திரு ஜெ,
"அவள்
சென்ற பாதையில் தயங்கும் காலடிகளை வைத்து நுழைந்தார். அவள் சென்று நுழைந்த
ஆயர் இல்லத்து வாயிலில் சென்று நின்று “அன்னையே” என்றார்."
உண்மைதான்.
அவளைத் தன் அன்னையாகவே ஏற்றுக் கொண்டு, சரணாகதி அடைந்த மகனாகவே அங்கு
தோன்றுகிறார். ஏனோ தெரியவில்லை இந்த அத்தியாயத்தில், முழு மனதும்
ஒன்றிக்கலந்து, ஓராயிரம் ஆண்டுகள் ஒரு சேர வாழ்க்கையில் பயணித்து நிறை
வாழ்க்கை வாழ்ந்த, அன்பு உள்ளங்களுடன், அவர்களின் நிழலாக உடன் வாழ்ந்து
நிறைந்தது போல் மனதில் எண்ணம் திருப்தி கொள்கிறது.
தாயை
மனைவியில் கண்ட மனிதன், பின் தன் மகளில் காண்கிறான். அவர்கள் கையில் தான்
ஒரு குழந்தையாகிறான். அதை உணர்ந்து அனுபவிப்பவர்கள் மிக சொற்பமே.
மற்றையவர் தம் அகங்காரத்தால், அவ்வுணர்வை ஒதுக்கி, அவர்களை தாம்
இரட்சிப்பவர்களான உருவகத்தால் தம்மை மறைத்துக் கொள்கிறார்கள்.
ரோகிணியின்
தாய்மை தன்குழந்தைகளுடன், வசுதேவைரையும் மைந்தனாகவே மனதில் இருத்தி உவகை
கொள்வதாக இருக்கிறது. அவரை நம் தாயாகவே மனம் உணர்கிறது.
கணபதி கண்ணன்