Thursday, August 6, 2015

கண்ணனை வலம் வருதல்


  ஆண்டிற்கு ஓரிருமுறை  திருவண்ணாமலை சென்று மலையை சுற்றி வருவேன். கார்த்திக தீபத்திருநாள் அன்று கண்டிப்பாக செல்வேன். மக்கள் கடலில் ஒரு துளியாக இருப்பதில் நம் அகங்காரம் சற்று குறையக்கூடும் என்று ஒரு நம்பிக்கை.  வழிமுழுவதும் குப்பையாக்கிக்கொண்டே செல்பவர்கள். வழியெங்கும் நடைபெறும் உணவு ஈதல்களில் ஒன்றுவிடாமல்   வரிசையில் நின்று உணவு பெற்று ஒரு வாய் மட்டும் உண்டுவிட்டு மிகுதி உணவை அப்படியே கொட்டிவிட்டு செல்பவர்கள்,  மனித அவலக் குரல் போல் ஒலி யெழுப்பும் ஊதல்களை வாங்கி சத்தமாக ஓசை யெழுப்பி நடக்கும் இளைஞர்கள், ஏதோ  வேண்டுதல் போல கைபிடித்தபடி நடக்கும் தம்பதிகள், வீடுபிரச்சினகள் அலசியபடி  செல்லும் பெரியவர்கள், கைபேசியில் வணிகம் பேசியபடி செல்லும்  வியாபாரிகள்,  காதில் ஒலிப்பானை பொறுத்தி எதோ ஒரு பாடலை கேட்டபடி செல்லும் நவீனர்கள்,  ஓடுகிறார்களா நடக்கிறார்களா எனத் தெரியாமல் வழி பிடுங்கி விரையும் வாலிபர்கள், என பலதரப்பினர் நடுவில்  திருவாசகத்தை பாடிக்கொண்டு செல்லும் பக்தர் குழாம் சிலவும் தென்படும். ஆனால் ரமணர் கிரிவலம் வரும்போது ஒரு நிறை மாத கர்ப்பிணி பெண்போல நிதானமாக நடக்கவேண்டும் எனக் கூறுவார். அவர் மலைவலம் வரும்போது மலையின் மேல் தன் பார்வை கவனம் இருந்தபடி வருவார் எனச் சொல்லுவர்கள். நான் சுற்றும்போது அதை பின்பற்ற முயல்வேன். அப்போது ஒவ்வொரு சிறு தூரத்திற்கும் மலையின் வடிவம், பரப்பு மாறியபடி இருக்கும்.  ஒற்றையாய் இருக்கும் மலை சில சமயம் இரண்டு மலைகளென தெரியும். சட்டென்று ஒரு திருப்பத்தில் மலையின் ஒரு பாறை நந்தி முகமாய் காட்சியளிக்கும். சில சமயங்களில் பசுமை போர்த்தியதாகவும் சிறிது தூரம் கடந்து பார்க்கும் போது வறண்டும் இருக்கும். ஓரிடத்தை கடக்கும்போது  மலையில் ஐந்து முகப்புகள் தென்படும். ஒவ்வொரு நூறடிக்கும் மலை ஒரு புதுவடிவம் எடுக்கும். இதில் எந்த வடிவத்தை அண்ணாமலையின் வடிவம் எனக் கொள்ள முடியும்? அனைத்துமே அதன் வடிவம் தானே. அண்ணாமலையை ஒருவர் ஒரே நேரத்தில் முழுமையாக பார்க்க முடியாது. அதை வலம் வருவதன்மூலம் ஓரளவிற்கு அதன் முழுமையை அறிய இயலும்.

   கண்ணனும் இதைப்போல் இதுதான் அவன் என ஒரு வடிவத்தில் அமையாதவன்.   வெண்முரசில்  ருக்மணியை கவர்ந்து செல்லும் இப்பகுதியில், காதலியின் அழைப்பைக் கேட்டு ஓடோடி வரும் காதலன், ஆழியின் மூலம் பகைவர் சிரம் அறுக்கும் போர் வீரன், அமிதைக்கு முக்தியளிக்கும் இறை, பலராமருக்கு மதிப்பையும் பணிவையும் காட்டும் தம்பி, போரை வழி நடத்தும் தளபதி,  போர் நெருக்கடியிலும் ருக்குமணியின் அங்கங்களில் அத்துமீறும் காமுகன்,  சட்டென்று தத்துவம் பேசும் ஆசிரியன், பகைவரை மன்னித்து விடுவிக்கும்   அருளாளன் என கணத்திற்கு கணம் மாறிய வண்ணம் இருக்கிறான்  கண்ணன்.    இதுதான் கண்ணன் என்று எந்த வடிவத்தை கண்ணனுக்கு கொடுக்கமுடியும்?  அனைத்தும் கண்ணனின் வடிவங்களே.  கண்ணனின் பேருருவை சுற்றி நம் கைபிடித்து வலம் வருகிறார். நாம் கண்ணனின் வடிவங்களையெல்லாம் தொகுத்து அறிந்துகொள்ள அது வழிவகுக்கிறது.

தண்டபாணி துரைவேல்