக்கொண்டே
இருக்கிறான்.
புற்றுமண், வண்ணமும்,
வாசமும், ஒளியும் ஆகி வடிவம் கொண்டு தெய்வமாகி நிற்கின்றது. இரவில் இப்போதும் அந்த
இடத்தில் அந்த நிழல்கள் எல்லாம் இருக்கிறன ஆனால் அந்த அடர் அரக்க உருவம் மறைந்து, பயம்
விளகி, ஒரு பொன்வண்ண தெய்வம் அங்கு வளர்ந்துக்கொண்டே
இருக்கிறது.
மலரும் சுடரும் காட்டும்தோறும் கற்சிலையில் தெய்வம் எழுவதுபோல அவர்கள் மலர்ந்தெழுகிறார்கள்-இந்திர நீலம்-70
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.