:
நாம் அன்றாடம் பயன்படுத்தும் எழுத்துருக்களின், குறிகளின் உருவாக்கம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது மிகவும் உற்சாகம் தரும் கற்பனை. உலகெங்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வினாக்குறி, ஆச்சரியக்குறி, புள்ளி போன்றவை உலகெங்குமுள்ள மானிடர் அனைவருக்குமான ஒரு பொதுவான உணர்வின் கவித்துவ வெளிப்பாடாகவே இருக்க முடியும். அக்கவித்துவம் இயற்கையோடு இயைந்து, ஒவ்வொன்றையும் கூர்ந்துஅவதானித்து அவற்றிலிருந்து தனக்கான அறிதல்களைப் பெற்றுக் கொண்ட பழங்குடி மனமுடையதாகவே இருக்க இயலும்.
நாம் அடிக்கடி பயன்படுத்தும் குறிகளில் வினாக்குறியும் ஒன்று. மானுடம் தோன்றிய நாளிலிருந்தே வினாவும் அறியவியலா இருப்பாக நம்முடனேயே இருந்து வரத்தான் செய்திருக்கிறது. மானுடம் தன் அறிதலின் எல்லையை விரிவுபடுத்த, விரிவுபடுத்த அவ்வினாவும் விரிவாகிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இவ்விரிவை அளக்க இயலாமல், அறிய ஒண்ணாமல் அப்பேருரு முன் தன் அறிவையெல்லாம் மடக்கி, தன் ஆணவத்தின் தலை மண் தொட நின்றிருக்கும் போது அப்பழங்குடி மனதிற்கு வந்த அடையாளமே வினாவின் குறியாக மாறியிருக்கும்.
இதையே திருஷ்டதுய்மன் அக்ரூரரிடம், 'களத்தில் நெருப்பு போல, புயல் போல, கொடுநோய் போல பேரழிவு மட்டுமே என திரண்டு நின்றிருக்கும் அவரைப் பார்த்த பின்பு அரியணை அமர்ந்திருக்கும் அவர் புன்னகையை நோக்குகையில் பெருவினா ஒன்றின் முன் முட்டு மடங்கி வளைந்து மண்தொட்டு என் கல்வியும் ஆணவமும் வணங்குகின்றன', என்கிறான். இதைப் படித்த சில கணங்கள் மனம் சற்று திகைத்துத் தான் போனது. அக்ருரரின் வார்த்தைகளில் சொல்வதானால், 'நாம் அறியவொண்ணாத ஓர் பேரிருப்பு ஜெ வழியாகத் தன்னை எழுதிச் செல்கிறது', எனலாம்!!!!
அன்புடன்,
மகராஜன் அருணாச்சலம்
மகராஜன் அருணாச்சலம்