Monday, August 10, 2015

தெய்வமேறுதல்


"மலரும் சுடரும் காட்டும்தோறும் கற்சிலையில் தெய்வம் எழுவதுபோல அவர்கள் மலர்ந்தெழுகிறார்கள்." - இந்திரநீலம் 70.

ஒருகணம் வாசிப்பை நிறுத்திவிடடேன். எவ்வளவு பெரிய உளவியல் உண்மை. சும்மா போகிறபோக்கில் வந்து விழுகிறது. ஒரு கல் சிலை தெய்வமாவதுஅதை வணங்கும் மக்களின் எண்ணங்களால், நம்பிக்கையால். அந்த நம்பிக்கைகளே காணிக்கையாகவும், வழிபாடாகவும் வெளிப்படுகின்றன. வழிபாடுகள் பெருகப் பெருக அத்தெய்வம் பலரை ஈர்க்கிறது. மேலும் மேலும் நம்பிக்கைகள் பெருகப் பெருக அச்சிலையின் தெய்வாம்சம் மிகுந்து வருகிறது.

இதே போன்று அனுதினமும் காவியத்தில் வாழும் அஷ்ட தேவியரும் காவியத்தின் விரிவு போன்றே மெருகேறிக் கொண்டே செல்கின்றனர். எனவே தான் பெரும் எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றத்தை அவர்கள் அளிப்பதில்லை.
இனி நடைமுறைத் தளத்திற்கு வருவோம். நல்ல வார்த்தைகளும், நன்னம்பிக்கைகளும் சூழ வளரும் குழந்தை அவை குறைந்த சூழலில் வளரும் ஒரு குழந்தையை விட சிறப்பாக வர சாத்தியக் கூறுகள் மிக அதிகம். சூழலின் நன்னம்பிக்கை தன்னம்பிக்கையாக உருமாறும். தன்னம்பிக்கை தரும் செயலூக்கம் சூழலின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும். சூழலோடு கொண்டும் கொடுத்தும் வளர்வதே மானுடனை மீமானுடனாக்கச் செய்யும், சுடரும் மலராட்டும் தெய்வத்தை எழச் செய்வதைப் போல! 

அருணாச்சலம் மகராஜன்