Monday, August 3, 2015

அறத்தான்

அன்புள்ள ஜெ,


பிராயாகையில் ஒரு இடம். குந்தி பைசாசிக வழியிலேனும் அரியணையை அடைய வேண்டும் என தருமனிடமும், அர்ச்சுனனிடமும் சொல்வாள். அரியணையமர்ந்து நல்லாட்சியையும், பெருவளத்தையும் நல்கினால் தானாக அவர்கள் பாண்டவரை ஏற்றுக் கொள்வார்கள் எனக் கூறுவாள். அதற்கு ஆதாரமாக கணவன் திருடித் தரும் நகையை வேண்டாமெனச் சொல்லும் எத்தனைப் பெண்களைப் பார்த்திருக்கிறாய் என வினவுவாள்.
அதற்கு அர்ச்சுனன், "மக்கள் நீதியை நம்பிவாழவில்லை. ஆனால் அவர்கள் நீதிமான்களை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள். நாம் அறம் மீறி இவ்வரியணையை வென்று மக்களுக்கு தீனிபோட்டு நிறைவடையச் செய்யலாம். ஆனால் ஒரே ஒரு நீதிமான் எழுந்து நம்மை நோக்கி கைநீட்டினால் மக்களுக்கு இரு தேர்வுகள் வந்துவிடுகின்றன. நாமா அவரா என. அவர்கள் ஒற்றைப்பெருந்திரளாக அந்த நீதிமானை நோக்கிச் சென்றுவிடுவார்கள். அன்னையே, மக்கள் தங்களை நீதிமான்களென நம்பவே விழைவார்கள். ஆகவே நீதிமானை கைவிட அவர்களால் முடியாது. அத்துடன் அவர்களின் உள்ளம் ஒருகணத்தில் எது வலிமையான தரப்பு என்றும் உணர்ந்துகொள்ளும். அறம்பிழைத்த நாம் கொள்ளும் குற்றவுணர்வையும் அறவோனிடமிருக்கும் நிமிர்வையும் அவர்கள் கண்டுகொள்வார்கள். அக்கணமே அவனை நோக்கிச் செல்வார்கள்…"


இன்று தன்னிச்சையாக மக்கள் செலுத்திய அஞ்சலி இதை உறுதிப்படுத்துகிறது. நண்பர் முத்துக்கிருஷ்ணன் சொல்வது போல மேன்மக்கள் அவர்களது இருப்பு ஒன்றினாலேயே மக்களை அடைந்து கொண்டேயிருக்கிறார்கள். குடிக்க நீர் கூட இல்லாமல் கிலோமீட்டர்களாக நீண்ட வரிசையில் நின்று, கண்ணியத்தோடு,

அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அவரின் புகைப்படத்தை வைத்து அவரவர்க்குத் தெரிந்த வகையில் அஞ்சலி செலுத்தியவர்களுக்கும் அவர் அளித்தது என்ன? இவ்வரிகள் மிகச் சிறப்பாகச் சொல்கின்றன, 'என்னதான் இருந்தாலும் ஒன்று அப்பட்டமானது. அவர் தனக்கென வாழவில்லை. இந்த நாட்டை அவர் விரும்பினார். இதன் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டுமென கனவுகண்டார். அதற்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். தனக்கென எதையும் சேர்க்கவில்லை. அத்தகைய மகத்தான முன்னுதாரணங்கள் நம் முன் இன்று குறைவே.'

என்னளவில் நான் பேசிய அனைவரிடமும் அவர் ஈட்டியிருந்த மரியாதை அளப்பரியது. பெரும்பாலானோருக்கு அவர் நம்பிக்கையூட்டியிருக்கிறார். 'ஆம், என்னால் முடியும்' என்று சொல்ல வைத்திருக்கிறார். அவரது முகமே நம்பிக்கையூட்டும் புன்னகையுடையது தான். அனைவருக்கும் இந்தியாவின் ராக்கெட் நாயகனாக அவர் தெரிந்திருக்கிறார். அக்னியும், பிருத்வியும் அவர்களுக்கு பெருமிதம் தந்திருக்கின்றன.

அனைத்திற்கும் மேல் அவர் அயராது இளைஞர்களைச் சந்தித்துக் கொண்டேயிருந்தார். அதற்காக இந்தீயா எங்கும் பறந்தார். அது தான் அவரை மக்களிடம் சேர்த்திருக்கிறது. அவர் ஒருபோதும் மக்களை வழி நடத்துகிறேன் என்று சொல்லவில்லை. அவர்களைக் கருணையுடன் பார்த்துக் கனியவில்லை. தன்னைப் போல ஒருவராகக் கருதி அவர்களிடம் செய்ய வேண்டியவற்றை விவாதித்தார். இத்தனை பேர் அஞ்சலி செலுத்திய வரலாறு உண்மையில் மக்களைக் குனிந்து பார்த்து வழிநடத்துபவர்களை அச்சுறுத்தியிருக்கிறது. அதுவே இது போன்ற கேள்விகளாக வெளிவருகிறது. தன்னை, தன் எளிமையை, தன் நேர்மையை, தன் உழைப்பை தானாக முன்வைத்த ஒரு விழுமியம் மனதின் ஓரத்தைக் கூடத் தொடாமல் தான் ஒரு அறிவு ஜீவி என்ற மாயையில் சிக்கியிருக்கும் இவர்கள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள் மட்டுமே!

கலாம் இத்தனை பேரைச் சென்றடைந்திருப்பார் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். இனி அவரின் பிம்பத்தை உடைக்க பல முனைகளிலும் முயற்சிகள் நடத்தப்படும் என மிகச் சரியாகவே கணித்திருக்கிறீர்கள். எவ்வளவு தான் உடைக்கப்பட்டாலும் அறத்தின் ஒவ்வொரு துகளும் அறமே!!!

அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்