Tuesday, August 11, 2015

நீலத்தின் கதை

71 பகுதிகள் முடிந்து விட்டது. சுத்தமாக ஹஸ்தினபுரி மறைந்து விட்டது. கர்ணனும் துரியனும் ஒளிந்து கொண்டனர். துவாரகை ஆக்கிரமிப்பு மிக அதிகமாக  செல்கிறது. நடப்பது கடந்த காலமா நிகழ் காலமா என உணராத கனவு போல நீலன் மலர்ந்து வளர்ந்து விட்டான். ஒவ்வொரு நிகழ்வும் தனி ரகம். ஆடி பேருக்கு தினங்களின் சமயம் அருமையாக ருக்மிணி கவர் நாடகம்.நீர் என்னும் வடிவம் பொங்கி பொங்கி சென்ற பகுதிகள். வெள்ளம் மிகுந்து தெளிந்து சிசுபாலன் நீந்தி ஏறி பின் விழா தொடங்கி ... வரதை மனதை நிரப்பி விட்டது. 

ருக்மிணி ராதையின் வடிவம் போல.... சற்று மண் இறங்கி வரும் மேகம் போல அவ்வப்போது நிகழ் உணர்ந்து பின் வான் ஏகி வாழும் திருமகள். குதிரையில் உள்ளம் கவர் கள்வனின் இடது கை மார்பில் படும் வர்ணனையில் மனம் அவளை நிரப்பி வழிந்தது. நடக்கும் நிகழ்வுகளாக கதை சென்று கொண்டும் இருக்கும் போதே சூதர் பாடல்கள் வழியாக அதை கடந்த காலமாகி செல்வதை பார்த்தபடி திகைக்க சாத்யகி பாஞ்சாலன் பேச்சுகள் வர நிகழ் காலமாக மாற.... வானவில் நாட்கள் இவை. 

கிருஷ்ணன்.... தொலைவில் சென்று விட்டான். சென்றபடியும்.... அமிதை ருக்மிணியின் இறுதி நாளின் துவக்கத்தில் அல்லாடுவது போல மனம் மயங்குகிறது. மழை சொட்டு கையில் இறங்கி வான்  ஒளி தெறிக்க சுடர்வது பார்த்து வியந்து நின்றபடி எனக்கு மட்டும் என மயங்கி - காலம் மறந்து ...பிறகு திரும்பி பார்க்க காட்டு வெள்ளம் என பரவி பாயும் விதமாக நீல கரியன். 

42 பகுதியில் மாலை காசி எல்லை கடந்து கருக்கி வரும் வேளையில் மேடு ஏறி நின்று பின் இறக்கத்தில் பாயும் போர் காட்சி சில காலம் மறக்காது. சததன்வா தலை தன் உடலை, புரவியை பார்க்கும் காட்சியோடு நீலன் கடமை முடிந்தது. கச்சிதமாக மிகை உணர்ச்சி இன்றி சத்ராஜித் கணக்கு முடித்து கொண்டு மீதியை திருஷ்டத்யும்னன் கையில் கொடுத்துவிட்டு விலகி கொண்டது மிக பொருத்தம். அதே சமயம் மன்றில் தன் செயல் வீண் என ஆகியதை உணர்ந்து இறுகி அவன் இருக்க அவனையும் அணைத்து கொண்டு அக்ரூரர் மற்றும் க்ரிதவர்மன் இருவரையும் உணர வைத்து balance செய்த அவன் ஆளுமை கச்சிதம். 

எதை சொல்வது என தெரியவில்லை. இந்திரநீலம் வர்ண ஜாலம். 
சிலது பட்டது... பல எண்கள் இருக்கையில் , பன்னிருவர் என்ற எண் பதம் அதிகமாக வருவதாக. மற்றும் போர்களில் ஒரு தடவை கூட கத்தி அல்லது வேறு ஆயுதம் கிருஷ்ணன் மேல் படுவதாக நினைவு இல்லை. அதிலும் சிசுபாலன் ருக்மி வதையில் கீறல் கூட இன்றி. வீரனுக்கும் காயங்கள் ஏற்படும் அல்லவா? அர்ஜுனனின் படை பயற்சி போன்ற பின் புலம் காட்டப்படாமல் சடகென்று போரில் ஜொலிப்பது சற்று மிகை கற்பனை ....இருக்கட்டுமே இவன்  மட்டும் தானே கடவுள்.

அன்புடன், 
லிங்கராஜ்