ஒரு உயிர் பிறப்பது, வளர்வது, உலகில்
வாழ்வது, சந்ததிகளை உருவாக்கி வளர்த்தெடுப்பது என எல்லாம் பேரதிசயங்கள்.
இதனால் நம் பூமியின் இருப்பு மற்ற எந்த விண்கோள்கள் விண்மீன்களைவிட
அர்த்தமுள்ளதாக ஆகிறது. தன்னால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினத்திற்கும்
வாழ்வதற்கான ஏற்பாடுகள், சூழல், தகவமைப்பு என எல்லாம் இயற்கை
கொடுத்திருக்கிறது. ஆனாலும் உயிர்களுக்கு இறப்பு என்பது ஏன்
கொடுக்கப்பட்டிருக்கிறது என தெரியவில்லை. இவ்வளவு அதிசயங்களை படைக்க
இயன்ற இயற்கையால் ஏன்
இறப்பை தவிர்க்க முடியவில்லை. அல்லது இயற்கை வேண்டுமென்றே இறப்பை
வைத்திருக்கிறதா? இறப்பற்ற ஓருயிர் கூட உலகில் இல்லையென்பதை காண்கிறோம்.
உருவத்தில், பிறப்பில், இனப்பெருக்கத்தில், உணவில், இருப்பிட சூழலில், பல
வேறுபாடுகள் உயிர்களுக்கு இருந்தபோதும் இயற்கை இறப்பை மட்டும் அனைத்து
உயிர்களுக்கும் பொதுவாக வைத்திருப்பதன் காரணம் என்ன? பிறந்த ஒவ்வொரு
உயிரையும் இயற்கை இறப்பை நோக்கி செலுத்தியவண்ணம் இருக்கிறது. இவ்வுலகில்
ஒரு உயிர் இருப்பதற்கான காரணங்களைவிட இறந்துபோவதற்கான சாத்தியங்களே அதிகம்
உள்ளன. ஒவ்வொரு உயிரினத்தின் மேலும் இறப்பு ஒரு கத்திபோல
தொங்கிகொண்டிருக்கிறது. ஏதோ ஒரு சிறு அசைவில் அது உயிரினங்களின் மேல்
விழுகிறது. நோய்க்கிருமிகள், கொடு விலங்குகள், விபத்துகள் என இயற்கை
அதற்கான அனைத்துவித ஆயத்தங்களுடன் காத்திருக்கிறது. ஒரு கரத்தில் காத்தலை
அருளும் அதே இயற்கை மறூகையில் கொலைவாளைக்கொண்டிருக்கிறது. காத்தலை அருளும்
கை தவறினாலும் கொடுவாளைஏந்திய கை தவறுவதில்லை. இயற்கை அன்னையின் இந்த
உருவைதான் நாம் காளியாக உருவகிக்கிறோம். மற்ற மதங்கள் காக்கும் கரத்தை
மட்டும் காட்டுகின்றன. இந்திய மதங்கள் இந்த இயற்கையை, உலகை நடத்தும் பெரு
நியதியை, கடவுளென சொல்லும் அதன் முழுமையை ஓர் உரு தந்து
காட்டும்போதெல்லாம் கொலை கருவிகளை கொண்ட கைகளை அமைக்கின்றன. நாம் இந்த
முழுமையை அறிவது கடினம். தாயின் கையில் கொலைவாளெதற்கு எனக் கலங்குகிறோம்.
அது நம்மை தீயதிடமிருந்து காப்பதற்கு எனச் சொல்லிக்கொள்கிறோம். ஆனாலும்
இந்தக் கொலைவாள் கரத்தை ஏற்றுக்கொள்வதன்மூலம்தான் நாம் அந்த இயற்கையன்னையை
அறிந்துகொள்ள முடியும்.
விஷ்ணுவும் காளியும் உடன் பிறந்தவர்கள் என ஒரு கூற்று புராணங்களில் கேட்டிருக்கிறேன். விஷ்ணுவின் பூவுலக உருவான கிருஷ்ணன் இந்த இயற்கையை முழுமையாக பிரதிபலிக்கிறான். அவன் காத்தலுக்கும் இறத்தலுக்கும் எந்த வேறுபாடும் காட்டாதவனாக இருக்கிறான். மனிதர்களின் எவ்வித உணர்ச்சிகளுக்கும் அவன் அப்பாற்பட்டவன். அவர்களின் நன்மைகள் தீமைகள் எல்லாம் அவனுக்கு ஒன்றென ஆகின்றன. அவன் காதல் கோபம், கருணை, எல்லாம் வெறும் நாடகம். அதை நாம் லீலையென சொல்லிக்கொள்கிறோம். அவன் நடிக்கவேண்டிய பாத்திரம் எது என்பதை அவனைநாடி வருபவர்கள் சார்ந்தவர்கள் கொடுக்கிறார்கள். அவனிடம் தஞ்சம் நாடி வந்தவர்களுக்கு அபயம் அளிப்பதும் பகைகொண்டு எதிர்த்து வருபவரை கொல்வதும் அவனுக்கு ஒன்றுதான், இரண்டும் அவன் நடிப்புதான். அக்ரூரரும் திருஷ்டத்துய்மனும் கண்ணனில் இருக்கும் காலனை கண்டு அஞ்சுவதும் அவனை அறிந்துகொள்ள முயல்வதும், அப்படி முயல்கையில் அவன் கடவுளாகவே தெரிவதும் மிக அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதை ஒவ்வொருமுறை படிக்கும்போதும் கண்ணனில் பிரதிபலிக்கும் அந்த அந்த இயற்கையன்னையின் ஒவ்வொரு வடிவை காணமுடிகிறது.
தண்டபாணி துரைவேல்