Tuesday, August 18, 2015

இரண்டு கோதண்டராமர்கள்

அன்புள்ள திரு.ஜெ வணக்கம்.

இரவில் வீட்டுக்கு முன்னால் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து இருந்த அப்பா, தெருவில் நடந்துச்சென்ற அண்ணன் ராஜேந்திரனை அழைத்து கோதண்டராமனிடம் காலையில் சண்டைப்போட்டாயா என்று கேட்டார்கள்.

வயலுக்கு தண்ணீர் பாஞ்சிகிட்டு இருக்கு, கன்னியை நடுவுல தடுத்து அணைப்போட்டார் அண்ணாச்சி அதான் சண்டை.

அதுக்காக ஒரு பெரியவரை அடிக்க போகலாமா?. வயலுக்கு தண்ணிப்பாயுதுன்னு அமைதியாக சொல்லவேண்டியதுதானே, அவரைப்பற்றி உனக்கு என்ன தெரியும்? நீ அடிக்கப்போனதும் அவர் அமைதியா போயிட்டதும், பயந்துட்டு போயிட்டாருன்னு நினைக்காதே. ஒரு முறை உளுந்து ஏத்திக்கொண்டு சென்ற வண்டி வாய்காலில் சாயப்போனபோது ஒத்த ஆளா இழுத்து நடு ரோட்டில் போட்டவர்.   அவர் கையில் மாட்டுனா யானையா இருந்தாலும் அசைய முடியாது. நாளைக்கு அவரைப்பார்த்து மன்னிப்கேளு. இனி அதுமாதரி நடந்துக்கக்கூடாது.

சரி, அண்ணாச்சி. அண்ணன் போய்விட்டார்.

கோதண்டராமன் சைக்கிள் ஓட்டிக்கொண்டுப்போகும்போது பார்த்தா ஒரு யானை சைக்கிள் ஓட்டிப்போவதுபோலத்தான் இருக்கும். அதண்டுப்பேச மாட்டார். எதுவும் ஒரு நிதானமாகவே செய்வார். வயதான உடம்புக்குள் ஒரு குழந்தை செல்வதுபோல இருக்கும். பள்ளிக்கூடம் படிக்கும் வயதில் அவர்போல வெயிட்லிப்டன் அகணும் என்ற ஆசை இருந்தது. பென்சிலைத்தூக்குவதே போதும் என்று காலம் போகின்றது. “நோற்பார் சிலர்பலர் நோவாதவர்” நோவாதவருக்கு எல்லாம் நோவு தானவே வருது. 

தன்னை அடிக்க வந்த அண்ணனை அவர் ஏன் அப்பா அடிக்க வில்லை?

அவர் பலம் அவருக்கு தெரியும், இவன் பலமும் தெரியும், அடித்தால் இவன் தாங்கமாட்டான் என்றுதான் அமைதியாக போய்விட்டார் என்றார்கள் அப்பா.

கோதண்டராமன் உடம்பால் உள்ளத்தை கட்டுப்படுத்துபவர்.

தசரதபுத்திரன் கோதண்டராமன் அன்னை சீதையை தொலைத்து, செடி, கொடி, மலை, நதி, மான், பறவை அனைத்திடமும் எங்கே என் சீதை என்று அழுது அழுது கேட்டு, தேடித்தேடி, நடையாய் நடந்து எடுத்துப்போனவனை யுத்தகளத்தில் சந்தித்து அவன் ஆயுதம் இன்றி நிற்கும் இடத்தில் “இன்று போய் நாளைவா” என்கின்றான். கோதண்டராமன் உள்ளத்தால் உள்ளத்தை கட்டுப்படுத்தியவன்.


ஆதி சங்கரரின் சீடர் பத்மபாதர் உள்ளத்தால் உள்ளத்தை கட்டுப்படுத்தி கண்டுபிடிக்க நினைத்த நரசிம்ம பெருமானை, காட்டுவேடன் உடலால் உள்ளத்தைக்கட்டுப்படுத்தி ஒரே நாளில் காட்டுக்கொடியால் நரசிம்மரை கட்டி இழுத்துவந்து பத்மபாதர் முன்போட்டான்.

//உள்ளத்தை வெல்ல உள்ளத்தால் முயல்பவன் யோகி. அவர்களின் வழிகள் பல. உள்ளத்தை உடலால் வெல்லமுடியும் என அறிந்தவன் வீரன். மாபெரும் யோகிகள் அடையாத உச்சங்களை எளிய வீரர்கள் சென்றடையலாகும்துரோணர் விழிமூடி தன்னுள் மூழ்கியவர் என சொல்லெடுத்துக்கொண்டிருந்தார்//-இந்திரநீலம்-71

மனிதன் ஒவ்வொரு கணமும், ஒவ்வொன்றை வென்று வென்று செல்ல விரும்புகின்றான். தன்னை வெல்லும் காலம் ஒன்று வரும் நாளில், விறுதாய் ஓடிக்களைத்த நாளை எண்ணித்தவிக்கிறான். உள்ளத்தால் உள்ளத்தை வெல்லுதல் ஒன்று, உடலால் உள்ளத்தை வெல்லுதல் ஒன்று என்று இரண்டு வழியில் சென்று வெல்லும் ஒன்று உள்ளம் ஒன்றே என்று அறிகின்றான். மனமது  செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்று இன்புறுகின்றான்.

மனமது செம்மையானால்
மந்திரம் செபிக்கவேண்டாம்
மனமது செம்மையானால்
வாயுவை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால்
வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால்
மந்திரம் செம்மையாமே!
- அகத்தியர்

அன்புள்ள ஜெ, உள்ளம் அடக்கபடவேண்டும் என்னும்  இருவழிகளை மின்கீற்றென பிரித்துக்காட்டும் திருஷ்டத்யுமன், பாமா சந்திக்கும் அந்த இடம் அற்புதம். 

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்