ஒரு சிறுவன். புழுதிபடர்ந்த மேனியுடன் வீட்டு வேலி அருகில் நிற்கிறான். வேலியின் அடுத்த பக்கத்தில் ஒரு செல்வச் சிறு பெண் அமர்ந்திருக்கிறாள். அந்தப் பெண் தன் முன் பல்வேறு அழகிய விளையாட்டு பொருட்களை வைத்திருப்பதை அந்தச் சிறுவன் பார்க்கிறான். முத்துகள், பவழங்கள், பலவண்ண மணிகள், தொட்டால் துள்ளும் வண்ணப்பூப்பந்துகள், கையில் வழுக்கும் வெண்பளிங்கு கலங்கள், வண்ண வண்ண சிற்றகல்கள், இன்னும் முத்தை வெளியில் எடுக்காத சிப்பிகள், வழவழப்பூட்டிய சந்தன தடிகள் என் பல பொருட்கள். கன்னத்தில் கையூன்றி அப்பொருட்களை சோம்பலாய் பார்த்துக்கொண்டிருக்கும் அச்சிறுபெண் அச்சிறுவனின் கள்ள்ப்பார்வையை உணர்கிறாள். தன் பொம்மைகளை சட்டென்று மறைத்துக்கொள்கிறாள். 'போ தூர' என விரட்டுகிறாள். அவள் 'அம்மா' என குரலெழுப்ப அஞ்சி ஓடுகிறான் அந்தச் சிறுவன். அவளுக்கு அவன் அச்சத்தைக் கண்டு சிரிப்பு வருகிறது. தூர ஓடிய அந்தச் சிறுவன் தயங்கி தயங்கி திரும்ப வருகிறான். திரும்பவும் குரலெழுப்பி விரட்டுகிறாள். அவன் ஓடுவதைப் பார்த்து கைகொட்டி சிரிக்கிறாள். சிறிது நேரம் அவன் வராமல் இருப்பது அவளுக்கு கவலை தருகிறது. சற்று நேரம் பொறுத்து அந்தக் கள்ளப் பயல் மீண்டும் வருகிறான். தூர நின்று தன் குழலெடுத்து ஊதுகிறான். அக் குழலோசை அவளை கவர்கிறது. குழலூதியபடி அவள் அருகே வருகிறான். இதை எப்படி வாசிக்கிறாய் என அவர்கள் பேச ஆரம்பிக்கின்றனர். அவன் வேலிப் படல் தாண்டி உள்ளே வர தயக்கத்துடன் அனுமதிக்கிறாள். ஆனால் தன் பொம்மைகளை அவன் கண்ணில் காட்டாமல் மறைத்துக் கொள்கிறாள். அவன் அப்பொம்மைகளின் அழகைபற்றி அவளிடம் பேசுகிறான். தான் அதைப்போன்றவற்றை எங்குமே கண்டதில்லை எனக் கூறுகிறான். ஒரு முறை பார்க்க கெஞ்சுகிறான். அவள் மறுக்கிறாள். பின்னர் சற்று நேரம் பார்த்து கொடுத்துவிடு என சொல்லி ஒரு பொம்மையை தருகிறாள். அவன் கையில் எடுத்து பார்த்து ரசிக்கையில் சட்டென்று பிடுங்கி மறைக்கிறாள். மீண்டும் மீண்டும் அவன் கெஞ்சுகிறான். முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்டு குழலெடுத்து ஊதுகிறான். பின்னர் மனம் இறங்கி சில பொம்மைகளை அவன் விளையாட தருகிறாள். சிறிது நேரத்தில் இருவரும் பொம்மைகள் அனைத்தையும் பொதுவில் வைத்து விளையாட தொடங்குகிறர்கள். இவை தன்னுடைய பொம்மைகள் என்பதே அவளுக்கு மறந்து விடுகிறது. பொம்மைகளை பகிர்ந்தும், இணைத்தும் ஆடுகின்றனர். அப்போது அவள் உணர்கிறாள், அவள் அழுது அடம் பிடித்து அந்த பொம்மைகளை வாங்கியிருப்பது அந்த பெயர் அறியாச் சிறுவனுக்கும் சேர்த்துதான் என்பதையும், அவனில்லாமல் இந்த விளையாடல் முழுமையடைந்திருக்காது என்பதையும். ஆடிக் களைக்கும் அவள், அம்மா வந்து திட்டுவாள், என அனைத்து பொம்மைகளையும் ஆடையில் அள்ளி முடிந்து விரைகிறாள். அவன் 'நாளை மீண்டும் மீண்டும்' என கூவுகிறான். திரும்பி முகத்தில் ஒழுங்குகாட்டி சிரித்தோடுகிறாள் அந்தச் சின்னஞ்சிறு பெண்.
கண்ணன் ருக்மணி விளையாடுவது இந்த விளையாடல் தானே. இந்த விளையாட்டு நிகழ்வின் சிறு தொடக்கத்தைதானே நாம் கடற்ரையில், பூங்காக்களில், பேரங்காடி குழுமங்களில், திரையரங்குகளில், பேருந்து மற்றும் தொடர்வண்டிகளில் காண்கிறோம். அவர்களை நாம் அதற்காக கோபம் கொண்டு, அசூயை காட்டி, சபித்து, திட்டாதிருப்போமாக. அந்த சிறுவர்சிறுமியரை வாழ்த்துவோமாக. அவர்கள் அடையும் மகிழ்விற்கு, நாம் மகிழ்வோமாக. அந்த விளையாடல்கள் ஆதி அன்னையும் அப்பனும் ஆடியதின் தொடர்ச்சிதான் என்பதை அகத்தில் நாம் கொள்வோமாக.