Thursday, August 6, 2015

ருக்மி ஏற்க மறுத்த தோல்வி


 எல்லோர் கவனமும் வெற்றி பெற்றவனின் மேல்தான்  இருக்கிறது. வெற்றி பெற்றவனின் அகங்காரம்  ஊதிப் பெருகும் என எதிர் பார்க்கிறோம் சில சமயம் அது நடக்கவும் கூடுகிறது. வெற்றிபெற்றவன் அவன் வெற்றிக்கு காலம், சூழல், இயற்கை, பிறருடைய உதவிகள், என பலகாரணங்கள் இருந்ததை மறந்துவிட்டு முழுக்க தானே காரணம் என்று  கர்வத்தை தலையில் ஏற்றிக்கொள்வது உண்மைதான்.  இருந்தாலும் அவன் நலம் நாடுபவர்கள் அவனுக்கு எடுத்துக்கூறி  அவன் நிலையை அவனுக்கு உணர்த்திவிட இயலும். 

    ஆனால் நாம் தோல்வியடைந்தவனை மறந்துவிடுகிறோம்.   உண்மையில் பார்த்தால் தானடைந்த தோல்வியை ஏற்காத தோல்வியடைந்தவனின் அகத்தில், அகங்காரம் சீண்டப்பட்டு வெறி கொண்ட மிருகம்போல் வளர்ந்து நிற்கிறது. அது அவனுடைய அறம், பொறுமை, அனைத்தையும் உண்டு தனித்து கொழுத்திருக்கிறது. அந்த அகங்காரத்தில் தெரிந்தும் தெரியாமலும் அதிக தவறுகளை செய்து பேரழிவை அடைகிறான். அதனால் அவனுக்கும் மற்றவருக்கும் விளையும் கேட்டுடன் ஒப்பிடும்போது வெற்றிபெற்றவனின் கர்வம் சகித்துக்கொள்ளக்கூடியதே.

   தனக்கு தோல்வி நிகழாமல் தடுப்பது தன் கையில் மட்டும் இல்லை. ஆனால் அடைந்த தோல்வியை ஏற்றுக்கொள்வதன் மூலம் அதை புரிந்துகொள்கிறோம். அதில் தம் பிழை மற்றவர் வினை என அனத்தும் புரியவரும். அதில் நாம் கற்கும் படிப்பினை, எந்தக் கல்வியையும் விடச் சிறந்ததாகவும் முக்கியமானதாகவும் இருக்கும்.    ஆனால் பெரும்பாலும் தோல்வியடைந்தவன் முதலில் தான் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்வதில்லை. சில நேரத்தில் அதை அவன் உணர்வதேயில்லை. அவன் ஆழ்மனம் அறிந்த ஒன்றை அவன் சிந்தையில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறான். அதனால் மேலும் மேலும் இழிவை அடைந்து  முற்றிலுமான அழிவை அடைகிறான்.

   கம்சன் வசுதேவரின் எட்டாவது குழந்தை தன்னிடமிருந்து தப்பித்தபோதே அவன் ஆழ்மனம் அவன் தோல்வியுற்றதை அறிந்துவிட்டது. ஆனால் அவன் அதை ஏற்றுக்கொள்ளாமல் தவறின் மேல் தவறென செய்துகொண்டே செல்கிறான். ஒவ்வொரு தோல்வியும் அவனின் கொடுமையை அதிகரித்தவண்ணம் செல்கிறது, 

   இராவணன் தன் தோல்வியை அறிந்த கணம் எது?  ராமனின் அம்பில் வீழ்தல், தன் மகன் இந்திரஜித்தின் வீழ்ச்சி, கும்பகர்ணைன் வீழ்ச்சி, விபீடனன் பிரிவு, அனுமனின் இலங்கை எரிப்பு என இவற்றுக்கு எல்லாம் முன்னால் அவன் மானுடர்களான ராம்ன் இலட்சுமனனை நேரில் சென்று வீழ்த்தாமல்,  சீதையை மாயத்தின் வழி கவர நினைத்தபோதே தான் தோற்றுவிட்டதை அறிந்திருப்பான். சீதையை கவர்ந்த அவன், அவள் மனதை மாற்ற இயலாதபோது முற்றிலுமாக அவன் தோல்வியை அவன் உள்மனம் அறிந்துவிட்டது. அதை  அவன் ஏற்க மறுத்ததால் அவனை சார்ந்தவர்கள் மற்றும் அவனுடைய அழிவை தேடிக்கொள்கிறான்.   


   துரியோதனன் தானே வலியவன் என்றிருக்கும்போது பீமனால் கரடியிடம் காப்பாற்றப்பட்டதை தன் தோல்வியென கருதி அவன் மனம் வஞ்சம் கொள்கிறது. பின்னர் பீமனுக்கு நஞ்சூட்டுதல் என ஆரம்பித்து வாரணாவத எரிப்பு என நீண்டு அவனின் அற வீழ்ச்சி அதிகரித்துக்கொண்டே போகிறது. 


  ருக்மியை எடுத்துக்கொள்வோம். அவனுடைய 'ருக்மணி சிசுபாலன்
திருமணத்திட்டம்' எப்போது ருக்மணி ஒத்துக்கொள்ளவில்லையோ அப்போதே தோல்வியடைந்துவிட்டது. அதை அவன் ஏற்றுக்கொண்டிருந்தால் விதர்ப்ப தேசம் எவ்வளவு மகிழ்வுடன் கண்ணன் ருக்மணி திருமணத்தை கொண்டாடியிருக்கும். கண்ணனுக்கு மைத்துனனாக வரலாற்றில எவ்வளவு புகழுடன் இருந்திருப்பான். ஆனால் அந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ளாததால் வீணற்ற முயற்சிகளில் ஈடுபடுகிறான். அவனுடைய செயல்கள் அவன் நாட்டுக்கும் மக்களுக்கும் தீமைதருவதாக ஆகிவிடுகின்றன.

நாம் எப்போதாவது தோல்வி அடைய நேர்ந்தால் நம் முதல் கடமை அந்தத் தோல்வியை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அதன் மூலம் நாம் நம் நெஞ்சில் வஞ்சம் எழாமல் தடுத்து அறத்தின் வழி நிற்க முடியும்.  அது மற்ற எந்த வெற்றியைவிடவும்  முதன்மையான வெற்றியாகும்

தண்டபாணி துரைவேல்