இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரையை ஆளும் இந்திரன் பெயரால் அமைந்த நகரம். மகாபாரதப் பின்னணியைக் கொண்டு நான் எழுதிவரும் வெண்முரசு நாவல் வரிசையின் ஏழாவது படைப்பு இது. இந்திரப்பிரஸ்தம் உருவாவதற்கான பின்புலத்தை விரிந்த புனைவுவெளியாக இது காட்டுகிறது. இதன் மையம் பாஞ்சாலிதான்.
ஐந்துகுலங்களின் கொழுந்து அவள். ஐவரும் அவளை மணந்து அறியும் ஐந்து முகங்களெனத் தொடங்கும் இந்நாவல் அவள் அஸ்தினபுரியின் அரசியென ஆகி இந்திரப்பிரஸ்தத்தை அமைக்க ஆணையிடும் இடம் வரை வருகிறது. மகாபாரதத்தின் மாபெரும் பூசலின் ஒவ்வொரு இழையும் வஞ்சமும் சினமும் ஆற்றாமையுமாக மெல்லமெல்ல உருத்திரண்டு வருவதை வரைந்துகாட்டுகிறது.
பாஞ்சாலி நம் பண்பாட்டின் மையத்தில் அமைந்திருக்கும் கருவறைத்தெய்வம். தெய்வங்கள் அவற்றை தொழுது இறைஞ்சி நிற்கும் பக்தர்களின் உள்ளங்கள் தோறும் ஒவ்வொரு தோற்றம் கொள்கின்றன. அவ்வுருவங்களின் ஒட்டுமொத்தமாக பேருருவெடுக்கின்றன. பாஞ்சாலி அவளை காண்பவர்களின் விழிகள் வழியாக கொள்ளும் முழுமைத்தோற்றம் இந்நாவலின் கட்டமைப்பை உருவாக்குகிறது.
இந்நாவலின் இரு மையக்கதைமாந்தர் பூரிசிரவஸும் சாத்யகியும். மகாபாரத மூலத்தில் மிகச்சில இடங்களில் வந்துபோகும் சிற்றுருவினர். ஆனால் விரித்தெடுக்கவேண்டிய ஆழங்கள் கொண்ட உறவு அவர்களுடையது. அவர்களின் நிலமும் குலமும் பின்னணியாக விரிய அவ்வுறவின் நுட்பங்களைத் தொட்டு எடுக்கிறது இது. வெண்முரசு நாவல் தொடரின் மைய இலக்கே சொல்லப்படாத மாந்தரை, உணர்த்தப்படும் கதைகளை மீட்டு எடுப்பதே.
நித்ய சைதன்ய யதியின் தோழரும் நடராஜகுருவின் மாணவருமான சுவாமி வினய சைதன்யா என் ஆசிரியர்களில் ஒருவர். ‘அவன் சற்றும் வினயமில்லாதவன். ஆகவே பெயராவது அப்படி இருக்கட்டும் என நினைத்தேன்’ என்று நடராஜகுருவால் சொல்லப்பட்டவர். கட்டற்ற துறவு என்பதற்கான உதாரணமான அராஜகவாழ்க்கை கொண்டவர். அவ்வகையில் நித்யாவுக்கு நேர் எதிரானவர்.
ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் வினய சைதன்யா. பெங்களூர் சோமனஹள்ளி குருகுலத்தில் வாழ்பவர். கன்னட வசனகவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர். நாராயணகுருவின் காளிநாடகம் அவரது மொழியாக்கத்தில் ஒரு செவ்விலக்கியமாக அமைந்துள்ளது என அனந்தமூர்த்தி ஒருமுறை சொன்னார். [சாகித்ய அக்காதமி பிரசுரம்] மெய்ஞானமும் தத்துவமும் அராஜகம் நிறைந்த சிரிப்பாக வெளிப்படமுடியும் என்பதை அவரிடம் அறிந்தேன். இத்தருணத்தில் முகம் மலரச்செய்யும் அவரது வரிகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு என் நெஞ்சில் எழுகின்றன.
குருவின் பாதம் பணிந்து இந்நூல்
ஜெ.