சட்டம் ஒழுங்கு நாட்டை நலமாக வைக்க உதவுகின்றது. ஆனால், சட்டம்
ஒழுங்கு உயிர்ப்போடும், உணர்வோடும் இருக்கின்றதா என்றுப்பார்த்தால் எங்கேயோ இடிக்கின்றது.
சட்டம் ஒழுங்கு ஒரு சடம்போல் இருப்பதுதான் நல்ல சட்டம் ஒழுங்கு என்ற நிலைதான் எங்கும்
உள்ளது. சட்டம் ஒழுங்கில் உயிர்ப்போ, உணர்வோ ஏறும்போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டியர்கள் அனைவருமே பயப்படுகின்றார்கள்.
ஏன் இந்த உள மயக்கு?.
நாட்டைக்காப்பாற்றுகின்றேன்
என்று சொல்பவர்கள் எல்லாம் சட்டத்தைக் காப்பாற்றுவதே நாட்டைக் காப்பாற்றிவி்ட்டதாக
நினைப்பதால் இது எற்படுகின்றது. ஏன் அப்படி நினைக்கின்றார்கள்? நாட்டு நலம் அல்லது தனது நலன் என்று வரும்போது தனது
நலனே நலம் என்று நினைக்கும் சுயநலத்தால் வந்து சேர்வது இது. எனது கடமையை நான் செய்துவிட்டேன்
என்று தப்பிக்கொள்ள நாடும் எளிய சுயநலவழியே அது. தியாகம் இல்லாமல் வெறும் கடமை என்று
வரும்போதுதான் இந்த சடத்தனம் சட்டத்தில் வந்து ஏறி ஆட்சிச்செய்கின்றது. தியாகம் செய்பவன்
முன் சட்டமே தனது சட்டையைப்போட்டுக்கொண்டு வந்து வழி மறைப்பதுதான் சட்டத்தின் சாமர்த்தியம்.
மகிஷ்மதிக்கு கண்ணன்
வந்துவிடக்கூடாது என்றுதான் ஒவ்வொரு காவலனும் காவல் இருக்கின்றார்கள். அதை அவர்கள்
சரியாக செய்வதுதான் சட்ட ஒழுங்கை காப்பாற்றும்விதம் ஆகும், கண்ணன் வராத வரையும் உணர்வுப்பூர்வமாக
ஒழுங்காக இருக்கும் காவல், கண்ணன் வந்துவிட்டான் விரைவு என்னும்போதுதான் தனது உணர்வை
இழந்துவிடுகிறது, சட்டம் உணர்வற்று வெறும் சடமாக முன்வந்து நிற்கின்றது.
உலகம்
முழுவதும்
நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும்,
சட்டத்தை காப்பாற்றுவதாற்க
மட்டுமே உள்ளன. மக்களையோ நாட்டையோ காப்பாற்றுவதாக இல்லை. காரணம் அதில்
உள்ள உணர்வு உயிர்ப்பு பாடம் செய்யப்பட்ட பூக்களின் வண்ணமும் வடிவமும்போல்
இருப்பதுபோல் தெரியும் ஆனால் பயன்படுவதில்லை.
சட்டம் தேவையான
இடத்தில் சடமாக இருக்கும் நிலையை காட்டும் ரிஷபனின் மனஉணர்வு அற்புதம். ரிஷபன் எரிச்சலுடன்
தலை குனிந்து “நல்லது” என்ற இடத்தில் வந்து இயங்க முடியாமல் நிற்கின்றான் நாடே தான்
என்று நினைக்கும் உலக தியாகிகள் எல்லாம். உலகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு அந்த நல்லவர்களை
எரிச்சல் ஊட்டியபடியேதான் இருக்கிறது. அவர்களும் இயலாமையுடன் அதனிடம் “நல்லது” என்று
புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சட்டத்தை உணர்வு அற்ற சடமாக செய்பவர்கள் எல்லாம்
கடமைவீரர்கள் என்று சட்டத்தின் முன் சன்மானம் பெறுபவர்களாக இருக்கிறார்கள். சட்டம்
தனது கடமையை செய்யும் என்பது இதுதானா?
ஐயம் கொண்டவனாக கண்களைச் சுருக்கி நோக்கி “முத்திரை?” என்றான் கோட்டைக்காவலன். ரிஷபன் தன் கணையாழியைக் காட்டியதும் அதை மூவர் மாறி மாறி நுண்ணோக்கினர். “விரைவு” என்றான் ரிஷபன். “விரைவல்ல, இங்கு தேவையானது எச்சரிக்கைதான்…” என்றான் கோட்டைக்காவலன். “நாங்கள் முறைமைகளை விடமுடியாது.” பிறிதொருமுறை நோக்கிவிட்டு ஒருவரை ஒருவர் விழிகளால் தொட்டுக் கொண்டபின் தலைவன் தலையசைத்து “செல்க!” என்றான். எரிச்சலுடன் தலைகுனித்து “நல்லது” என்றபின் அவன் திட்டிவாயிலினூடாக உள்ளே சென்றான்-இந்திரநீலம்-85.
நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்