ஒருவன் குற்றம் இழைத்து சமுதாயத்தால் தூற்றப்பட்டு
தலைகுனிந்து நிற்கையில் அவன் தனித்துப்போகாமல் இருப்பதற்கு ஒரே காரணம் அவன்
உயிர் நண்பர்கள். அவனின் பெற்றோர் மனைவி அல்லது நெருங்கிய உறவினர்கள்
அந்நிலையில் அவனுக்கு உதவச்செய்வார்கள் என்றபோதிலும் அவன் குற்றத்தை
மன்னித்துவிடுவார்கள் எனச் சொல்லமுடியாது. அவர்களுக்கும் அவன்
குற்றவாளிதான்தான். வெளியில் அவனை விட்டுக்கொடுக்காமல் இருந்தாலும், அவன்
இப்படி குற்றம் செய்துவிட்டானே எனஅவர்கள் உள்ளத்தில் அவனிடம் கோபமும்
வருத்தமும் இருக்கும். அவர்கள் மனதில் அவனின் மேல் ஒரு விலக்கம்
ஏற்பட்டிருக்கும்.
ஆனால் நண்பர்கள் குற்றம் செய்தவனை மனதளவில்
விட்டுவிடுவதில்லை. உறவினர்கள் ஒருவனுக்கு உடலால் இணைக்கப்பட்டவர்கள்.
ஆனால் நண்பர்கள் மனதால் நெருங்கியவர்கள். நண்பர்கள் தம் மனதை
பகிர்ந்துகொள்வதைப்போல் நெருங்கிய உறவினர்கள்கூட தம் மனங்களை
பகிர்ந்துகொள்வதில்லை. ஒருவன் தன் மனைவியைக்கூட அனுமதிக்காத தன் மனதின்
சில ரகசிய அறைகளை தன் நண்பனுக்கு திறந்துவிடுவான். ஆகவே ஒருவனின்
மனப்பலவீனங்களை ஏற்கெனவே அறிந்தவனாக அவன் நண்பன் இருக்கிறான். இன்னும்
கேட்டால் அவர்களின் நட்பு மேலும் மேலும் இறுகியதற்கு காரணமாக பெரும்பாலும்
இருப்பது தங்கள் மனப் பலவீனங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதுதான்.
பள்ளி கல்லூரி வகுப்பறைகளின் முதல்பலகை மாணவர்களுக்கிடையே ஒரு மேலோட்டமான
நட்பு மட்டுமே இருப்பதையும் ஆனால் சேட்டைகள் செய்யும் பின்வரிசை
மாணவர்களுக்கிடையேயான நட்பின் நெருக்கம் அதிகம் இருப்பதையும் நாம்
கண்டிருக்கிறோம். ஒருவன் செய்த ஒரு தவறுக்கான அவன் மனநிலையை ஒரு
நண்பன்மட்டுமே முழுமையாக புரிந்துகொள்கிறான். அவன் செய்த அந்த தவறை தானும்
செய்ததாக உணர்கிறான். அந்தத் தவறுக்கு தானும் காரணம் என குற்ற
உணர்வுகொள்கிறார்கள். அந்தத் தவறை சரிசெய்ய, அவனை அக்குற்றத்திலிருந்து
காக்க தயக்கமின்றி உதவுகிறார்கள்.
திருஷ்டத்துய்மன் காலடியில்
முன்னர் கிருதவர்மன் தலைகவிழ்ந்து தன்னை கொன்றுவிடும்படி சொல்லிய அதே
நிலையில் இன்று சாத்யகி. கிருதவர்மனை கடுமையாக தண்டிக்கிறான். இன்றோ
சாத்யகியை மன்னித்து அவன் குற்றத்தை மறைக்கிறான். அவனை
கட்டித்தழுவுகிறான். ஏன் இந்த பாகுபாடு? இருவரின் குற்றமும் சமமானதுகூட
இல்லை. கிருதவர்மன் குற்றத்திற்கு துணைபோனவன் மட்டுமே. சாத்யகி நேரடியாக
இதில் ஈடுபடுகிறான். . திருஷ்டத்துய்மன் ஒருவகையில் கடமை தவறுகிறான்.
கண்ணனின் நம்பிக்கைக்கு மாறாக நடந்துகொள்கிறான். அதற்கு காரணம் சாத்யகி
திருஷ்டத்துய்மனின் நண்பன் என்ற ஒரு காரணம் மட்டும்தான். இது நட்பின்
உயர்வையும், அதன் பலவீனத்தையும், ஒருசேற காட்டுகிறது. இதே நிலையின் பெருவடிவை பின்னர் நாம் கர்ணன் பாத்திரத்தில் காணப்போகிறோம்.
தண்டபாணி துரைவேல்